ஜம்முனு வாழ காம்கேரின் OTP-198: ‘பல் உள்ளவன் பக்கோடாவை மட்டுமல்ல, பெருமலையையே சாப்பிடுவான்!’


பதிவு எண்: 929 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 198
ஜூலை 17, 2021

‘பல் உள்ளவன் பக்கோடாவை மட்டுமல்ல, பெருமலையையே சாப்பிடுவான்!’

வியாபாரத்தில் வெற்றிபெற திறமை, உழைப்பு, முதலீடு, விளம்பர உத்திகள், விற்பனை திறன் போன்றவற்றை எல்லாம்விட மிக முக்கியமான ஒரு விஷயம் தேவை. அது என்ன தெரியுமா?

ஏதேனும் ஒரு விஷயத்தை புதுமையாக கண்டுபிடித்தாலோ அல்லது தயாரித்தாலோ, அதை சிறிய அளவில் அறிமுகப்படுத்தி மெது மெதுவாக பொதுவெளியில் காட்சிப்படுத்துவதெல்லாம் இன்றைய வியாபார உலகில் செல்லுபடி ஆகாது.

நம் உழைப்பு சிறியதோ அல்லது பெரியதோ அதை பொதுவெளிக்குக் கொண்டு வரும்போதே  மிகப் பெரிய அளவில்  அறிமுகப்படுத்தி பரவலாக மக்களிடையே கொண்டு சேர்த்துவிட வேண்டும்.  இல்லையென்றால் பலமுள்ளவர்கள் அந்த விஷயத்தின் கான்செப்ட்டை திருடி தங்கள் செல்வாக்கை பயன்படுத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு உலகளாவிய புகழ் பெற்று விடுவதுடன் தாங்களே அந்த கான்செப்ட்டுக்கு உரிமையாளர் என்று சட்ட ரீதியான  அங்கீகாரமும் வாங்கி வைத்துக்கொண்டு விடுவார்கள்.

அதனால்தான் நம் குடும்பத்துப் பெரியவர்கள், ‘விஷயம் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வரும்வரை யாரிடமும் சொல்ல வேண்டாம்… எல்லோர் பார்வையும் ஒன்றுபோல் இருக்காது… நான்கு பேர் கண்பட்டு திருஷ்டியாகும்…’ என்று பொதுவாக வீட்டில் நடைபெற இருக்கின்ற நல்ல விஷயங்களுக்கே எடுத்துச் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.

வியாபாரத்தில் திருஷ்டி என்பதை நேரடியாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் செய்துகொண்டிருக்கும் புதிய முயற்சிகள் குறித்து அவை ஒரு செயல்பாட்டுக்கு வரும்வரை பேசாமல் இருப்பதும், அப்படியே செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்துவிட்டால் மிகப்பெரிய அளவில் அறிமுகப்படுத்துவதும் வியாபாரத்தின் மிகப்பெரிய பலம்.

அப்படிச் செய்யாமல், ‘இன்னும் இரண்டு வருடங்களில் இதை இப்படி செய்து முடிக்க இருக்கிறோம்’ என செல்லும் இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாலோ அல்லது மிகச் சிறிய அளவில் உங்கள் எல்லைக்குள் மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டாலோ அதைவிட பெரிய அபத்தம் வேறெதும் இருக்க முடியாது. உங்களுடைய வியாபார எதிரி நீங்களே.

‘பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான்’ என்று சொல்வார்களே அதைப்போல நம்முடைய உழைப்பில் உருவான கான்செப்ட், பொருளாதார பலத்தாலும், ஆட்கள் பலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் உயரிய இடத்தில் உள்ளவர்களால் திருடப்பட்டு மற்றவர்களின் சொத்தாக மாறிவிடும். எனவே, எந்த ஒரு சிறிய விஷயமானாலும் அதை பிரமாண்டமாக அறிமுகப்படுத்தி அது உங்கள் சொத்து என்பதை மக்கள் மனதில் பதிய வைத்துவிட வேண்டும். ஆரம்பித்து வைத்துவிட்டு அப்படியே விட்டால் அது பிறர் சொத்தாக மாறும் அபாயம் உண்டு.

திருட்டு என்பது நேரடியாக ஒரு பொருளை அபகரிப்பதைப் போல எடுத்து வைத்துக்கொள்வது மட்டும் அல்ல, நம் கான்செப்ட்டை திருடி அதற்கு வேறொரு வடிவம் கொடுத்து பிராண்ட் ஆக்குவதும் ஒரு வகை திருட்டுதான். வியாபாரம்தான் நம் நோக்கம் என்றால் நம் உழைப்பை எந்த வகையிலும் பிறர் திருடுவதற்கு நாம் வாய்ப்புக் கொடுக்கக் கூடாது.

இந்த விஷயத்தில் கவனமாக இருந்தால் வியாபாரத்தில் பாதி வெற்றி பெற்றதற்கு சமம்.

‘பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுவான்!’ – இது பழசு.  ‘பல் உள்ளவன் பெருமலையையே சாப்பிடுவான்’- இது புதுசு. கவனம்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 811 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon