ஜம்முனு வாழ காம்கேரின் OTP-204: ‘ஸ்டேட்டஸ்’ சாமி!

பதிவு எண்: 935 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 204
ஜூலை 23, 2021

‘ஸ்டேட்டஸ்’ சாமி!

இப்படி அழைக்கப்படும் அந்தப் பெரியவருக்கு 70 வயதிருக்கும். ஆனால் இது அவர் நிஜப் பெயர் கிடையாது. பின் ஏன் அவருக்கு ‘ஸ்டேட்டஸ்’ சாமி என பெயர் வந்தது? ‘ரொம்ப பந்தாவான ஆசாமியாக இருப்பாரோ, அலட்டல் பேர்வழியோ’ என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். மிகவும் நல்லவர். பின் ஏன் அந்தப் பட்டப் பெயர்?

அவர் அந்த குடியிருப்பில் வசிக்கிறார். ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள். மகள் வெளிநாட்டிலும், மகன் உள்நாட்டிலும் திருமணம் ஆகி செட்டில் ஆகியுள்ளனர். ஆனாலும் இவரும் இவர் மனைவியும் யாரிடமும் சென்றிருக்காமல் தனித்திருக்கிறார்கள். மனஸ்தாபமெல்லாம் கிடையாது. ஆனாலும் முடிந்தவரை தனிக்குடித்தனம் செய்துபார்க்கலாமே  என்று நினைத்திருக்கிறார். அதை வெளிப்படையாக சொல்லவும் செய்வார்.

பார்ப்பதற்கு ஐம்பது வயதுதான் சொல்ல முடியும். பயங்கர சுறுசுறுப்பு. காலை ஆறு மணிக்கெல்லாம் அந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள பூங்காவில் அரை மணி நேரம் வாக்கிங். பின்னர் வீட்டுக்குச் சென்று ஆன்லைனில் சில தினசரி பத்திரிகைகளை வாசித்து விட்டு குளித்து பூஜை செய்து காலை உணவாக கோதுமை ரவா கஞ்சி அல்லது சத்து மாவு கஞ்சி. பிறகு 9 மணிக்கு அருகில் உள்ள விநாயகர் கோயில் சுவாமி தரிசனம். ஒரு பைக் வைத்திருக்கிறார். எங்கு சென்றாலும் அதில்தான் செல்வார்.

பத்து மணிக்கு வீடு திரும்பி மதியம் சாதம், எல்லா காய்கறிகளையும் போட்டு ஒரு கூட்டு. பொறியல் செய்யும் நாட்களில் ரசமோ அல்லது சாம்பாரோ செய்துகொள்வார்கள். யாருக்கு முடிகிறதோ அவர்கள் சமைப்பார்கள்.

மதியம் சாப்பிட்டு ஒருமணி நேரம் ஓய்வெடுத்து எழுந்து இஞ்சி டீ போட்டுக் குடிப்பார். டிவியில் செய்திகள் பார்ப்பார். பிறகு மொட்டை மாடியில் அரை மணி நேர மாலை வாக்கிங்.

குளித்து விபூதி இட்டுக்கொண்டு டிவியிலோ அல்லது டியூபிலோ சுலோகங்கள் போட்டுக் கேட்டபடி விளக்கு ஏற்றி நமஸ்கரிப்பார். இரவு டிபனுக்கு இட்லி அல்லது தோசை. வீட்டில் தாங்களே  அரைத்த மாவைத்தான் பயன்படுத்துவாகள். கடையில் வாங்குவதில்லை.

பிறகு பிள்ளைகள் மாற்றி மாற்றி போன் செய்வார்கள். அவர்களுடன் பேசிவிட்டு மொபைலில் வாயால் பேசி ரெகார்ட் செய்யும் நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னம்பிக்கை வார்த்தைகளை டைப் செய்வார். எதில் இருந்தும் பார்த்து எழுத மாட்டார். தானாகவே தன் வாழ்க்கை அனுபவத்தில் தான் பின்பற்றும் தர்மங்களை  100 வார்த்தைகளுக்குள் டைப் செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பதிவிடுவார். சில நேரங்களில் கவிதைகளும் பதிவிடுவார். கவிதையும் அவரது சொந்த சரக்குதான். படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது என்ற கதையெல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது.

அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸுக்கு அந்தக் குடியிருப்புவாசிகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மெகா ரசிகர்கள். தினமும் இரவு 9 மணிக்கு ஸ்டேட்டஸ் போடுவார். அவர் ஸ்டேட்டஸ் போட்ட அடுத்த சில நிமிடங்களில் பார்வையாளர்கள் ஐம்பது அறுபதைத் தொட்டுவிடும். யார் யார் பார்க்கிறார்கள் என மொபைலை எடுத்துப் பார்த்துக் கொண்டிருப்பதையே ஒரு பொழுதுபோக்காக செய்வார். இப்படியாக கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக தினந்தோறும் ஒரு ஸ்டேட்டஸ் எழுதுவது அவரது அன்றாடப் பணிகளுள் ஒன்றானது.

அப்படி இப்படி என தினமும் இருநூறில் இருந்து இருநூற்று ஐம்பது பேர் பார்த்துவிடுவார்கள் அவரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை. அதுவே அவருக்கு நல்ல ஆரோக்கியமான மனநிலையை கொடுத்து வருவதாகவும் நம்பினார்.

தன் மனக்கவலைகள், உடல் சோர்வுகள், அக்கம் பக்கம் பிரச்சனைகள், குடும்பத்தினருடன் ஏதேனும் மனஸ்தாபங்கள், பிள்ளைகளுடனும், பேரக் குழந்தைகளுடனும் போனில் நடந்த சுவாரஸ்யமான உரையாடல்கள்  என தினந்தோறும் அவர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் இருந்தே வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் நேர்மறையாக கருத்துக்களைப் பதிவிடுவார். சொந்த கதை சோகக் கதையெல்லாம் கிடையாது. எல்லாமே அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பொதுவாக எழுதுவார்.

அதில் பல விஷயங்கள் அவருக்கே ஆறுதல் அளிப்பதாக இருக்கும். படிப்பவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும். அவர்கள் ஏதேனும் தவறு செய்திருந்தாலும் இவரது ஸ்டேட்டஸ் பதிவுகளில் இருந்தே உணர்ந்து மாறவும் செய்திருக்கிறார்கள்.

இப்படி அன்றாடம் நடக்கின்ற நிகழ்வுகளுக்கு ஏற்ப ஸ்டேட்டஸ் போடுவது அவரது எல்லா கவலைகளுக்கும் மருந்தாக அமைந்தது. தன் ஸ்டேட்டஸ் பதிவினை படிக்கும் ஒவ்வொருவருமே தன் கவலைகளுக்கு மருந்திடுவது போல உணர ஆரம்பித்தார்.

தன் நல்லது கெட்டதுகளுக்கு துணையாக தன்னுடன் 200, 250 நபர்கள் இருப்பதைப் போன்ற தைரியம் அவருக்குக் கிடைத்து வந்தது.

இதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் யாருக்கேனும் ஏதேனும் சொல்ல நினைத்தால் அது அறிவுரையாகவோ அல்லது ஆதங்கமாகவோ எதுவாக இருந்தாலும் மென்மையாக தன் ஸ்டேட்டஸ் பதிவுகள் மூலம் வெளிப்படுத்துவதால் அவரை எல்லோருக்குமே பிடிக்க ஆரம்பித்தது.

‘குட்மார்னிங் சார், நேற்று உங்க ஸ்டேட்டஸ் கிளாசிக்…’ என்று கார் ஜன்னலைத் திறந்து பாராட்டிவிட்டுச் செல்வார்கள் அந்த  குடியிருப்புவாசிகள் என்றால் பாருங்களேன், அவருக்கான ரசிகர் வட்டத்தை எப்படி கட்டமைத்துக்கொண்டிருக்கிறார் என்று.

இரவு 9 மணி ஆகிவிட்டால் அவர் என்ன ஸ்டேட்டஸ் போடப் போகிறார் என பார்ப்பதே அவர் போன் தொடர்பில் இருப்பவர்கள் பலரின் வழக்கமாகிப் போனது.

இப்படி அவர் ஸ்டேட்டஸ் மூலம் பதிவிடும் கருத்துக்கள் நேரடியாக சொல்லும் அறிவுரைகள், ஆலோசனைகள் இவற்றை எல்லாம்விட சக்தி வாய்ந்ததாக இருந்தது.

காரணம், நீங்களே ஒரு விஷயத்தை காதால் கேட்டுப் பாருங்கள் அல்லது அதையே ஒரு காகிதத்தில் எழுதியோ அல்லது கம்ப்யூட்டர் / மொபைலில் டைப் செய்தோ படித்துப் பாருங்கள். இந்த இரண்டில் எது உங்கள் மனதைத் தொடுகிறது என்று கவனியுங்கள்.

நிச்சயம் கண்களால் பார்த்துப் படித்து மனதுக்குள் உள் வாங்கிக்கொள்வதுதான் உங்கள் மனதைத் தொடுவதாக அமையும். அதைத்தான் அந்தப் பெரியவரும் தன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் செய்து வந்தார்.

ஒருநாள் அவரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் 9 மணிக்கு வரவில்லை. அவரது ரசிகர்களுக்கு மனதுக்குள் கலக்கமாக இருந்தது. இரவு 11 மணி அளவில் ‘அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்’ என அவர் மகள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டார்.

காலையில் அவர் வாட்ஸ் அப்பில் இருநூறுக்கும் மேற்பட்ட நலன் விசாரிப்புகள். ‘டேக் கேர்’, வாழ்த்துகள், உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் அப்படி இப்படி என அன்பின் பல பரிமாண பரிமாற்றங்கள்.

அவரது மகள் அதை அவரிடம் காண்பிக்க உருகிப் போனார். விரைவிலேயே குணம் அடைந்து தேறினார். வீட்டுக்கு வந்ததும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ‘அன்பு ஒன்றே மாறாதது’ என்ற கோணத்தில் பதிவிட்டார்.

அடுத்த சில தினங்களில் அவரையும் அவர் மனைவியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார் அவர் மகள். வீட்டையும் விற்பதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.

எங்கிருந்தால் என்ன ‘ஸ்டேட்டஸ்’ சாமியின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் வழக்கம்போல் தொடர்ந்தன.

ஒரு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், நூறு வார்த்தைகளில் உணர்வின் வெளிப்பாடு ஒருவருக்கு வாழ்க்கையின் பிடிமானமாகவும், பலருக்கு உத்வேகமாகவும் இருப்பது எத்தனை அழகான விஷயமாக இருக்கிறது. தொழில்நுட்பம் பேரழகுதான், அதை சரியாகப் பயன்படுத்தும்வரை. நரகம், தவறாக பயன்படுத்த ஆரம்பித்தால்.

அது சரி ‘ஸ்டேட்டஸ்’ சாமியின் பெயர் என்ன என்று சொல்லவே இல்லையே என கேட்கிறீர்களா?

எனக்கும் தெரியாது. அவர் ‘ஸ்டேட்டஸ்’ சாமியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதுவே அழகான பெயராக இருக்கிறதல்லவா?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 880 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari