ஜம்முனு வாழ காம்கேரின் OTP-205: சிலர் வைக்கும் சாம்பார் மட்டும் மணப்பது ஏன்?

பதிவு எண்: 936 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 205
ஜூலை 24, 2021

சிலர் வைக்கும் சாம்பார் மட்டும் மணப்பது ஏன்?

வெற்றி பெற்ற ஒவ்வொரு சாதனையின் அல்லது சாதனையாளரின் பின்னணியிலும் திறமை, உழைப்பு, முதலீடு இவை எல்லாவற்றையும் மீறி ஏதேனும் ஒரு சிறப்பு விஷயம் இருக்கும். அந்த சிறப்பு விஷயத்தை ஆங்கிலத்தில் Flavour எனலாம். உழைப்பை தூக்கிக் காட்டும் உன்னத விஷயமாக இருப்பதால் அதை தமிழில் ‘திறன் கூட்டும் பொருள்’ எனலாம்.  அது என்ன என்று அப்பட்டமாக வெளியில் தெரியாது. உன்னிப்பாக கவனித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

உதாரணத்துக்கு எல்லோருமே சாம்பார் வைப்பார்கள். ஒரு சிலர் வைக்கும் சாம்பார் மட்டும் அத்தனை சுவையாக இருக்கும். எல்லோரும் பயன்படுத்தும் உப்பு, புளி, காரம் போன்றவைதான் அதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனாலும் சுவையும் வாசனையும் ஊரைக் கூட்டும்.

காரணம் அவர்கள் அத்துடன் சிறிய வெங்கயாம், தக்காளி, ஊற வைத்த கசகசா போன்றவற்றை அரைத்து சாம்பாரை இறக்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பு அதில் கலந்து கொதிக்க வைத்து இறக்குவார்கள். அதில் அவர்கள் சேர்த்த பொருட்கள் வெளிப்படையாக தெரியாது. ஆனால் எல்லோரும் அந்த சாம்பாரை இரண்டுமுறை கேட்டு வாங்கி சாம்பார் சாதம் சாப்பிடுவார்கள். அந்த சாம்பாரின் ஈர்ப்புக்குக் காரணமே அவர்கள் சேர்த்த சிறிய வெங்காயம் + தக்காளி + கசகசா தான்.

இதுதான் எல்லா தயாரிப்புகளும் ஒன்று போலவே இருந்தாலும், ஒருசில மட்டும் சந்தையில் வெற்றிபெறுவதற்கான காரணம்.

1992. நம் நாட்டில் கம்ப்யூட்டரின் அறிமுகம் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. சாஃப்ட்வேர் நிறுவனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த காலகட்டத்தில் நாங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனத்தைத் தொடங்கிய போது மற்ற நிறுவனங்களைவிட எங்கள் நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதற்கும் ஒரு ரகசிய கூட்டுப் பொருள்தான் காரணம்.

என்னவென்று சொல்கிறேன். கேளுங்கள்.

வங்கிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் இப்படி எல்லா பணி இடங்களிலும் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தி அவர்களின் அன்றாடப் பணிகளின் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவாக்கி பேப்பரில் பராமரிக்கும் தகவல்களை கம்ப்யூட்டர் ஷீட்டுகளில் பிரிண்ட் எடுத்தும், ஃப்ளாப்பிகளில் சேகரித்தும் அத்தனையையும் கம்ப்யூட்டர்மயமாக்க வேண்டும் என்பதே.

ஆனால் நாங்கள் நினைத்ததைப் போல அது அத்தனை எளிதான காரியமாக இல்லை. காரணம் கம்ப்யூட்டர் என்பதே படித்தவர்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு சாதனம், ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே கம்ப்யூட்டரை பயன்படுத்த முடியும் என்கின்ற நம்பிக்கை. இது இரண்டையும் உடைத்தெறியாமல் தொழில்நுட்பத்தை பரவலாக்க முடியாது என்று யோசித்தேன்.

கம்ப்யூட்டரை மொழியுடன் இணைத்து யோசித்தேன். கம்ப்யூட்டரில் டைப் செய்தால் தமிழில் எழுத்துக்கள் வெளிப்பட்டால் எப்படி இருக்கும் என கற்பனை செய்தேன். ஒரு வருடம் ஆராய்ச்சி செய்து (R&D) எங்கள் நிறுவனத்துக்காக ஒரு ஃபாண்ட் ஒன்றை உருவாக்கினேன். அப்போது இண்டர்நெட் எல்லாம் நம் நாட்டில் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

எங்கள் நிறுவன தமிழ் ஃபாண்ட்டை கம்ப்யூட்டரில் நிறுவி அந்தந்த பணி சூழலுக்கு ஏற்ப சாஃப்ட்வேர்களை தயாரித்து கம்ப்யூட்டரையும் நாங்களே அசெம்பிள் செய்து மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து மெல்ல மெல்ல எங்களைச் சுற்றி இயங்கிக்கொண்டிருந்த மளிகைக்கடை, மெடிக்கல் ஷாப் முதற்கொண்டு வங்கிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் மயமக்கினோம்.

பின்னாளில் தமிழுக்கு மட்டுமில்லாமல் இந்தியாவில் எங்கெல்லாம் எங்கள் சாஃப்ட்வேர் பயன்பாட்டுக்கு வருகிறதோ அங்கெல்லாம் அவரவர்கள் தாய்மொழியை தேர்ந்தெடுத்துக்கொண்டால் அந்த மொழியில் சாஃப்ட்வேர்கள் இயங்குமாறு வடிவமைத்தோம்.

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோருக்கு அதை அவர்கள் மனதுக்கு நெருக்கமாக என்ன தேவை என்று யோசித்தபோது மொழி என்பதுதான் என் மனதுக்குள் தோன்றி வழிநடத்திய ‘திறன் கூட்டும் பொருள்’.

எங்கள் நிறுவனத்தின் அஸ்திவாரமே மொழி எனும் ‘திறன் கூட்டும் பொருள்’.

ஆனால் அது வெற்றிபெரும் என்று நினைத்தெல்லாம் நான் அந்த முயற்சியில் இறங்கவில்லை. நான் படித்தது கம்ப்யூட்டர் சயின்ஸ். என் பணியை அதன் போக்கில் செய்துகொண்டிருந்தேன். சோர்வில்லாமல் உழைத்துக்கொண்டிருந்தேன்.

சாஃப்ட்வேர் தயாரிப்பதுதான் எங்கள் முதன்மைப் பணி என்றாலும் புத்தகங்கள், ஆடியோ, வீடியோ, வெப்சைட், மொபைல் ஆப் என அத்தனையிலும் தொழில்நுட்பத்தைப் புகுத்தி நாங்கள் இயங்கும் துறையில் நிறைவாகவே பணி செய்துகொண்டிருக்கிறோம்.

இப்படியாக தமிழகத்தின் (ஏன் இந்தியாவில்கூட) மூலை முடுக்கெல்லாம் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்த்ததில் எங்கள் பங்கு(ம்) அதிகம் உண்டு.

இப்படி ஒவ்வொரு வெற்றியையும் உற்று நோக்கினால் அதன் பின்னணியில் ஏதேனும் ஒரு திறன் கூட்டும் பொருள் அஸ்திவாரமாக இருக்கும்.

நான் நிறுவனம் தொடங்கியது 1992. 2000-ம் ஆண்டு ஜெயா டிவிக்கு நான் கொடுத்த நேர்காணலை இணைத்துள்ளேன். இப்போது நடப்பது 2021. இந்த 28 வருடகாலத்தில் நாம் எப்படியெல்லாம் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்பதை தெரிந்துகொள்ளலாம். நம் மக்களுக்கு நல்ல சாலையைப் போட்டுக் கொடுத்துவிட்டால் அவர்கள் அதில் தங்கள் செளகர்யங்களுக்கு ஏற்ப அவரவர்களுக்கு ஏற்ற வாகனங்களில் வசதியாகப் பயணிப்பார்கள் என்பது சர்வ நிச்சயம்.

நானும் எங்கள் காம்கேரும் அந்த சாலையை அழகாகவும் பொருத்தமாகவும் அமைத்துக் கொடுத்ததில் ஒரு சக்தியாக இருந்ததில் பெருமைப்படுகிறோம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 570 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari