ஜம்முனு வாழ காம்கேரின் OTP-203: பணம் சம்பாதிக்க ஆசைப்படுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?

பதிவு எண்: 934 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 203
ஜூலை 22, 2021

பணம் சம்பாதிக்க ஆசைப்படுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?

நேற்று தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஒரு பள்ளி ஆசிரியர் போன் செய்திருந்தார். அவர் ஒரு கவிதை புத்தகம் வெளியிட்டிருப்பதாகவும், அதை இப்போது இ-புத்தகமாக வெளியிட வேண்டும் என்று விரும்புவதாக சொல்லி அதற்கான வழிமுறைகளைக் கேட்டிருந்தார்.

கவிதைகள் எது குறித்தது, எத்தனைப் பக்கங்கள், படங்கள் இருக்குமா, கலர் பிரின்ட்டா கருப்பு வெள்ளையா என்பது போன்ற அடிப்படை விவரங்களைக் கேட்டறிந்தேன்.

அவர் வெளியிட்டிருந்த அச்சு புத்தகத்தின் சில பக்கங்களை ஸ்கேன் செய்து எனக்கு அனுப்பச் சொல்லி இருந்தேன். சில விநாடிகளில் அனுப்பினார். இன்டர்நெட்டில் இருந்து படங்களை எடுத்துப் பயன்படுத்தி இருந்தார். கவிதைகள் வழக்கம்போல் இருந்தன.

கலர் பிரின்ட்டில், 100 பக்கங்கள் இருந்தன. யார் பதிப்பாளர், எப்படி விற்பனை செய்கிறீர்கள் என கேட்டேன். தானே தன் சொந்த செலவில் சில நூறு புத்தகங்களை அச்சிட்டதாகவும், தன் பள்ளி ஆசிரியர்களிடம் விற்பதாகவும் கூறினார். எல்லாவற்றையும் விற்பனை செய்துவிட்டீர்களா என கேட்டேன். இல்லை, விற்பனை  செய்தபடி இருக்கிறேன் என்றார்.

‘எப்படி புத்தகம் வெளியிடுவதில் ஆர்வம் வந்தது?’ என கேட்டதற்கு ‘கொரோனா காலத்தில் வீட்டுக்குள் அடைந்திருந்து என்ன செய்வதென்றே தெரியவில்லை… ஏதாவது செஞ்சு நாலு காசு பார்ப்போம் அப்படின்னுதான்’ என்று சொன்னவரை ஆச்சர்யமாகப் பார்த்தேன்.

‘புத்தகம் வெளியிட்டால் நாலு காசு பார்க்கலாம்’ என்று அவர் சொன்னதை நினைத்து சிரித்துக்கொண்டேன்.

முழுக்க முழுக்க கலரில் 100 பக்கமுள்ள ஒரு அச்சுப் புத்தகத்தை வெளியிட நிச்சயம் அதிகம் செலவெடுத்திருக்கும் என்பது எனக்குத் தெரியும் என்பதால் ‘இந்தக் கவிதைகள் நன்றாக உள்ளன. ஆனால் யார் காசு கொடுத்து புத்தகங்களை வாங்குவார்கள், அதுவும் இப்போது இ-புத்தகமாக வேறு கொண்டுவர ஆசைப்படுவதாக சொல்கிறீர்கள்…’ என்று பொதுவான என் அக்கறையில் கேட்டேன்.

அதற்கு அவர் சொன்ன காரணத்தில் வாயடைத்துப் போனேன்.

‘எனக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இரண்டாம்பட்சம்தான். நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். அதுதான் என் நோக்கம்…’

முதலில் நாலு காசு பார்க்கலாம் என்ற ஆசையில் புத்தகம் வெளியிட்டதாக சொன்னவர் நான் அவரிடம் தொடர்ச்சியாக அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்ட போது நான் அவரை பேட்டி எடுப்பதாக நினைத்துக்கொண்டாரோ என்னவோ ‘பணம் சம்பாதிப்பது நோக்கம் அல்ல’ என்று முடித்தார்.

இதற்கெல்லாம் காரணம், பொதுவாகவே மீடியாக்களில் பேட்டி எடுக்கும்போது அந்த பேட்டி மக்கள் மனதை தொடுவதாக இருப்பதற்காக பேட்டிக் கொடுப்பவர்களின் திறமையை முன்னிருத்துவதுடன் ‘சமுதாயத்துக்கு சேவை செய்வதுதான் நோக்கம்’ என்ற பொருளில் பேட்டிக் கொடுப்பவர் சொல்லாவிட்டாலும் பேட்டி எடுப்பவர் அப்படிப்பட்ட கோணத்தில் பேசி பேட்டிக் கொடுப்பவர்கள் சொன்னதாக தலைப்புச் செய்தியாக்கி விடுவார்கள்.

அதனால்தான் +2 தேர்வுகளில் முதலாவதாக வந்த மாணவர்கள் பேட்டிக் கொடுக்கும்போது ‘மருத்துவம் படித்து முடித்து கிராமத்துக்குச் சென்று பணியாற்ற வேண்டும். அங்குள்ள ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சைகள் அளித்து சேவை செய்வதே என் நோக்கம், பணம் சம்பாதிப்பது என்பது இரண்டாம்பட்சமே’ என்று சொல்வதை நாம் பார்த்திருப்போம். நோக்கம் என்னவோ சரிதான். பல இலட்சங்கள் செலவழித்து மருத்துவம் படிக்கும் மாணவர்கள் முதலில் தங்கள் படிப்புக்காக தங்கள் பெற்றோர் வாங்கிய கடன்களை அடைக்க வேண்டும். அதற்குப் பிறகு வீட்டுக்குத் தேவையான அடிபப்டை விஷயங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். மருத்துவத்தில் முறையாக அனுபவம் பெறுவதற்கே சில வருடங்கள் ஆகும். அந்த காலகட்டத்தில் கைராசியான மருத்துவர் என்ற பெயரையும் பெற வேண்டும். இப்படி எத்தனையோ இருக்க, படித்து முடித்துவிட்டு நேராக கிராமத்துக்குச் சென்று இலவச சேவை செய்ய வேண்டும் என்று எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்து ஒப்பிக்கச் சொல்வதைப் போல அத்தனை பேரும் ஒரே பதிலை சொல்வதுதான் வியப்பு. ஆனால் இப்படிச் சொல்பவர்களில் எத்தனை பேர் அவர்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்றுகிறார்கள் என்பது தான் கேள்விக்குறி.

இதுபோல ஏழ்மையில் வாடும் சிலரை சில பிரமாண்டமான  ஷோக்களுக்கு வரச் செய்து அவர்கள் வெற்றி பெற மீடியாக்களே வழிவகை செய்து கொடுத்து இலட்சக்கணக்கில் பரிசையும் அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள். இதுவரை நல்ல விஷயம்தான். ஆனால் அந்த பரிசுத்தொகையை அவர்கள் அப்படியே ஆதரவற்ற இல்லத்துக்கு நன்கொடை அளித்துவிடுவதாகவோ அல்லது தாங்கள் படித்த பள்ளியைச் செப்பனிட நன்கொடை அளித்துவிடுவதாகவோ காண்பித்து அவர்களை உச்சாணி கொம்பில் உட்கார வைப்பார்கள்.

அவர்களோ மூன்று வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் உள்ளவர்கள். பரிசுத் தொகையில் அவர்கள் வாழ்வாதாரத்துக்கு ஏதேனும் செய்துகொள்வதாகவும் அதில் ஒரு சிறு பகுதியை நன்கொடை அளிப்பதாகவும் சொன்னால் அது இயல்பு. அதைவிட்டு மிகப் பெருந்தன்மையாக தாராள மனப்பான்மை உள்ளவர்களாக கொடை உள்ளம் கொண்டவர்களாக அவர்களை காண்பிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களின் பரிசுத் தொகையை தானமாக கொடுக்க வைத்து ‘ஏழ்மையிலும் எத்தனை உயரிய உள்ளம் கொண்டவர்கள்’ என கொண்டாடுவதுதான் இங்கே ஆச்சர்யக் குறி.

ஆக, பரிசாகப் பணம் கிடைத்தால்கூட அதை நம் சொந்த செலவுக்கு பயன்படுத்தக் கூடாது. தானம் செய்துவிட வேண்டும். அப்போதுதான் நல்லவர் பட்டம் கிடைக்கும் இங்கே.

அண்மையில் நகைச்சுவையாக வீடியோவில் பேசி நம் எல்லோர் மனதையும் கவர்ந்த ஏழுவயது சிறுவனின் தந்தையின் நேர்காணலை படித்தேன்.

குழந்தைகளை அவர்கள் போக்கில் வளர விட வேண்டும், அவர்களிடம் நம் கனவுகளை திணிக்கக் கூடாது, அவர்கள் மனநலன் பாதிக்கப்படும் அப்படி இப்படி என ஏராளமான விமர்சனங்கள். ஆனால் என்னைப் பொருத்த வரை அந்த சிறுவனின் திறமைகளை இத்தனை அழகாக வடிவமைத்து கொண்டு செல்லும் அவனுடைய பெற்றோருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் அவனது பெற்றோரை குறை சொல்ல மாட்டேன்.

ஏன் என்றால், சில குழந்தைகளுக்கு இயல்பாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தும் திறன் இருக்கும். சில சிறுவர்களுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லி வழிகாட்டினால்தான் தங்கள் திறமை என்ன என்றே தெரிந்து கொள்வார்கள். பொத்தாம் பொதுவாக எல்லா குழந்தைகளையும் அவர்கள் போக்கில் வளர விடுவது என்பது சாத்தியம் கிடையாது. காரணம் அப்படியே அவர்கள் போக்கில் விட்டால் ஏதேனும் ஒரு பழக்கத்துக்கு  ‘அடிக்ட்’ ஆகி விடுவதும் உண்டு. உதாரணத்துக்கு யு-டியூப் பார்த்துக்கொண்டே இருப்பது, ஆன்லைன் கேம்ஸ், கார்ட்டூன் சேனல்   என எதை தொடர்ச்சியாக செய்கிறார்களோ அதை அப்படியே தொடர்ச்சியாக செய்து அதற்கு முழுமையாக அடிமையாகிவிடுவதும் உண்டு. அதுபோன்ற குழந்தைகளுக்கு அவ்வப்பொழுது கண்காணித்து அவர்கள் திறமைகளை முதலில் பெற்றோர் இனம் கண்டுகொண்டு பின் அதை தன் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்தெடுத்து அவர்களை வடிவமைக்க வேண்டும்.

எதையும் கட்டாயப்படுத்தாமல் அவர்கள் போக்கில் அவர்கள் திறமைகளை வெளிப்படுத்த சூழலை ஏற்படுத்தித் தருவதில் தவறே இல்லை.

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

அந்த சிறுவனின் அப்பா அந்த பேட்டியில், ‘வீடியோக்கள் மூலம் காசு சம்பாதிக்கும் ஆசை எல்லாம் இல்லை. நகைச்சுவையை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கோடு தான் செய்தோம்…’ என்று சொல்லி இருந்தார்.

இந்த இடத்தில்தான் எனக்கு சின்னதாக ஒரு நெருடல். அதாவது பணம் சம்பாதிப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? அதை ஒரு குற்றமாக உணர்வதால்தானே  ‘காசு சம்பாதிக்கும் ஆசை எல்லாம் இல்லை’ என்று சொல்கிறார்.

சிறுவனின் உழைப்பு, அவன் உடை மற்றும் அலங்காரங்களுக்கு அவன் அம்மா எடுக்கும் முயற்சிகள், ஷீட்டிங், எடிட்டிங், கம்ப்யூட்டர், மொபைல், மின்சாரம் குறிப்பாக அப்பா அம்மா மற்றும் அந்த சிறுவன் என மூன்று பேரின் அர்ப்பணிப்புக்கான நேரம் என எத்தனையோ விஷயங்கள் பொருளாதாரம் சார்ந்தே இருக்க, ‘காசு சம்பாதிக்கும் ஆசை எல்லாம் இல்லை’ என்று எப்படி சொல்ல முடியும்? ஆரம்பத்தில் வீடியோ நிறைய பார்வையாளர்களை சென்றடைய வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருக்கலாம். ஆனால் நிறைய பார்வையாளர்களைப் பெற்ற பிறகு அதன் மூலன் வருமானமும் வந்தால் மட்டுமே தொடர்ச்சியாக ஈடுபட மனம் லயிக்கும். இதுதான் இயற்கையும்கூட.

இதுபோல சாதனை செய்பவர்களும் சரி, மெகா ஷோக்களில் பங்கேற்று லட்சங்களில் பரிசு பெறுபவர்களும் சரி, நாட்டிலேயே முதலாவதாக வரும் படிப்பாளிகளும் சரி ஏன் பணம் சம்பாதிப்பதை ஏதோ ஒரு குற்றமாக பார்க்கிறார்கள்?

பணம் மிக அவசியம். நாம் நன்றாக இருந்தால்தான் பிறருக்கு உதவ முடியும். நாமே நான்கு பேரிடம் கடன் வாங்கும் நிலையில் இருந்துகொண்டு எங்கே பிறருக்கு உதவுவது?

அந்தப் பணம் நேர்வழியில், யாரையும் புண்படுத்தாத வண்ணம், தங்கள் உழைப்பால் வருமேயானால் அது தானாகவே தன்னைப் பெருக்கிக்கொண்டு பலருக்கும் உதவி செய்யும் வகையில் தனக்கான வழியை அமைத்துக்கொள்ளும். குறுக்கு வழியில்தான் பணம் சம்பாதிக்க ஆசைப்படக் கூடாது. அது நம்மை எந்த நேரத்திலும் புதைகுழிக்குள் தள்ளிவிடும்.

ஆக, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ‘பணம் சம்பாதிக்க ஆசைப்படுவது பாவகரமான செயல் அல்ல’.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 1,268 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon