ஜம்முனு வாழ காம்கேரின் OTP-229: ‘என்ன கனம்?’ என நம் உடல் நக்கல் அடிக்காமல் இருக்க! (Sanjigai108)

பதிவு எண்: 960 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 229
ஆகஸ்ட் 17, 2021 | காலை: 6 மணி

‘என்ன கனம்?’ என நம் உடல் நக்கல் அடிக்காமல் இருக்க…

நம்மால் எந்த சூழலையும் சமாளிக்க முடியும் அளவுக்குதான் இயற்கை நம்மை கட்டமைத்துள்ளது. ஆனால் நாம்தான் அதை சரியாக புரிந்துகொள்ளாமல் தவிக்கிறோம்.

உதாரணத்துக்கு, வாழ்க்கையில் கொடூரமான நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருவோரை பார்க்கும்போதோ அல்லது விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தோரைக் காணும்போதோ அல்லது தீராத கடன் தொல்லையில் இருப்போர் குறித்து கேள்விப்படும்போதோ  ‘நமக்கெல்லாம் இதுபோன்ற கஷ்டங்கள் வந்தால் தாங்கவே முடியாதுப்பா, போய் சேர்ந்துவிடுவோம்…’ என்று பயந்துகொண்டே நம்மில் பெரும்பாலானோர் சொல்வார்கள். ஆனால் உண்மையில் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நம் எல்லோராலும் எதிர்கொள்ள முடியும். அதற்கேற்றவாறு நம் உடலும், மனமும் தானாகவே தன்னை சற்று உருமாற்றி வடிவமைத்துக்கொள்ளும் என்பதுதான் இயற்கை. சூழலுக்கு ஏற்ப செயல்படும் பக்குவமும் கிடைத்துவிடும்.

ஒருசிலர் சின்ன தலைவலிக்கே வீட்டை இரண்டு செய்துவிடுவார்கள். சிலர் கையிலோ காலிலோ அடிபட்டு நகரவே முடியாமல் இரண்டு மூன்று மாதங்கள் படுக்கையில் விழுந்தால்கூட அசால்ட்டாக அதைக் கடந்து சென்று கொண்டே இருப்பர்.

ஆனால் நம்மிடம் உள்ள மிகப் பெரிய பிரச்சனை என்ன தெரியுமா? நம்முடைய கஷ்டங்கள் அல்ல. அதை சுமக்கும் முறைதான்.

பயணத்துக்குத் தயாராகிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய பொருட்கள் அத்தனையையும் ஒரே பையில் வைத்துவிடக் கூடிய அளவுக்குதான் பொருட்கள் இருக்கும். அதற்காக அத்தனையையும் ஒரே பையில் வைத்தால் அதன் கனம் அதிகமாகிவிடும். தூக்கிச் செல்லவே முடியாது. அதே பொருட்களை இரண்டு பைகளில் பிரித்து லாவகமாக அடுக்கினால் சுமப்பது சுலபம். இரண்டு கைகளும் சரிசமமான கனத்தைத் தாங்குவதால் உடல் வலியும், கைவலியும் இருக்காது.

இப்படித்தான் நம்முடைய பிரச்சனைகளும். யாருக்குத்தான் பிரச்சனை இல்லை. எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை எப்படி சுமக்கிறோம் என்பதில்தான் சூட்சுமம்.

பிரச்சனைகளை எதிர்கொள்ளும்விதம், அதை கடந்துசெல்ல எடுக்கும் முயற்சிகள், மெல்ல மெல்ல அதில் இருந்து வெளிவர தயாராகும் பக்குவம் இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியம் அதை சுமந்து செல்லும் லாவகத்தைக் கற்க வேண்டும்.

சதா பிரச்சனைகளை மனதுக்குள் தூக்கி சுமந்து கோண்டே இருந்தால் நம் உடல் எடையைக் கூட நம்மால் தாங்க முடியாது. ‘என்ன கனம்?’ என்று நம் உடலே நம்மைப் பார்த்து நக்கல் அடிக்கும்.

ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ அல்லது மனம் வெறுமையாகிப் போனாலோ மாறுதலுக்கு வேறொரு ஊருக்குப் பயணம் செல்லச் சொல்வார்கள். பயணத்துக்கு பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்கும் சக்தி உண்டு. ஆனால் வேறொரு ஊருக்குச் சென்றாலும் நம் மனதில் நம் பிரச்சனைகளையும் தூக்கி சுமந்து சென்றால் உலகத்தின் எந்த மூலைக்கு ஓடினாலும் நம்மால் நிம்மதியாக வாழவே முடியாது.

கஷ்டங்களை வலி எடுக்கும் நேரத்தில் மட்டுமில்லாமல் நீண்ட நாட்களுக்கு மனதில் தூக்கி வைத்துக்கொண்டு துக்கப்படுவதைப் போல, சந்தோஷங்களை நம்மில் பெரும்பாலானோருக்கு தூக்கி சுமக்கத் தெரியவதில்லை.

வாழ்நாள் முழுவதற்குமான சந்தோஷங்கள் பிரவாகமாகப் பெருக்கெடுத்து நம்மை தஞ்சமடைந்தாலும் அதை தேக்கி வைத்துக்கொண்டு காலம் முழுவதும் கொண்டாடுவதில்லை. ஆனால் கஷ்டங்கள் ஒரு சிறு துளி வந்தாலும் அதை வாழ்நாள் முழுக்க மனதில் வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறோம். அதையே ஒரு டெம்ப்ளேட் ஆக்கிக்கொண்டு திண்டாடுகிறோம்.

சந்தோஷங்களை சுமக்கப் பழகுவோம், சோகங்களை தூரவீசப் பழகுவோம். வாழ்க்கை இனிக்கும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 902 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon