ஜம்முனு வாழ காம்கேரின் OTP-228: நம்மை நாமே கொண்டாடுவோம்!

பதிவு எண்: 959 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 228
ஆகஸ்ட் 16, 2021 | காலை: 6 மணி

நம்மை நாமே கொண்டாடுவோம்!

நமக்கு யாரேனும் மூன்றாவது நபர் வந்து பாராட்ட வேண்டும், நம்மை உற்சாகப்படுத்த வேண்டும், நம் மன உளைச்சல்களில் இருந்து விடுபட உதவ வேண்டும் என்று நினைத்துக்கொண்டு காத்திருந்தால் நம்மைப் போல முட்டாள் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியாது.

நம் நலனில் பிறருக்கான அக்கறை என்பது ஒரு பத்து சதவிகிதம் மட்டுமே. இந்த சதவிகிதக் கணக்கில் கொஞ்சம் கூடுதல் குறைவு வைத்துக்கொள்ளலாம். ஆனால் பிறருக்கு நம் மீதான அக்கறை என்றுமே நூறு சதவிகிதம் வந்துவிட வாய்ப்பே இல்லை. அதுவும் Unconditional Love என்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

மற்றவர்கள் நம் மீது காட்டும் சிறு அக்கறையும் நாளை நமக்கும் அதுபோல ஒரு சூழல் வந்தால் பிறர் உதவி வேண்டுமே என்ற சிறு அச்சத்தில் உருவாகும் பதட்டத்தினால்கூட இருக்கும். விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் மிகக் குறைவு.

நம் கஷ்டத்தை மட்டுமல்ல நம் சந்தோஷத்தையும் ஓரளவுக்குதான் பிறரிடம் பகிர்ந்துகொள்ள முடியும். நம்முடைய மகிழ்ச்சி எத்தனை பேரின் வயிற்றெரிச்சலுக்குக் காரணமாக அமையும் என்பதும், நம் கஷ்டம் எத்தனை பேரின் சந்தோஷத்துக்குக் காரணமாக இருக்கும் என்பதும் கூட தெரியாமல் எல்லோரிடமும் எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டிருப்பவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்களே.

நம் சந்தோஷங்கள் பிறரின் பார்வையில் ‘என்னவோ வானத்தில் இருந்து குதித்து விட்டதைப் போல ஆடறான்(ள்)… பார்ப்போம் பார்ப்போம்…’ என்ற அளவிலும், நம் கஷ்டங்கள் ‘ஆடாத ஆட்டமா, அதான் அனுபவிக்கிறான்(ள்)… எனக்கு அப்பவே தெரியும்…’ என்ற அளவிலும்தான் பெரும்பாலும் இருக்கும்.

நம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய ஒருசில உறவினர்கள், ஆத்மார்த்தமான நண்பர்கள் தவிர மற்றவர்கள் பார்வையில் நம் வெற்றி தோல்விகள் இந்த கணக்கில்தான் அமையும். இதை தவறு என்றே சொல்ல முடியாது. இயற்கையும், இயல்பும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இப்படித்தான் சூழலை அமைக்கின்றன.

அதனால்தான் நம் சந்தோஷத்தையும் வெற்றிகளையும் நம்மைவிட அதிகம் கஷ்டப்படுகிறவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நாகரிகம். அதுபோல நம் கஷ்டங்களை எல்லோரிடமும் உளறிக்கொட்டிக் கொண்டிருப்பதும் பயனற்ற வேலை. அது நம்மைப் பற்றிய வதந்திகளை பெருக்குவதற்குத்தான் உதவுமே தவிர வேறெந்த ஆறுதலையும் தந்துவிடப் போவதில்லை.

இந்தக் கதையை எல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால், நாம் சோகமாக இருந்தால் யாரேனும் மூன்றாவது நபர் தானாக வந்து ஆறுதல் சொல்லி நம் வருத்தங்களை பகிர்ந்துகொள்வார்கள் என்று எண்ணிக் காத்திருக்க வேண்டாம். எத்தனை சீக்கிரம் நாமாக அதில் இருந்து வெளியில் வர முடியுமோ அத்தனை சீக்கிரம் அதில் இருந்து வெளியில் வந்துவிட முயற்சி எடுக்க வேண்டும்.

இதே லாஜிக் வெற்றிகளுக்கும் பொருந்தும். நம் வெற்றிகளைக் கொண்டாட பிறர் தானாக முன் வந்து உற்சாகப்படுத்துவார்கள் என நினைத்துக் காத்திருக்க வேண்டாம். நீங்களாகவே உங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களை சுற்றி உள்ளவர்களை கொண்டாடுங்கள். நீங்கள் கொண்டாடப்படுவீர்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்களை உங்கள் செயல்பாடுகளுடன் இணைத்துக்கொள்ளாமல் நீங்கள் சந்தோஷமாக இருந்துவிடவே முடியாது.

மகிழ்வித்து மகிழ்வோம். நம்மை நாமே கொண்டாடுவோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 804 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon