பதிவு எண்: 961 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 230
ஆகஸ்ட் 18, 2021 | காலை: 6 மணி
ஆசிரியர் தேடும் மாணவியும், மாணவி தேடும் ஆசிரியரும்!
‘கமலி From நடுக்காவேரி’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி குறித்து என் கண்ணோட்டத்தை எழுதிய போது இரண்டு வித்தியாசமான கோணத்தில் எனக்கு முன் கேள்விகள் வைக்கப்பட்டன.
ஒரு கிராமத்து மாணவிக்கு ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி கொடுக்கும் முறையை எழுதி இருந்தேன். டீ குடிக்கும் ஒரு கப்பை வைத்து சினிமாவைப் பார்க்கும் அத்தனை கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பாடம் எடுத்திருப்பார் அந்த ஆசிரியர்.
‘டீயை சுவைக்க ஒரு கப் தேவையாக இருக்கிறதல்லவா, அதுபோல்தான் வெற்றியை சுவைக்கவும் ஒரு கப் உள்ளது. அதுதான் வெற்றிகான மந்திரம்’ என சொல்லி போர்டில் Concentrate, Understand, Practice என்ற மூன்று வார்த்தைகளை எழுதி அவற்றின் முதல் எழுத்தை வட்டமடித்துக் காட்டி, இந்த CUP தான் வெற்றியை சுவைக்க உதவும் மந்திரம் என சொல்வார்.
C- Concentrate – வகுப்பில் கவனமாக இருத்தல்,
U – Understand – பாடங்களை ஆழமாக புரிந்துகொள்ளுதல்,
P- Practice – தினந்தோறும் பயிற்சி எடுத்தல்
இந்தப் பதிவை என் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் இருக்கும் கோபி சரபோஜி அவர்கள் தங்கள் மகனுக்கும் மகளுக்கும் பிரிண்ட் எடுத்துக்கொடுத்து வாசிக்க சொல்லி இருக்கிறார். பிறகு அது குறித்து அவர்களிடம் விவாதிக்கவும் செய்திருக்கிறார்.அவருடைய மகள் இலக்கியா எனக்கு போன் செய்து ஒரு கேள்வியை முன் வைத்தார்.
‘ஏன் ஆண்ட்டி, எங்களுக்கெல்லாம் அந்த திரைப்படத்தில் வரும் ஆசிரியர் போல் ஒரு நல்ல ஆசிரியர் கிடைப்பதில்லை…’
இந்தக் கேள்வியில் நான் அசந்து போனேன். இப்படி கேள்வி கேட்பதற்குக் கூட புத்திசாலித்தனம் வேண்டுமல்லவா?
இதே காட்சியை ஒட்டி 40+, 50+ வயதினர்களிடம் இருந்தும் கேள்விகள் வந்தன.
‘இந்த சினிமாவில் வரும் கமலியைப் போல இன்று மாணவ, மாணவிகள் இருப்பதில்லையே?’
ஒரே காட்சி. இருவேறு கோணங்கள்.
மாணவர்களுக்கு நல்ல ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்ற ஏக்கம். ஆசிரியர்களுக்கோ நல்ல மாணவர்கள் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம்.
மாணவர்கள் கிடைப்பார்கள், கிடைக்க மாட்டார்கள். அது வேறு விஷயம். ஆனால் ஆசிரியர்கள் தங்கள் பணியை அந்த திரைப்படத்தில் வருகின்ற பேராசிரியரைப் போல ஆத்மார்த்தமாக செய்ய வேண்டியது அவர்கள் கடமை. அப்படி செய்யும்போது அந்த திரைப்படத்தில் வருகின்ற நாயகி கமலி போன்ற மாணவிகள் கிடைப்பார்கள்.
எல்லா மாணவிகளும் கமலியைப் போல் ஆரம்பத்தில் இல்லாவிட்டாலும் நல்ல ஆசிரியர்களால், அவர்களின் நேர்மறையான அணுகுமுறையினால் ஆயிரம் கமலிகளை உருவாக்க முடியும். உருவாவார்கள்.
ஆனால், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு எடுத்தவுடனேயே மாணவர்கள் அத்தனை பேரும் சொக்க தங்கமாக கிடைத்துவிட வேண்டும் என்பது. அது நடக்கவே நடக்காது. தங்கத்தை புடம் போட்டால் மட்டுமே ஜொலிக்க ஆரம்பிக்கும்.
மாணவர்கள் தங்கங்கள். ஆசிரியர்கள் தான் அவர்களை ஜொலிக்க வைக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு இப்படி பதில் சொல்லி பதிவிட்டேன். என்னிடம் கேள்வி கேட்ட மாணவிக்கு என்ன பதில் சொன்னேன் தெரியுமா? (ஏற்கெனவே எழுதியதுதான். ஆனாலும் இங்கு தேவை என்பதால் மீண்டும் அந்த பதிலை சொல்கிறேன். நல்ல விஷயத்தை எத்தனை முறை சொன்னால்தான் என்ன?)
‘இலக்கியா, நம்மைச் சுற்றி நிறைய நல்ல விஷயங்கள் இருந்தால் நமக்கு கண்களில் நல்ல விஷயங்கள் சட்டென கண்களில் படும். ஆனால், இப்போதெல்லாம் நம்மைச் சுற்றி நல்ல விஷயங்கள் குறைந்து வருவதால் அவற்றைத் தேடினால்தான் நமக்குக் கிடைக்கிறது.
ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள். இப்போது நடப்பது டிஜிட்டல் யுகம். வெர்ச்சுவல் உலகம். ஆசிரியர்கள் மனித உருவத்தில்தான் நடமாட வேண்டும் என்பதில்லை. மேலும் நல்ல ஆசிரியர் என்பவர் நேரடியாக போர்டில் எழுதி வகுப்பெடுப்பவராகத்தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லை.
நேற்று நீ படித்த என்னுடைய கட்டுரை உனக்கு ஒரு ஆசிரியராக இருந்து வழிகாட்டியது அல்லவா? ‘இன்று நான் ஒரு விஷயத்தை உங்கள் பதிவில் இருந்து கற்றுக்கொண்டேன்’ என்று நீயே சொன்னாய். ஆக இன்று ஒரு கட்டுரை உனக்கு ஆசிரியராக இருந்தது. அந்தக் கட்டுரையை எழுதிய நான் உனக்கு மறைமுகமாக ஓர் ஆசிரியரானேன்.
நாளை நீ யு-டியூபில் பார்க்கும் ஒரு நல்ல வீடியோ, பாட்கேஸ்ட் மூலம் நீ கேட்கும் ஒரு நல்ல ஆடியோ, உன் கவனத்தை ஈர்க்கும் கருத்தாழமிக்க ஒரு ஓவியம், உன் கண்களில் படும் நல்ல புத்தகங்கள் இப்படி எவையெல்லாம் உன்னை அசைத்துப் பார்க்கிறதோ, எவைவெல்லாம் உன்னிடம் ஒரு ‘நல்ல’ மாற்றத்தை உண்டு செய்து ஒருபடி உயர்த்துகிறதோ அவையெல்லாமே உனக்கு ஆசிரியர்கள் போலதான்.
அப்படி உன்னைச் சுற்றியுள்ள நல்ல விஷயங்கள் உனக்கு ஆசானாக வேண்டுமானால் நீ நல்ல ஆரோக்கியமான மனநிலையில் இருக்க வேண்டும். நல்லவை, கெட்டவை குறித்த ஆழமான தெளிவான புரிதலுடன் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். நல்ல நேர்மறை சிந்தனைகளுடன் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் உன்னைச் சுற்றி இருக்கும் நல்ல விஷயங்கள் உன் கண்களுக்கும் உன் சிந்தனைகளுக்கும் புலப்படும். இன்னும் சொல்லப் போனால் அவை உன்னை நோக்கி தானாகவே வரும். தீயவை தானகவே விலகிப் போக ஆரம்பிக்கும். தீயவை விலகினாலே நல்லவை அனைத்தும் உனக்கு ஆசான் தானே.
சில தீய சக்திகள் நீ உறுதியாக இருந்தால், நீ தெளிவாக இருந்தால் தானாகவே விலகிவிடும். ஆனால் சில தீய சக்திகளை பிரம்மப் பிரயத்தனம் செய்துதான் விலக்க வேண்டி இருக்கும். அதற்கு உன் பெற்றோரின் உதவியுடன் தான் செயல்படுத்த வேண்டியிருக்கும். எனவே இந்த வயதில் உனக்கு என்ன பிரச்சனை என்றாலும் அதை உன் பெற்றோரிடம் பகிர்ந்துகொண்டு அவர்களின் அரவணைப்புடன் பாதுக்காப்பாக செயல்பட வேண்டும்.
எத்தனைக்கு எத்தனை நேர்மறையாக செயல்படுகிறாயோ அத்தனைக்கு அத்தனை உன்னைவிட்டு தீய சக்திகள் அகன்று ஓடிவிடும். அப்புறம் என்ன உன்னைச் சுற்றி உள்ளவை அனைத்துமே நல்ல சக்திகள்தான். அவை ஒவ்வொன்றும் ஒரு ஆசிரியர்தான்…’
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP