ஜம்முனு வாழ காம்கேரின் OTP-242: குழந்தைகளைக் குழப்ப வேண்டாமே!


பதிவு எண்: 973 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 242
ஆகஸ்ட் 30, 2021 | காலை: 6 மணி

குழந்தைகளைக் குழப்ப வேண்டாமே!

கோயில்கள், மால்கள், தியேட்டர்கள் போன்ற பொதுவெளியில் சிறிய குழந்தைகளை பார்த்தால் அவர்கள் கண்களைப் பார்த்து சிரிப்பதும், கண்களாலேயே கொஞ்சுவதும், பேசும் குழந்தைகளாக இருந்தால் பேச்சுக்கொடுப்பதும், அவர்கள் பெற்றோர் அனுமதித்தால் கைகொடுத்து மகிழ்வதும் என சின்ன சின்ன சந்தோஷங்களால் அந்த நொடியை உயிர்பிப்பேன். மனம் முழுவதும் பெருமகிழ்சியில் திளைக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் சின்னக் குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகளை பார்த்தால் வாய் வரை வரும் சிரிப்பையும், மனம் முழுக்கக் கொட்டிக் கிடக்கும் அன்பையும் கட்டுப்படுத்திக்கொண்டு  ‘வெறுமையாக’ கடந்துவிடுகின்றேன்.

காரணம்.

அந்தக் குழந்தையைப் பொருத்தவரை நான் யாரோ.

இன்று நான் எந்த உள்நோக்கமும் இல்லாமல் செய்யும் சின்ன சின்ன விளையாட்டுகளை நாளை உள்நோக்கத்துடன் எவரேனும் செய்யும்போதும் அந்தக்குழந்தை குழம்பி விடக்கூடாது என்பது மட்டுமே காரணம்.

குழந்தையைப் பொருத்தவரை உள்நோக்கமில்லாமல் செயல்படும் நானும் ஒன்றுதான், உள்நோக்கத்துடன் செயல்படும் அறிமுகம் இல்லாத நபர்களும் ஒன்றுதான். ஆணும் ஒன்றுதான், பெண்ணும் ஒன்றுதான்.

ஒரு செயலை யாருமே செய்ய அனுமதிக்கக்கூடாது என்ற ஃபார்முலாவை அவர்கள் மனதுக்குள் விதைத்துவிட வேண்டும்.

பொதுவெளியில் கள்ளம்கபடமில்லா குழந்தைகளைக்கூட ஆசையாய் பார்க்கவும், அவர்களின் குழந்தைத்தன்மையை ரசிக்கவும்கூட முடியாத ஒரு சூழல் பெரும் அச்சத்தை உண்டு செய்கிறது.

பெண் குழந்தைகளை மட்டுமல்ல ஆண் குழந்தைகளையும் கண்காணித்து வளர்ப்போம். இன்றைய சூழலில் அவர்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

வீட்டில் இருந்தே மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் மாற்றத்துக்கான ஒரே வழி.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 451 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon