பதிவு எண்: 972 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 241
ஆகஸ்ட் 29, 2021 | காலை: 6 மணி
உடலுக்கும் உயிருக்கும் நன்றியுடன் இருப்போமே!
நம்மை மனதார வாழ்த்தி வயிறார உணவு படைத்த ஒருவருக்கு நம் உயிர் இருக்கும்வரை நன்றியுடன் இருக்க வேண்டும்.
முன் காலத்தில் வீட்டுக்கு திருட வரும் கொள்ளையர்களுக்குக்கூட வயிறார உணவு படைத்து அவர்கள் மனதை மாற்றி திரும்பிச் செல்ல வைத்த உண்மை நிகழ்வுகளும் நடந்துள்ளன நம் நாட்டில்.
நாம் நம் இஷ்டப்படி சாப்பிடுகிறோம், பேசுகிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம், விருப்பபட்ட இடங்களுக்குச் செல்கிறோம், ஆசைப்பட்ட ஆடை அணிகலன்களை அணிகிறோம்… இப்படி எல்லாமே நம் விருப்படித்தான் நடக்கிறது.
உப்பிட்டவரையே உள்ளளவும் நினைக்க வேண்டுமென்றால், நம் விருப்பத்துக்கெல்லாம் ஆடும் இந்த உடலுக்கும் உயிருக்கும் நாம் என்ன கைமாறு செய்கிறோம்.
நல்லதையே நினைத்து, நல்ல செயல்களையே செய்து, நல்லவற்றையே பேசி, நல்லவற்றை கேட்டு, நல்ல இடங்களுக்குச் சென்று, நல்லவற்றையே பார்த்து நம்மால் முடிந்த உதவிகளை தான தர்மங்களை மற்றவர்களுக்கு செய்து ‘நல்ல மனிதன் இவன்’ என்று பாராட்டும்படியாக வாழ்வதே நம்மை இயக்கத்தில் வைத்திருக்கும் உயிருக்கும், நம் விருப்பத்துக்கெல்லாம் வளைந்துகொடுக்கும் உடலுக்கும் நாம் கொடுக்கும் மரியாதை.
இதைத்தான் திருவள்ளுவர் சொல்லிச் சென்றுள்ளார்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP