பதிவு எண்: 974 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 243
ஆகஸ்ட் 31, 2021 | காலை: 6 மணி
நீங்களும் Celebrity ஆகலாம்!
பிரபலமாவதற்கு எழுத்தாளராகவோ, ஓவியராகவோ, பாடகராகவோ, நடிகராகவோ இருக்க வேண்டியதில்லை. உங்கள் செயல்பாடுகளில் கொஞ்சம் அக்கறை எனும் மனிதாபிமானம் என்ற கூட்டுப்பொருளை சேர்த்துக்கொண்டு செயல்பட்டால் நீங்களும் முக்கியஸ்தரே.
சமீபத்தில் சென்னையில் பல கிளைகள் கொண்ட கண் மருத்துவமனை ஒன்றில் கண் பரிசோதனை செய்து கண்ணாடிக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன். ஏற்கெனவே போட்டிருந்த ஃப்ரேமில் புது லென்ஸை பொருத்தி வாங்கிக்கொள்ளுமாறு ஏற்பாடு.
லென்ஸ் வந்ததும் எனக்கு போனில் தகவல் சொன்னார் அப்போது விற்பனைப் பிரிவில் பணியில் இருந்த பணியாளர் ஒருவர்.
‘காலை 11, 11.15 மணிக்குள் ஃப்ரேமை கொடுத்து விட்டுச் சென்றால் இரவு எட்டு மணிக்குள் லென்ஸை பொருத்தி கண்ணாடியை வாங்கிக்கொள்ளலாம். தாமதமானால் நாளை காலைதான் கிடைக்கும்’ என்றார்.
எனக்கு 10.45 வரை அலுவலகத்தில் முக்கிய மீட்டிங் இருந்ததால் அவரிடம், ‘11.30 மணிக்கு வந்தால் இரவு 8 மணிக்குக் கொடுக்க முடியாதா?’ என்றேன்.
‘வாருங்கள் மேடம். லேபில் இருந்து 11 மணிக்கு வருவார்கள். நான் வெயிட் செய்யச் சொல்கிறேன்…’ என்றார்.
நான் கொஞ்சம் பதட்டமாக ‘சரி சார், நான் 11 மணிக்குள் வர முயற்சிக்கிறேன். 10, 15 நிமிடம் தாமதமானால் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லுங்கள், உங்கள் மருத்துவமனை எதிரில்தான் என் அலுவலகம். வந்துவிடுகிறேன்’ என்றேன்.
‘வாங்க மேடம், பத்திரமா வாங்க… நான் காத்திருக்கச் சொல்கிறேன்’ என்றார்.
எனக்கு அவர் சொன்னதில் ‘பத்திரமா வாங்க’ என்ற வார்த்தை நயம் மிகவும் பிடித்துப் போனது.
எங்கள் நிறுவனம் உள்ள இடம் பிசியான பகுதி. டிராஃபிக் இருந்துகொண்டே இருக்கும். அத்தனை சுலபத்தில் சாலையைக் கடந்துவிட முடியாது. அதே இடத்தில் அந்த கண் மருத்துவமனையும் இருந்ததால் அவர் ‘பத்திரமா வாங்க’ என சொல்லி இருப்பார்.
பொதுவாக எல்லோரும் ‘வாங்க காத்திருக்கச் சொல்கிறேன்’, ‘வாங்க, ஒன்னும் பிரச்சனை இல்லை’, ‘எதற்கும் கொஞ்சம் சரியான நேரத்துக்கே வந்திடுங்க’ என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆனால் எனக்கு போன் செய்தவர் ‘பத்திரமா வாங்க மேடம்’ என்று சொன்ன நயத்தில் அன்றைய தினம் அவர் முக்கியஸ்தர் ஆனார்.
அவரது முகமும் பெயரும் மனதுக்குள் ஆழப் பதிந்தது. வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லோரிடமும் அந்த பணியாளர் குறித்து சொல்லி மகிழ்ந்தேன். என்னுடைய வட்டத்தில் பிரபலமும் ஆனார். அவர்கள் யாருக்குமே அவரது முகம் தெரியாது. ஆனால் அவர் கற்றுக்கொடுத்த பண்பினால் முக்கியஸ்தர் ஆனார்.
ஆயிரம் நபர்கள் இருக்கும் கூட்டத்தில் நம்முடைய நல்ல பண்புகளாலும், நற்செயல்களாலும் நாம் முக்கியஸ்தராகவோ, பிரபலமாகவோ ஆக முடியும்.
ஆம். நொடிப்பொழுதில் Celebrity ஆகிவிட முடியுமே!
முயற்சித்துத்தான் பார்ப்போமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP