பதிவு எண்: 977 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 246
செப்டம்பர் 3, 2021 | காலை: 6 மணி
நம் மனதே சிசிடிவி கேமிரா!
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பணிநிமித்தம் அடிக்கடி இடமாற்றம் இருக்கும். எங்களை பள்ளியில் பத்திரமாகக் கொண்டுவிட்டு அழைத்து வருவதற்கு வசதியாக வீட்டுக்கு அருகில் இருக்கும் நல்ல பள்ளியில் சேர்ப்பார்கள்.
நான் ஓர் அரசுப் பள்ளியில் ஏழாவது படித்துக்கொண்டிருந்தபோது அந்தப் பள்ளியில் Self Service Purchase என்ற புதுமையான ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.
பள்ளியில் சாக்லெட், கமர்கட், கடலை மிட்டாய், பேப்பர், பேனா, பென்சில் போன்றவற்றை விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை திறந்தார்கள். பொருட்களின் விலையை அது வைக்கப்பட்டிருக்கும் ஷெல்ஃபின் பிரிவின் கீழ் ஒட்டியிருப்பார்கள்.
அங்கு ஒரு உண்டியலையும், நோட்டையும் வைத்திருப்பார்கள்.
மாணவ மாணவிகள் ஏதேனும் தங்கள் தேவைக்கு ஏற்ப பொருட்களை தாங்களாகவே எடுத்துக்கொண்டு அதற்கான விலையை உண்டியலில் போட்டு விட வேண்டும். என்ன பொருளை எத்தனை எடுக்கிறார்கள் என்பதை மட்டும் அந்த நோட்டில் குறித்துவிட வேண்டும்.
மாணவ மாணவிகளிடம் சுய கட்டுப்பாட்டையும், சுய ஒழுக்கத்தையும் கொண்டு வரவேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
இத்தனைக்கும் அப்போதெல்லாம் சிசிடிவி கேமிராவெல்லாம் கிடையாது. அந்த அங்காடியில் வருவோர் போவோரை கண்காணிக்கவும் ஸ்டாஃப் யாரையும் நியமிக்கவும் இல்லை.
அந்த வயதில் அந்தத் திட்டத்தின் பயன் அத்தனை வியப்பாக இல்லை. ஆனால் பிற்காலத்தில் அரசு பள்ளியில் இத்தனை நூதனமான திட்டத்தைக் கொண்டு வந்த தலைமை ஆசிரியரை நினைத்துப் பெருமிதப்பட்டேன்.
ஆம். நம் மனதுதான் நம்மை கண்காணிக்கும் CCTV கேமிரா!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP