பதிவு எண்: 978 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 247
செப்டம்பர் 4, 2021 | காலை: 6 மணி
சுமக்க வேண்டியதை சுமப்போம்!
‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ – அடிக்கடி எனக்கு இந்தக் குறள் மனதுக்குள் வந்துபோகும்.
துன்பம் செய்பவர்களுக்கு நன்மைகள் செய்தாலும், அவர்கள் நாணமெல்லாம் படுவதில்லை இந்தக் காலத்தில்.
ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்… இதுவும் கடந்துபோகும் என்பதைப்போல எல்லாவற்றையும் புறந்தள்ளி நகர்ந்துகொண்டே கடந்து சென்றபடி இருக்கிறார்கள்.
இன்னும் சிலர் ‘நான் பொதுவாகவே எதையும் மனதில் சுமந்துகொண்டு செல்வதில்லை’ என்று தோள் குலுக்கி சற்றே பெருமிதமாய் சொல்கின்றனர்.
சுமக்க வேண்டியதை சுமந்துத்தான் ஆக வேண்டும். மற்றவர்களை காயப்படுத்திவிட்டு நான் எதையும் சுமப்பதில்லை என்று சொல்வதைப் போன்ற மனசாட்சியற்ற செயல்பாடு வேறேதும் இருக்க முடியுமா?
நம் செயல்பாடுகள் குறித்த பார்வைகளை நாம் சுமந்தால் மட்டுமே நாம் மனித நேயத்துடன் வாழ முடியும்.
சுமக்க வேண்டியதை சுமப்போம். அந்தப் பொதியில் உள்ள ‘நல்லவை’ நம் ஆரோக்கியத்துக்கு; ‘தீயவை’ களைந்தெடுக்கப்பட்டு மன ஆரோக்கியத்துக்கு.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP