பதிவு எண்: 976 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 245
செப்டம்பர் 2, 2021 | காலை: 6 மணி
சில நேரங்களில் சில அனுபவங்கள்!
சில நாட்களுக்கு முன் காலை 6 மணிக்கு ஒரு வாட்ஸ் அப் மெசேஜ்.
காலை வணக்கம் சொல்லி, தன்னை சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் ஸ்வாமிஜி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு என்னுடன் பேச வேண்டும் எப்போது பேசலாம் என கேட்டு மிக அழகான ஆங்கிலத்தில் தகவல் பளிச்சிட்டது.
நான் வழக்கம்போல எல்லோருக்கும் சொல்வதைப்போல ‘காலை எட்டு மணிக்கு அழையுங்கள்’ என்று தகவல் அனுப்பினேன்.
சரியாக சொன்ன நேரத்தில் அழைத்தார். அதன்பின்னர் தான் இனிய அதிர்ச்சி காத்திருந்தது.
நான் எழுதி விகடன் வாயிலாக வெளியிட்டிருந்த ஃபோட்டோஷாப் புத்தகத்தைப் படித்துவிட்டு அதிலுள்ள என் புகைப்படத்தை வைத்து என்னை அடையாளம் கண்டுதான் என்னை அழைத்துப் பேசுவதாகச் சொன்னார்.
அதில் என்னுடைய சிறு வயது புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அதன் மூலம் கருப்பு வெள்ளை புகைப்படத்தை கலராக மாற்றும் நுட்பத்தை விளக்கியிருந்தேன்.
நாங்கள் சீர்காழியில் வசித்தபோது எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள் அப்பா அம்மாவுடன் தொலைபேசித் துறையில் பணிபுரிந்த நண்பர். அப்போது நான் 2-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
அவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு மகன்கள், ஒரு மகள்.
அதில் ஸ்ரீராம் என்ற பெயருடைய மூத்த மகன்தான் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஸ்வாமிஜியாக இருக்கிறார். அவர்தான் என்னுடன் போனில் பேசியது.
நாங்கள் மூவரும் (நானும் என் தம்பி தங்கையும்) அவருடன் ஒரே பள்ளியில் படித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
ஸ்ரீராம் என்ற அவரது பெயர் மாற்றப்பட்டு ஸ்வாமிஜிகளுக்கே கொடுக்கப்படும் பெயராக மாறியிருந்தது.
அவர் பி.டெக் முடித்துவிட்டு அமெரிக்காவில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு, தன் தம்பி தங்கைகளுக்கு திருமணம் ஆனவுடன் ஆன்மிகப் பாதையில் செல்ல முடிவு செய்து ராமகிருஷ்ண மடத்தில் அவர்களுக்கான விதிமுறைகளைப் பின்பற்றி உரிய காலத்தில் ஸ்வாமிஜியாகவும் மாறிவிட்டார்.
ஒரு முறை மடத்தின் நிகழ்ச்சிக்கு அவர்கள் அழைப்பின்பேரில் சென்றிருந்தேன். நேரிலும் சந்தித்தேன்.
மடத்தின் சாஃப்ட்வேர் பிரிவில் புரோகிராமிங் துறையை கவனித்துக்கொண்டிருக்கிறார். போட்டோஷாப்பில்கூட ஓபன் சோர்ஸ் புரோகிராம் எழுதி தனக்கு ஏற்றவாறு அதை செயல்படுத்த வைக்கும் நுண்ணிய தொழில்நுட்பத்தையெல்லாம் கையாள்கிறார்.
இன்று தொழில்நுட்பத்தில் ஏதேனும் சந்தேகம் என்றால் என்னை அழைத்து பேசுகிறார். ரிமோட் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலம் என் அலுவலகத்தில் இருந்தே அவர் கேட்கின்ற சாஃப்ட்வேர் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன்.
நம்முடன் படித்தவர்களை, நம் வீட்டுக்கருகில் குடியிருந்தவர்களை, நம் இளம் வயது நண்பர்களை பின்னாளில் டாக்டராகவோ, இன்ஜினியராகவோ, சயின்டிஸ்டாகவோ சந்தித்திக்க நேரிடலாம்.
எனக்கு கொஞ்சம் வித்தியாசமான அனுபவம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP