பதிவு எண்: 980/ ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 249
செப்டம்பர் 6, 2021 | காலை: 6 மணி
பதட்டம் நல்லதே!
தினமும் காபியோ அல்லது டீயோ குடிப்பவர்களுக்கு என்றாவது அந்த நேரத்தில் அவற்றை குடிக்க முடியவில்லை என்றால் ஒரு பதட்டம் உண்டாகும். அது சிடுசிடுப்பாக, சின்ன கோபமாக ஆரம்பித்து சின்ன சின்ன வாக்குவாதங்கள், தடித்த வார்த்தைகள் என உருவெடுத்து கடுமையான தலைவலியை உண்டாக்கிவிடும்.
இதே லாஜிக்தான் நாம் பின்பற்றும் எல்லா பழக்க வழக்கங்களுக்கும்.
அது குறிப்பிட்ட நேரத்தில் வாக்கிங் செல்வதாக இருக்கட்டும், மதிய சாப்பாடு முடித்ததும் இனிப்பு சாப்பிடுவதாக இருக்கட்டும், தொலைக்காட்சி சீரியல் பார்ப்பதாக இருக்கட்டும். இப்படி எதுவாக இருந்தாலும் தடைபடும் தொடர் பழக்க வழக்கங்கள் நமக்குள் சிறு பதட்டத்தை உண்டு செய்யும்.
அது நல்ல தொடர் பழக்க வழக்கங்களாக இருந்துவிட்டால் அந்தப் பதட்டம் நன்மைக்கே. ஆனால் தீய பழக்க வழக்கங்களாக இருந்துவிட்டால் அதற்காக உண்டாகும் பதட்டம் நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றி இருப்போருக்கும் கெடுதல்தான். சரியான நேரத்துக்கு காபி குடிக்காமல் இருந்தால் உண்டாகும் பதட்டம் உங்களோடு முடிந்துவிடும், மது குடிக்காமல் இருந்தால் உண்டாகும் பதட்டம் உங்களை மட்டுமில்லாமல் உங்கள் குடும்பத்தையும் நாசமாக்கிவிடும். பதட்டம் எதற்காக என்பதில் கவனம் இருக்கட்டும்.
நமக்குள் உண்டாகும் அந்தப் பதட்டத்தை நாம் எப்படி பக்குவமாக கையாள்கிறோம் என்பதில்தான் நம் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது.
முந்தைய தலைமுறையினரில் (50+ வயதினர்) ஒரு சிலர் ‘நான் இன்று அவரிடம் சரியாக பேசவில்லையே. அவர் ஏதேனும் நினைத்துக்கொண்டிருப்பாரோ…’, ‘கொஞ்சம் பிசியாக இருந்ததால் எதிர்பட்ட நண்பரை பார்த்தும் பார்க்காமல், சின்னதாக சிரிக்காமல்கூட கடந்து சென்றுவிட்டேனே… அவர் மனம் வருந்தியிருப்பாரோ…’ என்றெல்லாம் சாதாரண விஷயங்களுக்கெல்லாம் பதட்டமாகி வருத்தப்படுவதைப் பார்க்கலாம்.
உண்மையில் இந்தப் பதட்டம்தான் அவர்களை சரியாக வழி நடத்துகிறது என்று சொல்வேன். அதனால்தான் அவர்கள் மற்றவர்களின் நிலையில் தங்களை வைத்துப் பார்க்கும் பக்குவத்தைப் பெறுகிறார்கள். ஆகவேதான் அவர்களால் மனிதாபிமானத்துடன் எதையும் எதிர்கொள்ள முடிகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்பதும், நன்றி சொல்வதும், அன்பாக இருப்பதும், கருணையுடன் நடந்துகொள்வதும் அவர்களுக்குள் உண்டாகும் சின்ன பதட்டம்தான் கற்றுக்கொடுக்கிறது.
ஆனால் அதே மனிதர்கள் தங்கள் அடுத்தத் தலைமுறையினரை பார்த்து, குறிப்பாக தங்கள் குழந்தைகளைப் பார்த்து ‘நாம்தான் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பதட்டப்பட்டு வாழ்ந்துவிட்டோம். நம் குழந்தைகளாவது அதுபோன்ற மன அழுத்தத்தில் இருந்தெல்லாம் விடுபட்டு ஜாலியா இருந்துவிட்டுப் போகட்டுமே…’ என்று சொல்கிறார்கள்.
ஆம். இன்றைய தலைமுறை சின்ன சின்ன விஷயங்களுக்கு வருத்தப்படுவதில்லை என சொல்ல மாட்டேன், அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று சொல்வேன். காரணம் பெற்றோர்கள்தான். தங்கள் குழந்தைகளுக்கு சிறிய அளவில் கூட பதட்டமோ, மன அழுத்தமோ வந்துவிடவே கூடாது என அவர்கள் தங்களுக்குள் பெரும் அழுத்தத்தை உண்டாக்கிக்கொள்கிறார்கள்.
படிப்பு, மதிப்பெண், மற்றவர்களை முந்தி இருத்தல் இதுப்பொன்ற விஷயங்களைத் தவிர வேறெதற்குமே அவர்களுக்குள் பதட்டமே வரக் கூடாது என கவனமாக இருக்கிறார்கள்.
விளைவு. சின்ன சின்ன சந்தோஷங்களை இழக்கச் செய்கிறார்கள். சிறிய விஷயங்களுக்கும் நன்றி சொல்லும்போதும், சிறிய தவறுகளுக்கும் மன்னிப்புக் கேட்கும்போது பிறருடனான தொடர்பில் அன்பின் பிணைப்பு உண்டாவதை அவர்களால் உணரவே முடிவதில்லை.
‘அதனால் என்ன இப்போ?’, ‘இதெல்லாம் ஒரு விஷயமா?’, ‘இதற்கு ஏன் இத்தனை பெரிய சீன் போடுகிறீர்கள்?’ என்று எல்லா விஷயங்களையும் சர்வ சாதாரணமாக ஒதுக்கிச் செல்ல முடிவதால் அவர்களுக்குள் அவர்களையும் அறியாமல் வெறுமையும், வெற்றிடமும் உண்டாகிறது. அது குறித்து அவர்களுக்கோ அல்லது அவர்களின் பெற்றோர்களுக்கோ தெரிவதில்லை என்பதே நிதர்சனம்.
விளைவு. வாழ்க்கையில் பின்னாளில் தம் பெற்றோர்களின் மனநிலையைக் கூட புரிந்துகொள்ளாமல் அவர்களை ஒதுக்கிச் செல்லும் இளையதலைமுறையினரை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
மன வேதனையில் அழுகின்ற பெற்றோரின் கண்ணீர் கொஞ்சம் கூட அவர்களுக்குள் பதட்டத்தை உண்டாக்குவதில்லை. பதட்டமோ, மன அழுத்தமோ வேண்டாம் என சொல்லிக்கொடுத்ததே பெற்றோர் தானே? பிறகு எப்படி திடீரென ஒருநாள் பெற்றோரின் கண்ணீரைப் பார்த்து பதட்டமோ, பாசமோ வரும்?
வினையோ, திணையோ, விதையோ எதை விதைக்கிறோமோ அதைத்தானே வெவ்வேறு வடிவில் அறுவடை செய்ய முடியும்?
குழந்தைகளைப் பதட்டப்படவிடுங்கள். அந்த பதட்டம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வழிவகுக்கும்.
ஆம். பதட்டம் நல்லது. ஆனால், அளவோடு இருக்கட்டும்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP