பதிவு எண்: 981 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 250
செப்டம்பர் 7, 2021 | காலை: 6 மணி
எதை நேசிப்பது, எதை பயன்படுத்துவது?
மகாபாரதப் போர். அர்ஜூனனும், துரியோதனும் கண்ணனிடம் உதவி கேட்க வருகிறார்கள். இவர்கள் வருவதை அறிந்துகொண்ட கண்ணன் படுத்துத் தூங்குவதைப்போல நடித்தார்.
அர்ஜுனன் ‘பவ்யமாய்’ கண்ணனின் காலடியிலும், துரியோதனன் ‘தான் தலைவன்’ என்ற அகங்காரத்துடன் தலைக்கு அருகிலும் நிற்கிறார்கள்.
கண் விழித்த கண்ணன் கண்களில் காலடியில் நின்றுகொண்டிருந்த அர்ஜுனன் படுகிறார். பின்னர் தலைக்கருகில் நின்றிருந்த துரியோதனன்.
இருவரும் போருக்கு உதவி கேட்கிறார்கள்.
‘நான் அர்ஜுனனைத்தான் முதலில் பார்த்தேன். அவன் என்ன கேட்கிறானோ அதுபோக மீதியை உனக்குக்கொடுக்கிறேன்’ என துரியோதனனைப் பார்த்து கண்ணன் சொல்கிறார்.
‘கண்ணா, எனக்கு நீ போரில் உறுதுணையாக இருக்க வேண்டும்…’ என வேண்டுகிறார் அர்ஜூனன்.
‘நான் வந்தால் உனக்கு என்ன பலன்… நான் ஆயுதங்களைத் தொட மாட்டேன்… பின்னர் வருத்தப்படக் கூடாது’ – கண்ணன்.
‘எனக்கு உன் பக்கபலம் இருந்தால்போதும்… ஆயுதம் மற்றும் படைபலம் எதுவும் தேவையில்லை’ – அர்ஜூனன்.
துரியோதனனுக்கு சந்தோஷம். ‘ஆஹா… அத்தனைப் படைபலமும் ஆயுதபலமும் எனக்குத்தான்…’ என மனதுக்குள் குதூகலிக்கிறார்.
அவரவர்கள் விருப்பப்படி கண்ணன் ஆசி வழங்குகிறார்.
பெரும்படை மற்றும் ஆயுத பலத்துடன் போரிட்ட துரியோதனன் தோற்றுப்போக, கண்ணனின் மனோபலத்துடன் போரிட்ட அர்ஜூனன் ஜெயிக்கிறார்.
‘மனிதர்களை நேசிக்க வேண்டும், ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்’ என்ற உயரிய தத்துவம் இந்த நிகழ்ச்சியில் உள்ளது.
மனிதர்களை பயன்படுத்த ஆரம்பித்து, பொருட்களை நேசிக்கத் தொடங்கிவிட்டதால் வாழ்க்கையும் இயந்திரகதியாக மாறிவிட்டது.
உயிருள்ள பொருட்கள் மீது அன்பும், பாசமும், நேசமும், மரியாதையும் வைத்தால் அவை நமக்கு பலமடங்கு திரும்பக் கிடைக்கும். வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.
நாம்தான் கார், வீடு, உயர்ரக மொபைல் என உயிரற்றப் பொருட்களை நேசிக்க ஆரம்பித்து விட்டோமே. பொருட்களின் ஆயுட்காலம் குறையக்குறைய அவற்றின்மீது நாம் வைக்கும் நேசமும் தேய்ந்துகொண்டே வருவதுதானே இயல்பு.
மனிதர்களை நேசிப்போம். பொருட்களை பயன்படுத்துவோம். வாழ்க்கை ரசனையாக இருக்கும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP