பதிவு எண்: 979 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 248
செப்டம்பர் 5, 2021 | காலை: 6 மணி
ராமச்சந்திரன் செய்த புண்ணியம்!
வருடம் 1955. செஞ்சிக்கு அருகில் உள்ள ஆலம்பூண்டி!
அந்த ஊர் ஆசிரியர் ஒருவர்!
அவர் குடும்பத்தில் நிறைய குழந்தைகள். அவர் நல்ல வேலையில் இருந்தாலும் கைக்கும் வாய்க்குமாய் இழுத்துப் பிடிக்கும் வாழ்க்கை. அக்கம் பக்கம் என அனைவருமே ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு மனிதாபிமானத்துடன் வாழ்ந்து வந்ததால் கஷ்டங்களும் இஷ்டங்களாகிப் போயின. குறிப்பாக எதிர்வீட்டில் வசிக்கும் ராமச்சந்திரன் குடும்பம் நன்றாக பழகினார்கள். ராமச்சந்திரன் மட்டுமல்ல, அவரது மனைவி, குழந்தைகள் என அனைவருமே குடும்பமாக அன்பாகப் பழகினார்கள்.
இப்படியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில் ஆசிரியரின் பாட்டிக்கு தொழுநோய் வந்துவிட்டது. அந்தக் காலத்தில் தொழுநோய் என்றால் பரவும் நோய் என்ற பயத்தில் ஒதுக்கி வைத்து விடுவார்கள். அப்படித்தான் அவரது பாட்டியையும் சிறிய வீட்டில் தனிமைப்படுத்தி வைத்தார்கள்.
ஒருநாள் அந்த பாட்டி இறந்து விட்டார். அவரை தூக்குவதற்குக் கூட ஆட்கள் முன் வரவில்லை. அப்போது முதல் ஆளாய் எதிர்வீட்டு ராமச்சந்திரன்தான் தானாக முன் வந்து ஒரு கைப்பிடிக்க, அடுத்தடுத்து மூன்று பேர் முன் வந்து நால்வரானார்கள்.
அவர்கள் மூவரும் ராமச்சந்திரனைவிட கொஞ்சம் உயரம் குறைவு. மற்றவர்கள் உயரம் குறைவாக இருந்ததால் பாட்டியின் உடல் கனம் முழுவதும் அவரது தோளில் இறங்கியது. அதனால் எரியூட்டும் இடத்துக்கு தூக்கி எடுத்துச் செல்வதற்குள் ராமச்சந்திரனுக்கு தோள் பட்டை வலி பின்னி எடுத்துவிட்டது.
வீட்டுக்கு வந்து குளித்து படுத்தவருக்கு வலி நீங்க இரண்டு மூன்று நட்கள் ஆயின.
—***—
வருடம் 2021. சென்னை!
பத்மாவதி!
பத்மாவதி கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் மாதாமாதம் பிரதோஷம் அன்று அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு இளநீர், நல்லெண்ணெய், திரி, தேன் உட்பட வாங்கிக்கொடுத்து அர்ச்சனை செய்து வருவார்கள்.
கொரோனா காலத்தில் கோயிலுக்கு செல்ல முடியவில்லை. ஆனால் மாதாமாதம் பிரதோஷம் அன்று வீட்டில் இருந்தே பிரார்த்தனை செய்துகொண்டார்கள்.
1955-ல் ராமச்சந்திரன் வசித்து வந்த ஆலம்பூண்டியில் பத்மாவதியின் குடும்பத்து தூரத்து உறவினர் ஒருவர் இப்போது வசித்து வருகிறார்.
கொரோனாவின் ஆட்டம் ஏறி இறங்கும்போது, லாக் டவுன் காலத்தில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் கோயில்களில் அர்ச்சகர்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தார்கள் அல்லவா? அந்த காலகட்டத்தில் அந்த தூரத்து உறவினர் மூலம் அந்த சிவன் கோயிலுக்கு அபிஷேகத்துக்கு கொடுத்திருந்தார்கள் பத்மாவதி தம்பதியினர்.
கொரோனா காலமாக இருந்ததால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் ஆலம்பூண்டிக்கு நேரில் செல்ல முடியாததால் அபிஷேகம் செய்த பிறகு சிவபெருமானை அலங்காரத்துடன் புகைப்படம் அனுப்ப முடியுமா என்று அந்த உறவினரைக் கேட்க, அவர் தன்னிடம் வாட்ஸ் அப் இல்லை. ஆகவே அர்ச்சகரிடமே அறிமுகம் செய்து வைக்கிறேன். அவரை தொடர்பு கொள்ளுங்கள் என சொல்லி அவர் தொடர்பு எண் கொடுத்தார்.
அர்ச்சகர் அறிமுகம் கிடைத்தது. என்ன ஆச்சர்யம்.
ஆம். அந்த அர்ச்சகரின் அப்பாதான் ஆலம்பூண்டியில் வசித்து வந்த ஆசிரியர். அந்த ஆசிரியரின் பாட்டிக்குதான் ராமச்சந்திரன் இறுதி காரியங்களில் முன் நின்று உதவி முன்மாதிரியாக இருந்திருக்கிறார்.
ராமச்சந்திரனின் மகள்தான் பத்மாவதி. அப்புறம் என்ன பரஸ்பர நட்பு. அன்பு பரிமாற்றம்தான்.
அன்றில் இருந்து ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் சிவனுக்கு பூஜை, அபிஷேகம் முடிந்தவுடன் சிவபெருமானும், நந்தியும் அலங்காரத்துடன் எங்கள் வீடு தேடி வாட்ஸப்பில் வந்துவிடுகிறார்கள்.
இதுதான் கர்மா என்பது. எதை செய்கிறோமோ அது நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கோ நம் சந்ததியினருக்கோ வந்து சேரும்.
நல்லது செய்தாலும் சரி, கெட்டது செய்தாலும் சரி. எதிர்வினை நிச்சயம் உண்டு. நல்லதுக்கான எதிர்வினை நன்மை, கெட்டதுக்கான எதிர்வினை தீமை. அவ்வளவுதான்.
கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்னர் ராமச்சந்திரனும் அவரது குடும்பத்தினரும் செய்த புண்ணியம், 65 வருடங்களுக்குப் பிறகு அவரது மகள் பத்மாவதியின் குழந்தைகளுக்கும், பேரன் பேத்திகளுக்கும் அர்ச்சகர் மூலம் சிவபெருமான் வடிவில் கிடைத்து வருகிறது.
கோயிலுக்குச் செல்ல முடியாவிட்டால் என்ன, இறை அருள் வீடு தேடி வரும் அளவுக்கு அந்த புண்ணியத்தின் வீச்சு இருப்பதை கவனித்தீர்களா?
இந்த வீச்சில் ஒரு சிறு துளியும் குறையாமல் பிறருக்கு தீமை செய்தாலும் வந்து சேரும்.
‘விதை விதைத்தவன் விதை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’
நல்லதையே நினைப்போம். நல்லதையே பேசுவோம். நல்லதையே செய்வோம். நமக்காக மட்டும் அல்ல, நம் சந்ததியினருக்காகவும்தான்! சேர்த்து வைப்போம் புண்ணியங்களை.
அது சரி யார் அந்த ராமச்சந்திரன்? யார் அந்த பத்மாவதி?
பத்மாவதி என் அம்மா. அம்மாவின் அப்பா ராமச்சந்திரன்!
நேற்று பிரதோஷ சிவன் வாட்ஸ் அப் தரிசனம் கொடுத்தபோது எழுதத் தூண்டிய பதிவு.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP