ஜம்முனு வாழ காம்கேரின் OTP-251: இனி எப்படி இருக்கப் போகிறது பிரபஞ்சம்?

பதிவு எண்: 982 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 251
செப்டம்பர் 8, 2021 | காலை: 6 மணி

இனி எப்படி இருக்கப் போகிறது பிரபஞ்சம்?

கடந்த 1-1/2 வருடங்களுக்கும் மேலாக கொரோனா உபயத்தில் தையல் கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது.

சமீபத்தில் அவசியம் காரணமாக சென்றிருந்தேன்.

அந்த கடை உரிமையாளர் ஒரு பெண். தைப்பதற்கு மூன்று தையல்காரர்கள்.

கொரோனா காலத்தில் எப்படி ஜீவனம் செய்திருப்பார்களோ என நான் அவர்கள் குறித்தும் நினைத்து கவலைப்பட்டிருக்கிறேன்.

நேற்று நான் சென்றிருந்தபோது அந்த பெண் முகக்கவசம் அணியவில்லை.

நான் நினைவூட்டினேன்.

‘ம்…’ என்று சொல்லிவிட்டு அவர் அதை எடுத்துப் போடும் அக்கறை துளியும் இன்றி வேறொரு வாடிக்கையாளரை கவனித்துக்கொண்டிருந்தார்.

அவர் முகக்கவசம் அணிந்திருந்தார். ஆனால் தையல்கடைக்காரரை வலியுறுத்தவில்லை.

அந்த வாடிக்கையாளர் சென்றதும் அவர் என்னை கவனிப்பதற்காக வந்தார்.

நான் மீண்டும் முகக்கவசம் அணிய வலியுறுத்தினேன்.

‘சும்மா தொணதொணன்னு சொல்லிகிட்டிருக்காதீங்க… நீங்க வேணா வேறு கடைக்குப் போங்க…’

என்று சொல்லிவிட்டு நான் கொடுத்த துணிகளை கணக்கிட்டு எழுதிக்கொள்ள முயன்றார்.

நான் எதுவும் பேசவில்லை. ‘சரி… தாங்க…. நான் பார்த்துக்கறேன்…’ என்று சொல்லிவிட்டு என் துணிப்பையை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

பொதுநலம் கருதியும் அவர் நலன் கருதியும் என் நலன் கருதியும் முகக்கவசம் அணியச் சொன்னால் அவர் சொன்ன பொறுப்பற்ற பதில்…

‘நீங்க வேணும்னா வேறு கடைக்குப் போங்க!’

தன் வருமானம் குறைந்துபோன நிலையிலும், வாடிக்கையாளர் வராமல் நின்றுவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டம் கொஞ்சமும் இல்லாமல் எப்படி இப்படி பொறுப்பில்லாமல் பேச முடிகிறது?

நோய் தொற்றுக்கு பயந்துகொண்டே என் அலுவலகம் தவிர, பொது இடங்களில் அதிகம் புழங்காமல் இருந்த நான் சமீபமாகவே செல்ல ஆரம்பித்துள்ளேன். அதுவும் அவசியம் காரணமாகவே.

காய்கறிகள், மளிகை, மருந்து மாத்திரை என குடும்பத்துக்குத் தேவையான அனைத்தையும் போனிலோ அல்லது ஆப்பிலோ ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்து கொடுத்துவிடுவதால் சிரமம் தெரியாமல் இருந்தது. வீடு தேடி வரும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்தே வந்தார்கள்.

ஆனால் நேரில் செல்லும்போதுதான் இப்படிப்பட்ட காட்சிகளை காண வேண்டியுள்ளது.

ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயமாகப் புரிந்தது.

நீங்க வேணும்னா வேறு ஆட்டோ பார்த்துக்குங்க…

நீங்க வேணும்னா வேறு கடைக்கு போய்க்கோங்க…

நீங்க வேணும்னா வேறு கொரியர் ஆஃபீஸுக்கு போங்க…

இனி இப்படிப்பட்ட வசனங்களை பரவலாக எங்கும் கேட்க நேரிடலாம்.

சாலையோரம் சிறுநீர் கழிக்காதீர், பொது இடத்தில் புகைக்காதீர், சாலையில் எச்சில் துப்பாதீர், குப்பையை நடுத்தெருவில் வீசாதீர் என்பதுபோல  ‘முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள்’ என்பதும் சம்பிரதாயமான வார்த்தையாகிவிடும்.

நாம் வேண்டுமானால் கூடுதலாக இன்னும் இரண்டு மாஸ்க் அணிந்துகொண்டு செல்லலாம். அவ்வளவுதான். மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது அத்தனை எளிதான செயலல்ல என்பது மாஸ்க் விஷயத்திலும் வலுவாக புரிந்து போனது.

மாஸ்க் அணிந்துகொள்ளவும், சமூக இடைவெளி விட்டு பழகுவதும் அவர்களுக்காகவே தெரிய வேண்டும். நாமாக சொல்லும்போது அது அவர்கள் தன்மானப் பிரச்சனையாகி விடுகிறது.

மற்ற விஷயங்களைப் போல, இதுவும் கடந்துபோகும் என்று இந்த விஷயத்தை சாதாரணமாக விட்டுவிட முடியாது.

நம் உயிர் நம் உரிமை!

நம் பாதுகாப்பு நம் உரிமை!

நம் குடும்பப் பாதுகாப்பு நம் உரிமை!

கொரோனா இன்னும் முழுமையாக போய்விடவில்லை என்பதை மட்டும் நம் மக்கள் உணர வேண்டும். குறிப்பாக தனிநபர் பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பு இந்த பிரபஞ்சத்தின் பாதுகாப்பு என்பதை மட்டுமாவது நினைவில் கொள்ள வேண்டும்.

சிந்திப்போமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 1 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari