ஜம்முனு வாழ காம்கேரின் OTP-252: எது குறிக்கோள்?

பதிவு எண்: 983 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 252
செப்டம்பர் 9, 2021 | காலை: 6 மணி

எது குறிக்கோள்?

சமீபத்தில் ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். அந்தக் கடை உரிமையாளர் தன் மகனின் +2 சேர்க்கைக்காக ஒரு பள்ளியில் இருந்து வாங்கி வந்திருந்த நோட்டீஸை வைத்துக்கொண்டு அங்கு வந்திருக்கின்ற வாடிக்கையாள நண்பர்களிடம் ‘எந்த குரூப் நல்ல குரூப்’ என கேட்டுக்கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும்  ‘மேடம் நீங்கள் சொல்லுங்கள்… எந்த குரூப் நல்லது?’ என்றார்.

அவர் அருகில் அவர் மகனும் நின்றுகொண்டிருந்தான். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு +1 சேரும் மாணவனுக்கே உரிய துடிப்புடன் இருந்தான். ஆனால் முகத்தை சோகமாக வைத்திருந்தான்.

‘நான் அவர் கொடுத்த பேப்பரில் இருந்த கோர்ஸ்களை பார்வையிட்டேன்.

கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடத்திட்டங்களுடனான முதல் குரூப்பும், வரலாறு பாடம் இணைக்கப்பட்ட ஹிஸ்டரி குரூப் மட்டுமே இருந்தது, மற்ற குரூப்புகள் சேர்க்கை நிரம்பி விட்டது என்றார்கள்.

நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பை தேர்ந்தெடுக்கச் சொன்னேன்.

‘பார்த்தியா மேடம் கூட அதைத்தான் எடுக்கச் சொல்கிறார்…’ என்று மகனை சம்மதிக்க வைக்க முயற்சித்தார் கடை உரிமையாளர்.

அவனோ விருப்பமில்லாமல் தன் எதிர்ப்பைக் காட்ட முகத்தை திருப்பிக்கொண்டான்.

‘பாருங்க மேடம், வாழ்க்கையில தான் என்னவாகனும்னே ஒரு குறிக்கோள் இல்ல… நாம சொல்வதையும் கேட்கறதில்ல…’ என்று கடை உரிமையாளர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அந்த மாணவனைப் பார்த்து ‘உன் குறிக்கோள் என்ன?’ என்றேன்.

எப்போதடா கேட்பேன் என்று காத்திருந்ததைப் போல ‘போலீஸ் ஆகணும்’ என்றான்.

‘அட, போலீஸா… அப்போ ஹிஸ்டரி குரூப் எடுத்து படிக்கலாமே, பின்னாளில் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் என பணியில் உயர தேர்வுகள் எழுத உதவியாக இருக்குமே…’ என்றேன்.

அந்த மாணவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

‘ஆமாங்கா… நானும் அப்பா கிட்ட அதைத்தான் சொன்னேன். ஆனா அவர்தான் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் சேரணும்னு பிடிவாதம் பிடிக்கிறார்…’ என்றான் அந்த மாணவன்.

அப்பா பிடிவாதம் பிடிக்கிறார் என்று அந்த மாணவன் சொன்னது சட்டென எனக்கு சிரிப்பை வரச் செய்தது. ஆனால் சிரிக்கவில்லை.

‘சார், உங்க மகனுக்கு போலீஸ் ஆகணும் என்பதுதான் குறிக்கோள் எனும்போது அதற்கு உதவும் கோர்ஸில் சேர்த்துவிடுங்கள்… நன்றாக வருவான்…’ என்றேன்.

‘மேடம் அந்த குறிக்கோள் நிறைவேறவில்லை என்றால் என்ன செய்வது… எந்த வேலைக்கும் பொருந்தும் வகையில் ஒரு கோர்ஸில் சேரச் சொல்கிறேன்… அத்துடன் அவனுக்கு ஐபிஎஸ் ஆகும் அளவுக்கெல்லாம் அறிவு கிடையாது மேடம்… அவனால் அந்த அளவுக்கெல்லாம் செல்ல முடியாது…’ என எதிர்மறையாகவே பேசினார்.

‘சார், அவனுடைய அடிப்படை குறிக்கோளில் அவன் ஜெயித்து விட்டால் அந்தத் துறையில் மேலே மேலே உயர்வது அப்படி ஒன்றும் கஷ்டம் கிடையாது. அவனது குறிக்கோள் நிறைவேறிய திருப்த்தியே அவனை மேலே உயர்வதற்கு அவன் மனதையும் உடலையும் தயார்படுத்தும். அறிவும் விசாலமாகும்…’ என்று அந்த மாணவனுக்கு ஆதரவாக பேசினேன்.

‘அப்படியா சொல்றீங்க…’ என்று அவர் சொல்ல நான் நகர்ந்தேன்.

‘வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறிக்கோள் இருக்கணும்… போலீஸ் ஆகணும் அப்படி இப்படி என வாழ்க்கைக்குப் பொருந்தாததையெல்லாம் குறிக்கோள் என்று வைத்துக்கொண்டு உயிரை எடுக்கறே…’ என்று அந்தக் கடை உரிமையாளர் தன் மகனை திட்ட ஆரம்பித்தது என் காதில் விழுந்தாலும் நான் கண்டுகொள்ளாமல் வந்த வேலையை முடித்து பணம் செலுத்தி விடைபெற்றேன்.

அந்த மாணவன் ஓடி வந்து ‘தேங்ஸ்கா…’ என்றான். நான் ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லி காரை நோக்கிச் சென்றேன்.

இப்படித்தான் நிறைய பெற்றோர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வத்தையும், குறிக்கோளையும் அடையாளம் கண்டுகொண்டாலும் பிள்ளைகளின் குறிக்கோளும் தங்கள் குறிக்கோளும் ஒன்றாக இல்லை என்றால் தங்கள் பிள்ளைகள் பொறுப்பற்று இருப்பதைப் போலவும், குறிக்கோளை தேர்ந்தெடுக்கவே தெரிவதில்லை என்பதைப் போலவும் நினைத்துக்கொண்டு அவர்களின் திறமைகளை வளர்த்தெடுக்க உதவுவதில்லை. அதோடு நிற்கிறார்களா ‘இந்த காலத்து பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் குறிக்கோளே இல்லை’ என்பதுபோல அவர்களை சற்றே இறக்கியும் பேசுகிறார்கள்.

குழந்தைகளின் திறமைக்கும் குறிக்கோளுக்கும் ஏற்ற படிப்பையும் அதற்கான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. எதற்குமே வாய்ப்பில்லாதபோது கிடைத்த குரூப்பை தேர்ந்தெடுக்கலாம். கிடைத்த வேலையை செய்யலாம். கிடைத்த பாதையில் செல்லலாம்.

ஆனால் சூழலை ஏற்படுத்த வாய்ப்பிருக்கும்போது கட்டாயம் அதற்கான முன்னெடுப்புகளை செய்து அவர்களுக்கான பாதையை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

புரிந்துகொள்வோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 8 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon