ஜம்முனு வாழ காம்கேரின் OTP-253: விருந்துக்குச் செல்வதும் ஒரு கலையே!

பதிவு எண்: 984 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 253
செப்டம்பர் 10, 2021 | காலை: 6 மணி

விருந்தோம்பல் மட்டுமல்ல, விருந்துக்குச் செல்வதும் ஒரு கலையே!

திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் விருந்தினர்களை உபசரிப்பதோடு பெரும்பாலும் அவரவர்கள் நிகழ்ச்சி தொடர்பாகவே அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

நாம் கூடுமானவரை அவர்களை தொந்திரவு செய்யாமல் நிகழ்ச்சிக்குச் சென்று நாம் வந்ததை அறிமுகம் செய்துகொண்டு, அமர்ந்து நிகழ்ச்சியை கவனித்துவிட்டு, தேவைப்பட்டால் உதவிசெய்து, சம்மந்தப்பட்டவரை மனதார வாழ்த்திவிட்டு, வயிராற சாப்பிட்டு சொல்லிக்கொண்டு கிளம்புவதுதான் நாகரிகம்.

குறிப்பாக நான் உங்களுடன்தான் சாப்பிடுவேன் என சொல்லி காத்திருந்து அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது.

ஏனெனில் அவர்கள் குடும்ப நிகழ்ச்சி எனும்போது விருந்தினர்களை அனைவரையும் கவனித்துவிட்டு தங்கள் குடும்பத்துடன் கடைசியில்தான் சாப்பிடுவார்கள். அவர்கள் நம்முடன்தான் சாப்பிட வேண்டும் என பிடிவாதமாக இருக்கும்போது சமயத்தில் விழா பிசியினால் அவர்கள் நம்மை கூப்பிட மறப்பதற்குக்கூட வாய்ப்புண்டு.

ஒரு இலக்கியவாதியை எங்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன். அவர் எவ்வளவு சொல்லியும் சாப்பிடும் நேரத்தில் சாப்பிடச் செல்லாமல் என்னுடன்தான் சாப்பிடுவேன் என காத்திருந்தார். இடையில் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த என் சகோதரன் சகோதரியையும் அறிமுகம்  செய்து வைத்திருந்தேன்.

நிகழ்ச்சி பிசியில் அவர் காத்திருக்கிறேன் என சொன்னது நினைவில் இல்லாதது மட்டுமில்லை அவர் கண்களில் படவேயில்லை.

நாங்கள் சாப்பிடப் போகும்போது மதியம் 1 மணி ஆகியிருந்தது. பாதி சாப்பாட்டில் அவர் நினைவு வர ஓடினேன்.

அவர் கோபமாக  உங்கள் சகோதரன் என்னைக் கடந்து செல்லும்போதுகூட சரியாக பார்க்கவில்லை. கொஞ்சம் கூட நாகரிகமே இல்லை அப்படி இப்படி என புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு அவர்கள் நிகழ்ச்சி முடிந்து விருந்தினர்களை அனுப்பிவிட்டு குடும்பத்துடன் நேரம் செலவிடும்போதுதான்  நானும் சாப்பிடுவேன் என சொல்லுவது நாகரிகமான செயலா?

அவருக்கு அவர் தவறை எடுத்துச் சொல்லும் நேரம் அதுவல்ல என்பதாலும், அன்று அவர் என் விருந்தினர் என்பதாலும் அவரை சமாதானப்படுத்தி சாப்பிட அழைத்துச் சென்றேன்.

பிறகொரு நாள் போனில் அவரிடம் அவர் தவறை நாசூக்காக எடுத்துச் சொன்னேன். புரிந்துகொண்டாரா இல்லையா என எனக்குத் தெரியாது. ஆனாலும்  சுட்டிக் காட்டுவது என் கடமை என்பதால் சுட்டிக் காட்டினேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 3 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari