பதிவு எண்: 987 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 256
செப்டம்பர் 13, 2021 | காலை: 6 மணி
உங்கள் பேச்சு செல்லுபடியாக வேண்டுமா?
பொதுவாக கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவருமே நான் பேசும் துறை சார்ந்த விஷயங்கள் குறித்து அறிந்திருப்பவர்களாக இருக்க மாட்டார்கள். அந்தத் துறையில் அனுபவம்மிக்கவர்கள், அனுபவம் குறைந்தவர்கள், அறிமுகமே இல்லாதவர்கள் என மூன்று பிரிவினர்கள் இருப்பார்கள்.
எனவே மூன்று பிரிவினருக்கும் நான் பேசுகின்ற விஷயத்தின் சாராம்சம் சென்றடைய வேண்டும் என்பதால் சில நுணுக்கங்களைப் பின்பற்றுகிறேன்.
ஆம். ஒரு விஷயத்தை பொதுவெளியில், மேடை நிகழ்ச்சிகளில், ஆன்லைன் மீட்டிங்குகளில் நான் பேசும்போது மூன்றாக பிரித்துக்கொள்கிறேன்.
ஒன்று நான் சொல்ல வருவதை நான் கற்றறிந்த வகையில் என் அனுபவத்தை அப்படியே பகிர்வேன். நான் பேசும் துறையினர் கலந்துகொண்டிருந்தால் அவர்களால் அதை இயல்பாக புரிந்துகொள்ள முடியும்.
அடுத்ததாக அதே துறையில் அனுபவம் குறைந்தவர்களுக்காக கொஞ்சம் புரியாதவர்களுக்காக நான் பேசியதை மீண்டும் விரிவாகவும் பொறுமையகாவும் எடுத்துரைப்பேன்.
இறுதியாக அந்தத் துறை குறித்து அறிமுகமே இல்லாதவர்களுக்காக மிக அடிப்படையில் இருந்து பேசுவேன்.
உரையை முடிக்கும் தருவாயில் நான் பேசியதன் சாராம்சத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்லி நிறைவு செய்வேன்.
‘அட இது சூப்பரா இருக்கே…’ நினைக்கிறீர்களா?
இது ஒன்றும் பெரிய விஷயமல்ல.
வீட்டில் நாம் அனைவரும் செயல்படுத்தும் நுணுக்கம்தான். ஆம். ஒரு விஷயத்தை நாம் வீட்டில் நம் அப்பா அம்மாவிடம் எடுத்துச் சொல்லும்போது ஒருவிதமாக சொல்ல வேண்டியிருக்கும். அதே விஷயத்தை நம் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லும்போது வேறுவிதமாக சொல்ல வேண்டியிருக்கும். அதேயே நம் உறவினர்களிடம் சொல்லும்போது அவர்களுக்குப் புரியும் விதத்தில் சொல்ல வேண்டியிருக்கும். இதற்கு நடுவில் நம் தாத்தா பாட்டி இருந்தால் அவர்களிடம் பகிரும்போது இந்த மூன்றைத் தவிர வெறொரு விதமாக எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கும்.
சொல்லும் விஷயம் ஒன்றுதான். ஆனால் எடுத்துரைக்கும் விதத்தில் மட்டுமே மாற்றம். பொய்யாக மாற்றிச் சொல்வதில்லை. உண்மையை அவரவர் வயதுக்கு ஏற்ப அவரவர் புரிதலுக்கேற்ப எடுத்துச் சொல்வதில்தான் சூட்சுமம்.
இதைத்தான் நான் பொதுவெளியிலும் பின்பற்றுகிறேன். அதனால்தான் என் எழுத்தைப் போலவே பேச்சும் எளிமையாக இருப்பதாக சொல்கிறார்கள்.
நம் வீடும், குடும்பமும், குடும்ப அமைப்பும், குடும்ப உறுப்பினர்களும் ஒரு பல்கலைக்கழகத்துக்கு ஒப்பாகும். மேம்போக்காக வாழ்ந்து செல்பவர்கள்தான் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள வெளியே வழி தேடுவார்கள்.
உங்கள் வீட்டை, குடும்பத்தை, உறவுகளை உற்று நோக்குங்கள். ஆயிரம் பாடங்களை அவை கற்றுக்கொடுக்கும்.
முயற்சிப்போமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP