பதிவு எண்: 988 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 257
செப்டம்பர் 14, 2021 | காலை: 6 மணி
வாழும் கலை!
நீண்ட காலங்களுக்குப் பிறகு ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். இருவருக்கும் தெரிந்த பொதுவான நபர்கள் குறித்து பேசினோம். ஒருசிலரை பற்றிக் குறிப்பிடும்போது ‘எப்படி சமாளிக்க முடிந்தது இதுபோன்ற நபர்களை?’ என்று கேட்டார்.
‘மனிதாபிமானம் உள்ளவர்களை புரிந்துகொண்டு நட்பாவதற்கும் பழகுவதற்கும்தான் காலம் அதிகமெடுக்கும். மனித இயந்திரங்களை எனக்கு வெகு சீக்கிரத்திலேயே நன்றாக ஹேண்டில் செய்யத் தெரியும்’ என்றேன்.
நான் சொன்ன ‘ஹேண்டில்’ என்ற வார்த்தை அவருக்கு வியப்பாக இருக்க, மேலும் நான் விளக்கினேன்.
‘மனிதர்களாக இருந்தால் அன்பு செலுத்தலாம், இயந்திரங்களுக்கு உணர்வுகள் இல்லாததால் அவற்றை எப்படி கையாள்வது என்று தெரிந்துகொண்டால் போதுமே’என்றேன்.
நமக்கு எதுவுமே தெரியாது என நினைத்து நம்மை ஏமாற்றுவதாகவும் ஒதுக்குவதாகவும் நினைத்துக்கொண்டு செயல்படும் மனிதர்களையும் கடந்துதானே வர வேண்டியுள்ளது.
அப்படி கடந்து வரும் பாதையில் நாம் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்வதில்தான் சூட்சுமம் உள்ளது.
கிராமங்களில் ஓடு மாற்றுபவர்கள் ஓடு மாற்றிய பிறகு அதில் கொஞ்சம் பட்டாணியை வீசிவிட்டுச் செல்வார்களாம்.
அதைத் தின்பதற்காக அவ்வப்பொழுது பறவைகளும், குரங்குகளும் வந்து அவற்றை எடுக்க முற்படும்போது ஓடு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டே வருமாம். நாளடைவில் ஓட்டு வீட்டுக்குள் வெயிலும் மழையும் அழையா விருந்தாளியாய் எட்டிப் பார்க்கத் தொடங்குமாம்.
சில மாதங்களுக்குப் பிறகு திரும்பவும் அவர்கள் அதே ஓடுமாற்றும் நபரைத்தான் அழைப்பார்கள் சரி செய்வதற்கு.
ஓடு மாற்றுபவரின் செயலும் அந்த மக்களுக்குத்தெரியும். தங்கள் செயல் அந்த மக்களுக்குத் தெரியும் என்பது ஓடு மாற்றுபவருக்கும் தெரியும்.
தெரிந்தே சில விஷயங்களுக்கு இடம்கொடுத்துத்தான் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP