பதிவு எண்: 986 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 255
செப்டம்பர் 12, 2021 | காலை: 6 மணி
எத்தனை எத்தனை ‘அவ்வளவுதான்’!
எனக்காக நானே குரல் கொடுக்கிறேன் – அதனால் நான் எப்போதுமே விவாதம் செய்யக் கூடியவள் என்று அர்த்தம் கிடையாது. அந்த குறிப்பிட்ட விஷயத்தின்பால் உள்ள நியாயத்துக்காக பேச வேண்டி இருந்திருக்கலாம். அவ்வளவுதான்.
புலம்புகிறேன் – அதனால் நான் தொட்டால் சிணுங்கி என்று அர்த்தம் கிடையாது. அந்த குறிப்பிட்ட விஷயம் உள்ளுக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அவ்வளவுதான்.
முடியாது என்கிறேன் – அதனால் நான் சுயநலக்காரி என்றோ, மற்றவர் நலனில் அக்கறை இல்லாதவளோ கிடையாது. அந்த குறிப்பிட்ட விஷயத்தை செய்ய முடியாத சூழல் என்கிறேன். அவ்வளவுதான்.
கோபப்படுகிறேன் – அதனால் நான் ஆத்திரக்காரி என்று அர்த்தம் அல்ல. அந்த விஷயம் எனக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே பொருள். அவ்வளவுதான்.
உணர்ச்சிவசப்படுகிறேன் – அதனால் நான் பலவீனமானவள் என்று அர்த்தம் அல்ல. அந்த குறிப்பிட்ட விஷயம் நெகிழ்ச்சியாக இருந்தது என்று மட்டுமே அர்த்தம். அவ்வளவுதான்.
சோர்வாக இருக்கிறேன் – அதனால் நான் எப்போதுமே மந்த மனநிலையில்தான் இருப்பேன் என்று அர்த்தம் அல்ல. அந்த குறிப்பிட்ட தினம் உடல் நலம் இல்லாமல் இருந்திருக்கலாம். அவ்வளவுதான்.
சோகமாக இருக்கிறேன் – அதனால் எப்போதுமே அழுமூஞ்சி என்று அர்த்தம் அல்ல. அன்றைய தினம் ஏற்பட்ட சில வருத்தங்களின் தாக்கமாக இருக்கலாம். அவ்வளவுதான்.
படபடப்பாக இருக்கிறேன் – அதனால் எப்போதுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என வேலை செய்வேன் என்று அர்த்தம் கிடையாது. அதற்கு அன்றைய தினம் ஏற்பட்ட வேலை பளு காரணமாக இருக்கலாம்.
தைரியமாக இருக்கிறேன் – நான் தைரியமாக இருப்பதால் திமிராக இருக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது. என் உணர்வுகளை மற்றவர்கள் மதிக்கவில்லை என்றால் அது என் பிரச்சனை இல்லை. எதிராளியின் மனோவியாதி என்ற தெளிவு அதிகமாக என்னிடம் உள்ளது என்றே பொருள். அவ்வளவுதான்.
இப்படி நிறைய ‘அவ்வளவுதான்’ நம் எல்லோருக்குள்ளும் இருக்கும். ஒருசிலரால் மட்டுமே சரியான நேரத்தில் சரியான கோணத்தில் சொல்ல முடிகிறது.
என்னால் சொல்ல முடிகிறது என்பதில் பெருமையே!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP