ஜம்முனு வாழ காம்கேரின் OTP-259: அன்பை ரசிப்பதும் அன்பின் ஒரு பரிணாமமே!

பதிவு எண்: 990 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 259
செப்டம்பர் 16, 2021 | காலை: 6 மணி

அன்பை ரசிப்பதும் அன்பின் ஒரு பரிணாமமே!

எனக்கும் அப்பாவுக்கும் கண் பரிசோதனை செய்து கண்ணாடி மாற்றும் படலம் நல்லபடியாக முடிய 2 வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. கண்ணாடியகத்தில் ஏற்பட்ட  சிற்சில பிரச்சனைகளுக்கு நடுவே, மருத்துவமனை மற்றும் கண்ணாடியகத்தின் ஒத்துழைப்பு இருந்ததால் பிரச்சனைகள் மனதை அழுத்தாமல் இலகுவாக தீர்வானது.

நேற்றுதான் எங்களுக்கான கண்ணாடி வேலைகள் முழுமை பெற்றன. எங்களுக்குப் பொருத்தமான கண்ணாடி மற்றும் ஃப்ரேம் தேர்வு செய்வதிலிருந்து ஆரம்பித்து அது முறையாக வந்து சேர்ந்து அது எங்கள் கண்களுக்குப் பொருத்தமாக வந்தமர்வது வரை எங்களுக்காக அமர்த்தப்பட்டிருந்த இரண்டு பணியாளர்களின் கஸ்டமர் சர்வீஸ் வியக்க வைத்தது. எந்த இடத்திலும் நாங்கள் கோபப்படவே வாய்ப்பளிக்காத வகையில் அவர்களின் பேச்சும், செய்கையும் அமைந்திருந்தது. இப்படிப்பட்ட பணியாளர்களே நிறுவனங்கள் வளர்ச்சிக்கு காரணகர்த்தா.

இதெல்லாம் பெரிய விஷயமல்ல. நேற்று என் அப்பாவின் கண்ணாடியில் ஒரு சிறு பிரச்சனை. அதற்காக அவர்கள் இருவரும் எங்கள் நிறுவனத்துக்கே வந்து விட்டனர். பிரச்சனைக்கான தீர்வு முடிந்ததும் அவர்கள் இருவரும் ஒருசேர என்னிடம் கேட்டார்கள் ‘நீங்கள் இவ்வளவு பெரிய ஆளாக இருந்துகொண்டு எப்படி இப்படி எளிமையாக இருக்கிறீர்கள்?’

எனக்கு அந்த புகழ்ச்சி ஒரு நிமிடம் கூச்சமாக இருந்தது.

‘இவ்வளவு பெரிய ஆளா… என்ன சொல்கிறீர்கள்?’ என்றேன்.

‘ஆமாம் மேடம், எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்கள்… அது பெரிய சாதனை இல்லையா?’ என்றனர்.

‘ஓ… உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்றேன் ஆச்சர்யமாக.

‘கண்ணாடி ஃப்ரேம் தேர்ந்தெடுக்கும்போது பொதுவெளியில் ஷூட்டிங் எடுத்தால் கண்ணாடி கலர் மாறாமல் இருப்பதற்காக ஸ்பெஷலாக தனிக்கண்ணாடி வேண்டும் என சொல்லி தேர்ந்தெடுத்தபோதே நாங்கள் உங்கள் பெயரை கூகுள் செய்து பார்த்தோம்… தெரிந்துகொண்டோம் மேடம்…’ என்றனர்.

‘ஓ… ரொம்ப சந்தோஷம்…’ என்றேன் உற்சாகமாக.

என் உற்சாகம் அவர்களையும் தொற்றிக் கொள்ள அவர்கள் இன்னும் சில தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

‘ஒரு நிறுவனம் நடத்துகின்ற பந்தா எதுவுமே இல்லையே… இப்படி எளிமையான ஒருவரை நாங்கள் பார்த்ததே இல்லை… எப்படி மேடம் இத்தனை சிம்ப்பிளாக இருக்க முடிகிறது?’ என்றனர்.

இதெல்லாம் எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. அவர்கள் சொன்ன ஒரு விஷயத்தில் உண்மையில் நெகிழ்ந்து போனேன்.

அப்படி என்ன சொன்னார்கள் அவர்கள் என தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? சொல்கிறேன்.

‘நீங்கள் உங்கள் அப்பாவை நன்றாக பார்த்துக் கொள்கிறீர்கள்…’ – இதுதான் அவர்கள் சொன்னது.

‘அப்படியா, எப்படி சொல்கிறீர்கள்?’ என்றேன் ஆச்சர்யமாக.

‘ஆமாம் மேடம் நீங்கள் உங்கள் அப்பாவுடன் ஐந்தாறு முறை ஆப்டிகல்ஸ் வந்து சென்று விட்டீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அப்பாவுடன் பேசும் தொணியை வைத்தே கண்டுபிடித்தோம்…’

‘அப்படியா… அப்படி என்ன வித்தியாசமாக தெரியும் விதத்தில் நான் நடந்து கொண்டேன்…’ என்றேன் ஆச்சர்யம் அடங்காத நிலையிலேயே.

‘நாங்கள் கஸ்டமர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதில் இருந்தே புரிந்துகொள்வோம் மேடம்’ என்றனர்.

‘அட அப்படியா, நான் என்ன அப்படி பேசினேன் என் அப்பாவிடம்?’ என்றேன் ஆவலும், உற்சாகமும் அடங்காத ஆச்சர்யத்துடன்.

‘எல்லோரும் வீட்டுப் பெரியவர்களுக்கு கண்ணாடி ஃப்ரேம் ஆர்டர் செய்தால் ஏதோ ஒன்றை ஆர்டர் செய்வார்கள்… இத்தனை ஆசை ஆசையாக பார்த்துப் பார்த்துப் பொருத்தமாக தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அதுவும் கண்ணாடி புது ஃப்ரேமுடன் வந்த பிறகு அப்பாவுக்கு போட்டுப் பார்க்கச் சொல்லி படிக்க முடிகிறதா, மொபைலில் வாசிக்க முடிகிறதா, கையோடு கொண்டு வந்திருந்த லேப்டாப்பில் எழுத்துகள் தெளிவாக புரிகிறதா என்றெல்லாம் பார்த்துப் பார்த்து கேட்டு அதை புகைப்படமும் எடுத்தீர்களே… அதில் இருந்தே நாங்கள் தெரிந்துகொண்டோம்…’ என்றனர்.

‘அது சரி மற்றவர்கள் இப்படி எல்லாம் செய்ய மாட்டார்களா?’ என்றேன்.

‘இல்லை மேடம், ஃப்ரேம் வந்ததும் போட்டுப் பார்க்கச் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். அவர்களை ரசித்து ரசித்தெல்லாம் பார்க்கவும் மாட்டார்கள். பேசவும் மாட்டார்கள். சரியாக உள்ளதா, பிடித்திருக்கிறதா, ஏதேனும் சரி செய்ய வேண்டுமா என்ற கேள்விகளை எல்லாம் கேட்கவே மாட்டார்கள்…’ என்று அவர்களும் உற்சாகமாக பதிலளித்தனர்.

நான் அப்பாவைப் பார்த்து சிரித்தேன். இந்த சிரிப்பிற்கான அர்த்தம் எங்களுக்கு மட்டுமே தெரியும். காரணம். நாங்கள் நண்பர்களைப் போல காரசாரமாக சண்டையிட்டும் கொள்வோம். அது அவர்களுக்குத் தெரியாதல்லவா?

பொதுவாக நான் இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக அணுகுவது பிறர் பார்வையில் கொஞ்சம் எரிச்சலை உண்டு செய்யும் என்றே எண்ணி இருந்தேன். ஆனால் அதில் உள்ள அன்பையும் புரிந்துகொள்கிறார்கள் என்பதை அறிந்தபோது உண்மையில் நேற்றைய தினம் கொண்டாட்டமானது.

அன்பு காட்டுவதைப் போல, அன்பை ரசிப்பதும் அன்பின் ஒரு பரிணாமமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 1,212 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon