ஜம்முனு வாழ காம்கேரின் OTP-260: மன்னிக்க வேண்டாம், உணர்த்துங்கள் போதும்! (Sanjigai108)

பதிவு எண்: 991 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 260
செப்டம்பர் 17, 2021 | காலை: 6 மணி

மன்னிக்க வேண்டாம், உணர்த்துங்கள் போதும்!

உணர்த்துவதும், மறப்பதும் கூட நாம் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளியில் வருவதற்கான மிகப்பெரிய சக்தி. அப்படிச் செய்யும்போது நம்முள் அமைதியும் இறைத் தன்மையும் தானாகவே புகுந்துகொள்வதையும் உணரமுடியும்.

நம்மை யாரேனும் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஏமாற்றி இருந்தால் அல்லது காயப்படுத்தி இருந்தால் அந்த விஷயத்தில் நமக்கு சாதகமான ரிசல்ட் கிடைக்க நம்மால் இயன்ற அளவு போரடலாம்.

சாதகமான முடிவு கிடைக்கவே வாய்ப்பில்லை என்றபட்சத்தில், நமக்கு அவர் ஏமாற்றியது தெரியும் என்ற அளவில் அதை அவருக்கு உணர்த்திவிட்டு அதை மறந்து அந்த பிரச்சனையில் இருந்து வெளியேறி விடுவதுதான் நம் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் நல்லது.

விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு அதன் மூலம் இன்னமும் ஸ்ட்ரெஸ் அதிகமாகாமல் இருக்க அது ஒன்றுதான் வழி.

தாம் பாதிக்கப்படும்போது தமக்காகக் கூட குரல் கொடுக்க பயந்துகொண்டு இயலாமையில் எத்தனையோ பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்படி வாழ்வது வாழும்போதே சாவதற்கு சமமான செயல். தம் உணர்வுகளை தாமே மதிக்காமல் வாழும் மன அழுத்தமான வாழ்க்கை என்றாவது ஒருநாள் அவர்களை மூச்சு விட முடியாமல் அழுத்தி அதில் இருந்து அவர்கள் வெளியே வரவே முடியாத அளவுக்கு கொடும் சூழலை உண்டாக்கிவிடும்.

பிறருக்காகக் குரல் கொடுக்க வேண்டாம். தமக்காகக் கூட குரல் கொடுக்க முடியவில்லை என்றால் இந்த பிறவி எடுத்துதான் என்ன பயன்?

நம்மை நாம் மதிப்பதைத் தவிர, நமக்காக ஓடாக உழைக்கும் இந்த உடலுக்கும் உயிருக்கும் நாம் வேறென்ன பெரிதாக செய்துவிட முடியும்?

எனவே ஊருக்காக உழைக்க வேண்டாம், மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டாம், உங்களுக்காகவாவது குரல் கொடுங்கள். அப்படி செய்யாமல் இப்போதைக்கு பிரச்சனை தீர்ந்தால் போதும் என உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொண்டு வாழத் தொடங்கினால் அதுவே உங்களுக்குப் பழகிவிடும்.

ஆளைக் கொல்லும் அந்த தீய பழக்கத்தில் இருந்து வெளியே வருவது அத்தனை சுலபமல்ல. எனவே ஆரம்பத்திலேயே விழித்துக்கொள்ளுங்கள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 1,000 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon