ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1003
செப்டம்பர் 29, 2021 | புதன் கிழமை | காலை: 6 மணி
பொதுவெளியில் ஒரு சிறுதுளிதானே நாமெல்லாம்!
நம்முடைய செயல்பாடுகள் மற்றவர்கள் மனதை கொஞ்சமும் நோகடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்தான், அதே நேரம் மற்றவர்களால் நம் மனம் காயப்படுவதை அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எடுத்துச் சொல்லிவிட வேண்டும். அதைவிட்டு அந்த காயத்தை அப்படியே மனதுக்குள் பூட்டி வைத்துக்கொண்டே வாழ்ந்தால் அது வாழும்போதே கொஞ்சம் கொஞ்சமாக சாவதற்கு சமம். கரையான்போல நம் உணர்வுகளை சிதைத்துக்கொண்டே வரும். ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் எதிர்மறை விளைவுகளைக் கூட ஏற்படுத்தலாம்.
ஒரு பிளாஸ்டிக் கவரில் ஒரு பொருளை வைத்து இறுக மூடி பெட்டியில் வைக்க முற்படும்போது அதில் அடைபட்டிருக்கும் காற்றினால், அது நிறைய இடத்தை எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்க கவரில் பொருளை வைத்துவிட்டு மெல்ல மெல்ல அதில் இருக்கும் காற்றை வெளியேற்றிவிட்டு இறுக மூடினால் அந்த கவர் பாந்தமாக மூடிக்கொள்ளும், தன்னுள் உள்ள பொருளை பத்திரப்படுத்திக்கொள்ளும். தானும் சிதையாமல் தன்னுள் இருக்கும் பொருளுக்கும் சேதம் உண்டாக்காமல் இருக்கும். இதே லாஜிக் தான் நமக்கும்.
பிளாஸ்டிக் கவர்தான் நாம். அதில் வைக்கப்படும் பொருள்தான் நம் மனது. அதில் தேவையில்லாமல் இருக்கும் காற்றுதான் நம் பிரச்சனைகள். நம் மனம் பிரச்சனைகளுடனேயே இருந்துவந்தால் தேவையான விஷயங்களைவிட தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கி விடுவோம். நாம் நம் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவது நமக்கு மட்டும் அல்ல பிறருக்கும் பயன்தரும்.
சிலருக்கு தாங்கள் செய்யும் தவறுகள் தெரிவதில்லை. பலருக்கு தாங்கள் செய்வது தவறு என்றே புரிவதில்லை. இன்னும் சில அதிசயப் பிறவிகள் மற்றவர்களைக் காயப்படுத்த வேண்டும் என்பதை ஒரு குறிக்கோளாகவே வைத்திருப்பார்கள்.
இப்படி தெரியாமல் பாதி, புரியாமல் மீதி, வேண்டுமென்றே சொச்சம் என மற்றவர்கள் நம் மனதைக் காயப்படுத்துவதை நாம் உதாசினப்படுத்தினால் அது நம் செயல்பாட்டின் வீரியத்தை குறைத்துக்கொண்டே வரும். நம் உணர்வுகளை நாமே துச்சமாகக் கருதி அவமானப்படுத்துவதற்கு சமம்.
மற்றவர்களை உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ காயப்படுத்தி அவர்களின் துன்பத்தில் மகிழ்பவர்கள் மட்டும் சேடிஸ்ட்டுகள் அல்ல, எவ்வளவு எடுத்துச் சொல்லியும் மற்றவர்கள் மனதை புரிந்துகொள்ளாமல் தங்கள் செயல்பாடுகளில் இருந்து இம்மியும் மாறாமல் நடந்துகொள்பவர்களும் சேடிஸ்ட்டுகளே. அவர்கள் அந்த மனோபாவத்தின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள். காலமும் சூழலும் அது போலவே தொடர்ந்தால் அவர்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள். அப்படி அவர்கள் உருமாற்றம் அடைவதுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களிடம் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொண்டு வாழ்வது நம் உரிமை மட்டும் அல்ல. நம் கடமையும்கூட.
நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளும் சின்ன சின்ன விஷயங்களில் கூட பிறர் நலனும் அடங்கியுள்ளது. நமக்காக செய்துகொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மறைமுகமாக பொதுநலனும் உள்ளது. ஏனெனில் பொதுவெளியில் ஒரு சிறுதுளிதானே நாமெல்லாம்.
முயற்சிப்போமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP