ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1002: வாழ்வோம், வாழ விடுவோம்!      

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1002
செப்டம்பர் 28, 2021 | செவ்வாய் |  காலை: 6 மணி

வாழ்வோம், வாழ விடுவோம்!      

நம்மை யாராவது பாராட்டுவார்கள், நம்மை கொண்டாடுவார்கள், நம்மை அங்கீகரிப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தால் நம் நேரம்தான் விரயம்.

நம்முடைய சின்ன சின்ன சந்தோஷங்களை நாமே கொண்டாடத் தொடங்குவோம். அது நமக்குள் உண்டாக்கும் உற்சாகத்தை அப்படியே பொக்கிஷமாக்கிக்கொள்வோம். அதுவே நம் அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு ஊக்கமாக அமையும்.

அது மற்றவர்கள் பார்வையில் ‘இது என்ன பெரிய விஷயமா, இதற்குப் போய் இத்தனை அலம்பலா?’ என்று யோசிக்க வைக்கலாம். அதனால் என்ன, யோசித்துவிட்டுப் போகட்டுமே. அந்த யோசனைதான் நம் வெற்றி.

‘வாழ வேண்டும்’ என்பதைவிட ‘வாழ்ந்துகாட்ட வேண்டும்’ என்பதே பலரை முன்னேற விடுவதில்லை. நாம் மகிழ்ச்சியாக வாழ்வதை யாருக்கு நிரூபணம் செய்ய வேண்டும்? நம் நண்பர்களுக்கா, உறவினர்களுக்கா, எதிரிகளுக்கா, நம்மை புரிந்துகொள்ளாதவர்களுக்கா… யாருக்கு?

நம்மைப் புரிந்துகொள்ளாதவர்களும், நம் எதிரிகளும் நாம் நன்றாக வாழும்போது மட்டும் நம்மை புரிந்துகொண்டு நட்புப் பாராட்டிவிடப் போகிறார்களா என்ன?

நம் வெற்றிக்கும் நம் சந்தோஷத்துக்கும் அவர்கள் கோணத்தில் ஆயிரம் தவறான காரணங்களை பட்டியலிட்டு, எதிரிகளாக இருப்பவர்கள் இன்னும் மோசமான எதிரிகளாக மாறுவார்கள். அதுதான் நடக்கும்.

இந்த உலகில் பலருக்கு நித்தியப்படி வாழ்க்கையே சவால்தான். சாதனைதான். எனவே நாம் யாருக்கும் வாழ்ந்தெல்லாம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. வாழ்வோம்! அதுதான் முக்கியம். அதுவே ஆகச்சிறந்த வைராக்கியம்.

அந்த வைராக்கியத்தை வளர்த்துக்கொள்வதற்கு ஒரே வழி, வெளியில் இருந்து மூன்றாவது நபர் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற மாயையில் இருந்து வெளிவருவதுதான்.

வாழ்வோம், வாழ விடுவோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 1,915 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon