ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1004: ‘பஃபே’ மனிதர்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1004
செப்டம்பர் 30, 2021 | வியாழன் | காலை: 6 மணி

‘பஃபே’ மனிதர்கள்!

பிறர் மனதைக் காயப்படுத்தக் கூடாது என்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு நம்மைக் காயப்படுத்துபவர்களுக்கு அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிவித்துவிட்டு மனரீதியாக நாம் நம்மை  பாதுகாத்துக்கொண்டு வாழ்வது நம் உரிமை மட்டும் அல்ல. நம் கடமையும்கூட என்று எழுதியிருந்த பதிவைப் படித்த ஒரு சிலர் ‘தங்களது தவறை யாரேனும் சுட்டிக்காட்டினால் அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தின் மீதும் ஜென்மப் பகை கொள்வர். அதற்கு என்ன செய்வது?’ என்று கேட்டிருந்தார்கள்.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக வாழ வேண்டும் என்பதும், பிற உயிரை தன்னுயிர் போல கருதி ஊறு விளைவிக்காமல் கருணையுடன் வாழ வேண்டும் என்பதும்தான் இயற்கையின் நியதி. ஆனால் அந்த அனுசரணையும் கருணையும் நம்முடன் இணைந்து பயணம் செய்பவர்களிடம் இல்லாவிட்டாலும், குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட இல்லாமல் செயல்படுவார்களேயானால், முதலில் நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கான முதற்படிதான் சுட்டிக் காட்டுவது.  நாம் காயப்படுவதை எடுத்துச் சொல்லிவிடுவதுதான் நம் மனதுக்கும் நம் உணர்வுகளுக்கும் நாம் செய்யும் முக்கியமானக் கடமை.

இதன் பின்விளைவுகள் எப்படி சுமூகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? ஜென்மப் பகை கொள்ளும் அளவுக்குத்தான் விரோதம் வைப்பார்கள். தாங்கள் செய்கின்ற தவறுகளை தவறு என்றே ஒத்துக்கொள்ளாதவர்கள் அதை சுட்டிக் காட்டும்போது மட்டும் நம் மீது நட்புப் பாராட்டிவிடப் போகிறார்களா அல்லது உணரத்தான் செய்துவிடப் போகிறார்களா?

நம் எல்லோருக்குமே நாம் செய்வது சரியா தவறா என்று மற்றவர்கள் வந்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நம் மனசாட்சியே அந்த வேலையைச் செய்யும். ஆனால் அதை துச்சமாகக் கருதி ஒதுக்கித் தள்ளுவதால்தான் நாம் செய்கின்ற தவறுகளின் எண்ணிக்கை சிறியதும் பெரியதுமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நம்மைச் சார்ந்தவர்களின் செய்கைகள் நம்மை பாதிக்காவிட்டாலும் பிறருக்கு ஊறு தருவதாக இருப்பது தெரிந்தால்கூட அதைச் சுட்டிக் காட்ட வேண்டும். ஒருசிலர் மற்றவர்களின் செய்கைகள் தங்களுக்கு ஊறு செய்யாதவரை அவர்களை ‘ஆஹா ஓஹோ’ எனக் கொண்டாடுவார்கள்.

அவர்கள் தங்களை ஒரு சிறு துளி காயப்படுத்திவிட்டால்போதும், ஊர் உலக நியாயங்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு அப்போதுதான் அவர்களின் செய்கைகளை முதன் முதலில் பார்ப்பதைப் போல புலம்பித் தீர்ப்பார்கள். இவர்கள் தவறு செய்பவர்களைவிட மோசமானாவர்கள். அவர்களையும் இனம் கண்டு மனதளவில் தள்ளி இருக்கலாம். அதற்காக அவர்களிடம் விரோதத்தையோ எதிரித்துவத்தையோ காட்டச் சொல்லவில்லை. புரிந்துகொண்டு ஒதுங்கி பாதுகாப்பாக பயணிக்கச் சொல்கிறேன். அவ்வளவுதான்.

நீங்கள் நடந்து செல்லும் தெருவில் ஒரு வெறி நாய் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு அறிவுரை சொல்லி, தட்டிக்கொடுத்து அதன் வெறித்தனத்தை கட்டுப்படுத்த முயல்வீர்களா அல்லது நாய்கடியில் இருந்து ஒதுங்கி பாதுகாப்பாகச் செல்வீர்களா? மனசாட்சியைத் தொட்டு நேர்மையாக பதில் சொல்லுங்கள்.

இதற்கான பதில் உங்கள் அனைவருக்கும் தெரியும். இதே பதில்தான் ‘தங்களது தவறை யாரேனும் சுட்டிக்காட்டினால் அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தின் மீதும் ஜென்மப் பகை கொள்வர். அதற்கு என்ன செய்வது?’ என்ற கேள்விக்கும்.

நாமாக எடுத்துப் போட்டு சாப்பிடும் ‘பஃபே’ விருந்துக்கு செல்வதாக வைத்துக்கொள்வோம். உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவுபண்டங்கள் இருந்தால் அதைத் தவிர்த்து நமக்கு தேவையானதை எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடும் அதே நுணுக்கம்தான் மனிதர்களுடன் பழகுவதும்.

நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள், நல்லவர் போர்வையில் கெட்டவர்கள் என பலதரப்பட்டவர்களும் அவரவர்களின் டெம்ப்ளேட்டில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். சூசகமாய் பார்த்து நடந்துகொள்வதும் பாதுகாப்பாய் வாழ்வதும் நம் கடமை.

இந்த பூமியில் வாழ்வதற்கு எந்த அளவுக்கு நமக்கு உரிமை இருக்கிறதோ, அதே அளவுக்கு பாதுகாப்பாய் வாழ்வது என்பது நமக்கான மகத்தான கடமையும்கூட என்பதையும் நாம் மறக்க வேண்டாமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 606 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon