ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1005: சுயபச்சாதாபமும் ஒருவித தற்பெருமையே! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1005
அக்டோபர் 1, 2021 | வெள்ளி | காலை: 6 மணி

சுயபச்சாதாபமும் ஒருவித தற்பெருமையே!

பெரும்பாலானோரின் பிரச்சனை என்ன தெரியுமா? நமக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் நடக்கிறது, நாம் மட்டும்தான் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறோம், நமக்கு மட்டும்தான் நிராகரிப்புகள், ஏமாற்றங்கள், தோல்விகள் இதெல்லாம் என்ற நினைப்புதான் அவர்களின் பிரச்சனைகளை பெரிதாக்கிக் காண்பிக்கின்றன.

வாழ்க்கையில் யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை சொல்லுங்கள். எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதை அவரவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் சூட்சுமம் அடங்கியுள்ளது.

ஏழ்மையில் வாழ்பவர்களுக்கு நூறு ரூபாய் கடன் இருப்பது பெரிது என்றால், பணம் படைத்தவர்களுக்கு இலட்ச ரூபாய் கடன் வைத்திருப்பது பெரிது. தொழிலதிபர்களுக்கோ கோடிக் கணக்கில் கடன் இருப்பது பெரிது. அவ்வளவுதான். எப்படி இருந்தாலும் அவரவர்களுக்கு அவரவர் கடன் பெரிய விஷயம்தானே? அதை அவர்கள் எப்பாடுபட்டாவது அடைக்க வேண்டும்தானே? அந்த கடனை அடைக்க அவர்கள் எப்படி எல்லாம் முயற்சி எடுக்கிறார்கள் என்பதுதான் அந்த பிரச்சனையில் இருந்து மீள்வதின் சூட்சுமம். அதுவே வாழ்க்கையின் ஓட்டமும்கூட.

நம் மனதுக்குப் பிடிக்காத நிகழ்வுகள் நடக்கும்போது அல்லது நாம் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காதபோது அவை ஏமாற்றங்கள் என்றும் தோல்விகள் என்றும் முத்திரை குத்தப்படுகின்றன.

விருப்பமானது கிடைக்கவில்லை என்றாலே அதை நிராகரிப்பு என்றும் வீழ்ச்சி என்றும் நினைத்து நினைத்து ஏங்கினால், வாழ்க்கைக்கு அவசியமானதுகூட கிடைக்காதவர்கள் அதற்கு என்ன பெயரிட்டு அழுதுகொண்டிருக்க முடியும்?

அப்படி வருத்தப்பட ஆரம்பித்தால் நாம் வாழ்க்கையில் பெரும்பாலான நேரங்களில் தோல்வியின் சோகத்தினால் முடங்கிக் கிடக்க வேண்டியதுதான்.

ஒன்று தெரியுமா? இப்படி சதா சோகத்தில் மூழ்கி இருப்பதைக் கூட சுகமாக உணர்பவர்கள் இருக்கிறார்கள். ஆம். அது ஒருவிதமான சுய பச்சாதாபத்தை உண்டு செய்யும். அந்த சுயபச்சாதாபமே அவர்களையும் அறியாமல் அவர்களுக்குள் ஒரு கிளர்ச்சியை உண்டு செய்யும். அதனால் அவர்கள் தங்களுக்கு எப்பேற்பட்ட நல்லது நடந்தாலும் அதில் ஏதேனும் ஒரு குற்றம் குறை கண்டுபிடித்து, ‘தனக்கு மட்டுமே இப்படியெல்லாம் நடக்கிறது’ என்று புலம்புவார்கள். அதை பெருமையாக அடிக்கடி பிறரிடம் வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். இதை தாழ்வு மனப்பான்மை என்பார்கள் புரியாதவர்கள். ஆனால் இந்த மனப்பாங்கு ஒருவிதமான உயர்வுமனப்பான்மை.

எதுவுமே கஷ்டம் இல்லை என்றாலும் தாங்கள் நேர்மையாக இருப்பதையே பெரும் கஷ்டமாகக் கருதி, நேர்மையாக வாழ்வதைப் பெருமையாக நினைக்காமல் நேர்மையையே துக்கப்பட ஒரு காரணியாக எடுத்து வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருக்கும் பலரை  நாம் பார்க்கலாம்.

‘பாருங்கள், நான் எப்படியெல்லாம் உழைக்கிறேன். நான் எப்பேற்பட்ட நேர்மைவாதி. ஆனால் என் நேர்மையான செயல்பாட்டினால் மற்றவர்களால் புறக்கணிக்கப்படுகிறேன். இருந்தாலும் நான் நேர்மையை விட்டு விலகிச் செல்லவில்லை…’ அப்படி இப்படி என உலகில் நேர்மையாக இருப்பவர்கள் எல்லோருமே கஷ்டப்பட வேண்டியதுதான் என்ற நோக்கில் சதா தங்கள் நேர்மையை தம்பட்டம் அடிக்காத குறையாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

உண்மையிலேயே நேர்மையாக இருப்பவர்கள், தாங்களே தங்கள் நேர்மையை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்க மாட்டார்கள். நேர்மையாக இருப்பவர்கள் மட்டுமல்ல, அன்பாக இருப்பவர்கள்கூட ‘நான் எத்தனை அன்பானவன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்களா என்ன?’. நம் செயல்பாடுகளில் நம் அன்பு வெளிப்பட வேண்டும். அதை வைத்துத்தான் நம் அன்பை பிறர் உணர முடியும்.

அதுபோல்தான் நேர்மையும். நாம் நேர்மையாக இருப்பதை நாம் தம்பட்டம் அடிக்கத் தேவையில்லை. அதை பிறர் உணர வேண்டும். உண்மையில் நேர்மையாக இருப்பவர்களின் நேர்மையை பிறர் உணர்வார்கள்.

நேர்மையாக இருப்பது அப்படி ஒன்றும் கடினமான செயல்பாடும் அல்ல, பெருமைப்பட வேண்டிய விஷயமும் அல்ல.

அதை ஒரு காரணியாக வைத்துக்கொண்டு ‘நான் நேர்மையாக இருப்பதால் பதவி உயர்வு கிடைக்கவில்லை’, ‘நான் நேர்மையாக இருப்பதால் எனக்கு நண்பர்கள் அதிகம் இல்லை’ அப்படி இப்படி என  துக்கப்பட்டு அழுது மூலையில் முடங்க வேண்டுமானால் அது பயன்படலாம்.

தற்பெருமை எப்படியோ அப்படித்தான் சுயபச்சாதாபமும். இரண்டும் உயர்வு மனப்பான்மையே. சுருங்கச் சொன்னால் சுயபச்சாதாபமும் ஒருவித தற்பெருமையே!

சிந்திப்போம். செயல்படுவோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 996 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon