ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1006
அக்டோபர் 2, 2021 | சனி | காலை: 6 மணி
இதுவே தன்னம்பிக்கை!
இங்கு பலரின் பிரச்சனையாக இருப்பது சாத்தியமில்லாதவற்றை சாத்தியமாக்குவதுதான் தன்னம்பிக்கை எனக் கருதுவது.
சாத்தியமே இல்லாத விஷயங்களில் எத்தனைதான் தன்னம்பிக்கையாக இருந்தாலும் அந்த விஷயத்தை சாத்தியமாக்க முடியாது. உதாரணத்துக்கு நம் உடல் நிறம், உயரம் போன்ற விஷயங்கள் அந்தப் பிரிவின்கீழ் வரும். ஆனால், நமக்கு விருப்பம் இல்லாத இடத்தில் அமைந்துள்ள வீடு, நமக்கு ஒத்துவராத வேலை போன்றவற்றை நம் விருப்பப்படி மாற்றி அமைத்துகொள்ள வாய்ப்புள்ளது. முயன்றால், கொஞ்சம் மெனக்கெட்டால் நம் விருப்பபடி மாற்றி அமைத்துக்கொண்டு வாழலாம். அப்படி மாற்றி அமைத்துக்கொண்டு வாழ்வது கூட தன்னம்பிக்கை என்ற பிரிவின் கீழ் வராது. நமக்குத் தோதான, விருப்பமான சூழலை அமைத்துக்கொண்டு வாழுகின்ற மன அமைப்பிற்குள் வரும்.
ஆனால் அதையே தன்னம்பிக்கையாக பலரும் சொல்லிக் கொள்வார்கள். ‘என் மகன் ரொம்ப தன்னம்பிக்கையானவன், பாருங்க… அவன் எட்டாவது படிக்கின்ற போதே தன் அப்பாவும் பெரியப்பாவும் வேலை செய்யும் பள்ளியில் படிக்க மாட்டேன்… வேறு பள்ளியில் சேர்த்துவிடுங்கள்…’ எனச் சொல்லி அடம்பிடித்து வேறு பள்ளியில் சேர்ந்தான்…’ என பெருமையாகச் சொன்ன பெற்றோர் ஒருவரின் மகன் எதிர்காலத்தில் தன் இஷ்டப்படி திருமணம், வெளிநாட்டு வேலை இப்படி வாழ்க்கையின் அதிமுக்கியமான அத்தனையையும் அவர்களின் கவனத்துக்கே வராமல் செய்து முடித்துக்கொண்டான். அவர்கள் இதுநாள் வரை தன்னம்பிக்கை என நினைத்துக்கொண்டிருந்தது தன்னம்பிக்கையே அல்ல என்பதை அந்தப் பெற்றோருக்கு காலம்தான் கற்றுக்கொடுத்தது.
இப்படித்தான் பலரும் தன்னிச்சையாக செயல்படுவதையும் நினைத்தபடி வாழ்வதையும் தன்னம்பிக்கை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னம்பிக்கை என்பது தான் மட்டும் வாழ்வது என்பதில் வராது. தன்னுடன் இணைந்து பயணிப்போரையும் அரவணைத்துக்கொண்டு செல்வதாகும். எத்தனைக்கு எத்தனை நாம் பிறருடன் தொடர்புபடுத்திக்கொண்டு அவர்களையும் நம்முடன் சேர்த்து உயர்த்தியபடி வாழ்கிறோமோ அத்தனைக்கு அத்தனை நமக்குள் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் அதிகரித்துக்கொண்டே வரும்.
நாம் மட்டும் வளர்வது என்பது நமக்கு பெருமை தரலாம். நம்முடன் சேர்த்து பிறரையும் உயர்த்தும்போது அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதுடன் நமக்குள்ளும் தன்னம்பிக்கையை ஏற்றிக்கொள்கிறோம் என்பதே நிஜம்.
வீட்டையே எடுத்துக்கொள்ளுங்களேன். நீங்கள் ஆணோ, பெண்ணோ, உங்கள் இணை மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தால்தானே நீங்களும் சந்தோஷமாக இருக்க முடியும். உங்கள் இணை முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சதா அழுதுகொண்டிருந்தால் உங்களால் உங்கள் பணியில் முழுமையாக கவனம் செலுத்த முடியுமா சொல்லுங்கள். உங்களைச் சார்ந்துள்ள அல்லது நீங்கள் இணைந்துள்ள வீடு எனும் சிறு கூட்டிலேயே உங்களுடன் பயணிப்பவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே நீங்களும் மகிழ்ச்சியாக தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் எனும்போது பொதுவெளியில் மட்டும் நாம் தன்னம்பிக்கையுடன் பீடு நடைபோட வேறு லாஜிக்கா உதவிவிடப் போகிறது?
தன்னம்பிக்கை என்பது நம் நம்பிக்கை மட்டும் அல்ல, மற்றவர்களுக்குள் நாம் செலுத்தும் நம்பிக்கையும் சேர்த்துதான்.
தன்னம்பிக்கையாக வாழ வேண்டியதுதான், ஆனால் சாத்தியமே இல்லாத விஷயங்களில் தன்னம்பிக்கையாக செயல்படுவதாக நினைத்து விபரீத முயற்சிகள் செய்தால் அது பேராபத்தில் கொண்டு விடக் கூடும். உதாரணத்துக்கு உங்கள் மூக்கு சற்று கோணலாக இருப்பதால் அதை மட்டும் மட்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். சர்ஜரி சரியாக நடைபெறவில்லை என்றால் இருக்கின்ற மூக்கும் அஷ்டகோணலாகி விடுமல்லவா?
அதற்கு பதிலாக ‘மூக்கு கோணலாக இருந்தால் அதிர்ஷ்டமாமே’ என்ற ஒரு பக்குவத்துடன் வாழப் பழகுங்கள். மூக்கை ஒரு பொருட்டாகவே நினைக்காதீர்கள். உங்கள் செயல்பாட்டினால் மற்றவர்கள் உங்கள் முகத்தைப் பார்க்காமல் குறிப்பாக மூக்கை பார்க்காமல் உங்கள் செயல்பாடுகளை கவனிக்கச் செய்யுங்கள். அதுதான் தன்னம்பிக்கை.
மற்றொரு விஷயம். நீங்கள் எந்த விஷயத்தை அதிக அக்கறை எடுத்துக்கொண்டு செயல்படுத்துகிறீர்களோ அதுவே மற்றவர்களாலும் கவனிக்கப்படும். அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அது கவனிக்கப்படும், திறமைக்கும் திறனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் அவை கவனிக்கப்படும்.
எது கவனிக்கப்பட வேண்டுமென்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவெடுக்கும் திறன்தான் தன்னம்பிக்கை.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP