ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1007
அக்டோபர் 3, 2021 | ஞாயிறு | காலை: 6 மணி
சேவை மனப்பான்மைக்கான இன்கிரெடியன்ஸுகள்!
கொரோனாவுக்கு முன் ஒரு நாள் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு போன் அழைப்பு.
முறையாக தன்னை அறிமுகம் செய்துகொண்ட பின்னர் அந்த நபருக்கு எனக்குமான உரையாடல் உங்கள் கவனத்துக்கு.
‘மேடம், நான் சென்ற வாரம் தஞ்சையில் அந்த பிரபலக் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் சிறப்பு விருந்தினராக உங்களை அழைக்கலாம் என்றும் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை எல்லாம் நீங்கள் சிறப்பாக அறிமுகப்படுத்துவீர்கள் என்றும் சொல்லி இருக்கிறேன்…’
‘ஓ… அப்படியா… நன்றி’
‘நீங்கள் எழுதிய புத்தகங்கள் குறித்தெல்லாம் சொல்லி இருக்கிறேன்…’
‘ஓ… அப்படியா… சந்தோஷம்’
அத்துடன் அவர் நின்றிருந்தால் பரவாயில்லை. இதுவரையிலேயே அவர் பேசியதில் ஏகப்பட்ட சொதப்பல். இருந்தாலும் மரியாதை நிமித்தம் பொறுத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தேன்.
‘மேடம், நீங்கள் கட்டணம் வாங்கிக் கொள்ளாமலேயே கல்லூரிக்கு சென்று மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றுவீர்கள்… அந்த அளவுக்கு சர்வீஸ் மனப்பான்மை கொண்டவர்’ என்று உங்களைப் பற்றி உயர்வாகச் சொல்லி இருக்கிறேன் என்று அவர் அடுத்தடுத்த அபத்தங்களை அடுக்கிக்கொண்டே சென்றதும் அவருக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
ஏன் என்றால் அவரை எனக்கு முன் பின் தெரியாது. சமூக வலைதளம் மூலம் என்னை பின் தொடர்ந்து எங்கள் காம்கேர் குறித்து அறிந்து வைத்திருக்கிறார். அவ்வளவுதான்.
‘சார் நீங்கள் குறிப்பிடுவது தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெயரெடுத்த பெரிய கல்லூரி. இதுநாள் வரை அந்தக் கல்லூரி முதல்வருக்கும், தொழில்நுட்பப் பேராசிரியர்களுக்கும் நான் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்கள் எதுவுமே தெரியவில்லை என்பதே அபத்தம். அதை உங்கள் நிறுவன பொருளை மார்க்கெட்டிங் செய்யச் சென்ற நீங்கள் சொல்லிதான் அவர்கள் அறிகிறார்கள் என்பது அபத்தத்தின் உச்சம்.
கடந்த 28 வருடங்களில் உலகமெங்கும் உள்ள பல்வேறு கல்லூரிகளில் என் நூல்கள் பல பாடத்திட்டமாக உள்ளன. மிகப் பெரிய எம்.என்.சி நிறுவனங்களில் பயிற்சிக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஐஐடி அண்ணா பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு கல்விக்கூடங்களில் ப்ராஜெக்ட் பயிற்சி புத்தகங்களாக இடம்பெற்றுள்ளன.
ஆனாலும் தஞ்சையில் உள்ள மிகப்பெரிய கல்லூரியில் பணியாற்றுபவர்களுக்கு அந்த விழிப்புணர்வு கொஞ்சமும் இல்லை என்பது நம்பும்படியாக இல்லை…’
நான் சற்று உறுதியாக பேசியதால் அவர் தடுமாறிப் போனார்.
‘நான் சொல்வது உண்மைதான் மேடம்…’ என்றார்.
‘நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கட்டுமே…. நான் சொல்வது அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாமையை. நான் கட்டணமே இல்லாமல் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றுவேன் என அவர்களிடம் சொன்னதாகச் சொன்னீர்களே… எதன் அடிப்படையில் சொன்னீர்கள்?’
‘நீங்கள் சர்வீஸ் மனப்பான்பையுடன் செயல்படுவதால் அப்படிச் சொன்னேன்…’ என்று குரலை தாழ்த்தினார்.
‘இங்குதான் நீங்கள் தவறு செய்துள்ளீர்கள்… இப்படி ஒவ்வொரு ஊருக்கும் என் சொந்தப் பணத்தை செலவு செய்து கொண்டு பயணம் செய்து சேவை செய்யும் அளவுக்கு பெரும் பணம் படைத்த தொழிலதிபர் அல்ல. அத்துடன், கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாகவா அட்மிஷன் கொடுக்கிறார்கள் அல்லது இலவச சேவைதான் செய்கிறார்களா?’
‘அதில்லை மேடம்…’ என இழுத்தவரை பேசவிடவில்லை. நானே தொடர்ந்தேன்.
‘முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். சேவை வேறு, சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது வேறு. சேவை என்றால் இல்லாதவர்களுக்கு, முடியாதவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை பொருளாகவோ பணமாகவோ கொடுத்து உதவுவது. சேவை மனப்பான்மை என்பது நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் நாம் காண்பிக்கும் அக்கறை. எதிராளியின் மனதை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்குப் பயனுள்ள விதத்தில் நம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்யும் பணிநேர்த்தி.
அறக்கட்டளை நடத்துபவர்கள் அதன் மூலம் காப்பகங்களுக்கு பொருளாகவோ பணமாகவோ வருடா வருடம் நன்கொடை கொடுத்து உதவுவது சேவை என்ற பிரிவில் வரும். பார்வையற்றவர்களுக்கு ஸ்க்ரைபாகச் சென்று தேர்வு எழுத உதவுவதும் சேவையே. கோயில்களிலும் பொதுப்பணிகளிலும் தன்னார்வத் தொண்டு செய்வதும் ஒருவகை சேவைதான்.
ஆனால் சேவை மனப்பான்மை என்பது முற்றிலும் வேறு. ஒரு நிறுவனத்தில் கஸ்டமர் சர்வீஸில் வேலை செய்யும் ஒரு நபர் தங்கள் நிறுவனத்துக்கு வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு தன்னால் இயன்ற அளவுக்கு தன்மையாகவும் பொறுமையாகவும் பதில் அளித்து தன் பங்களிப்பைக் கொடுத்து உழைக்கிறார் என்றால் அது சேவை மனப்பான்மை. அதற்காக அவர் சம்பளமே வாங்காமல் பணி செய்ய முடியுமா? அது சத்தியம்தானா? முடியாதல்லவா?
கஸ்டமர் சர்வீஸில் மட்டுமல்ல, ஐடி துறை, மருத்துவத் துறை, கல்வி நிறுவனங்கள், கடைகள், கொரியர் சர்வீஸ் என எங்கு பணிபுரிபவர்களாக இருக்கட்டுமே, அவர்கள் எல்லோராலும் சேவை செய்ய முடியும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் நிச்சயம் சேவை மனப்பான்மையுடன் செயல்பட முடியும்.
இப்படி நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் சேவை மனப்பான்மையுடன் செய்யும்போது அது இறைதன்மை பெறுகின்றது…
என்னால் நான் எடுத்துக்கொள்ளும் சிறிய பொறுப்பைக் கூட சேவைமனப்பான்மையுடன் செய்ய முடியும்… தேவைப்படும்போது தேவையானவர்களுக்கு சேவையும் செய்ய முடியும். இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்’
நான் வகுப்பெடுப்பதைப் போல பேசி முடித்தேன்.
அவர் ‘சாரி மேடம்…’ என்று சொல்லி போனை வைத்தார். என் போன் சூடாக இருந்தது.
சென்ற மாதம் சென்னையில் பலகிளைகள் கொண்ட கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை செய்து அங்கேயே உள்ள கண்ணாடி கடையில் ஆர்டர் கொடுத்து வாங்கினேன். இரண்டு மூன்று முறை செல்ல வேண்டி இருந்தது. ஒவ்வொரு முறை செல்லும்போதும் அங்கு எனக்கு உதவுவதற்கு நியமிக்கப்பட்ட பணியாளரின் பேச்சிலும், செயலிலும், மற்ற நடவடிக்கைகளிலும் அசாத்திய சேவை மனப்பான்மை வெளிப்பட்டது.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக கண்ணாடி அணிகிறேன். அதை அவரிடம் சொல்லவும் செய்திருக்கிறேன். ஆனாலும், கண்ணாடியை லோஷன் போட்டு எப்படி துடைப்பது, எப்படி பாதுகாப்பாக அதற்குறிய பெட்டியில் வைப்பது என்றெல்லாம் மிக பொறுமையாக விளக்கி அதை ஒரு கவரில் போட்டு பவ்யமாக மனதார ஏதோ பிரார்த்தனைச் செய்து என்னிடம் நீட்டியபோது நகைக் கடைகளில் நகை வாங்கினால் அதை கவரில் வைத்து அங்குள்ள கடவுள் படத்தின் முன் காட்டி வணங்கி விட்டு மிக பவ்யமாகக் கொடுப்பார்களே அதுதான் நினைவுக்கு வந்தது.
‘ஏதேனும் பிரச்சனை என்றால் தயங்காமல் எங்களை அணுகுங்கள்…’ என்று அன்புக் கட்டளை வேறு.
என்னிடம் மட்டுமல்ல, அங்கு வருபவர்கள் அனைவரிடமும் அவர் அப்படித்தான் நடந்துகொண்டார். இத்தனைக்கும் அவர் அந்த கண்ணாடி கடையில் வேலை செய்பவர்தான். உரிமையாளர் அல்ல என்பது கூடுதல் தகவல்.
இதுவே ஆகச் சிறந்த சேவை மனப்பான்மை. செய்கின்ற பணியை கொள்ளை கொள்ளையாய் கொண்டாடி மகிழ்பவர்களால் மட்டுமே இதுபோல செயல்பட முடியும். அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தெய்வீகத்தன்மை வெளிப்படும்.
ஆக, சேவை வேறு, சேவை மனப்பான்மை வேறு.
சேவையைக் கூட சேவை மனப்பான்மை இல்லாமல் செய்யும் நபர்களும் இருக்கிறார்கள். மாறாக, சேவை மனப்பான்மையுடன் செய்யும் சின்ன சின்ன செயலையும் சேவையாகக் கருதி உழைப்பவர்களும் இருக்கிறார்கள்.
வாங்கும் சம்பளத்துக்கு போதுமான அளவு உழைப்பவர்கள் உழைப்பாளிகள். அந்த உழைப்பில் கொஞ்சம் கனிவு, கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் மனிதாபிமானம், கொஞ்சம் நேர்த்தி என இன்கிரெடியன்ஸுகளை சேர்த்து உழைப்பவர்கள் சேவைமனப்பான்மையுடன் செயல்படும் மனித தெய்வங்கள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP