ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1020: ‘பெரியோர்களே, ஒரு நிமிஷம் ப்ளீஸ்!’

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1020
அக்டோபர் 16, 2021 | சனிக்கிழமை | காலை: 6 மணி

‘பெரியோர்களே, ஒரு நிமிஷம் ப்ளீஸ்!’

வீட்டில் உள்ள பெரியவர்களால் நமக்கு பல நன்மைகள் இருந்தாலும் அவர்களால் ஏற்படும் சின்ன சின்ன மன உளைச்சல்களை தவிர்க்க முடிவதில்லை என பலர் நினைப்பதுண்டு.

ஒரு சில பெரியோர்கள் ‘நாங்கள் எல்லாம் செய்யாத வேலையா, இப்பவெல்லாம் என்ன கஷ்டம் வேலை செய்ய… எல்லாத்துக்கும் மெஷின் இருக்கு… சமைக்கவே முடியலைன்னா ஆர்டர் பண்ணா வந்துடும். சுவிட்ச் போட்டா தண்ணீர், துவைக்க மெஷின், பாத்திரம் தேய்க்க டிஷ் வாஷர்…’  என சொல்வதுண்டு.

இப்படி சொல்லும் பெரியோர்கள் ஏதோ ஓரிரு முறை சொன்னால் பரவாயில்லை. ஒவ்வொரு முறையும் இளையோர்கள் செய்யும் வேலைகளுக்கு நடுநடுவே இப்படி சொல்லிக்கொண்டே இருப்பது எத்தனை எரிச்சலை ஏற்படுத்தும் என பலர் சொல்லிக் கேட்டதுண்டு.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர்களின் முந்தைய தலைமுறையினரைவிட வசதி வாய்ப்புகள் அதிகம்தான் இருக்கும். அதற்கேற்ப செய்கின்ற வேலைகளில் மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக வேலை சுமை ஒன்றும் குறைந்துவிடுவதில்லை.

உதாரணத்துக்கு பாத்திரம் தேய்க்க டிஷ் வாஷர் வாங்கினால், நம் இந்திய பாத்திரங்களாக இருக்கும் பட்சத்தில் அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதம், குழம்பு இத்யாதி இத்யாதிகளை நன்றாக அழுந்த தேய்த்து அதை அலம்பிய பிறகே டிஷ் வாஷரில் போட வேண்டி இருக்கிறது. பின்னர் டிஷ் வாஷர் ஓடி முடிந்ததும் பாத்திரங்கள் நம் கைகளால் தேய்த்ததைப் போல இருப்பதில்லை. பாத்திரங்கள் மேல் கொழகொழப்பாக இருப்பதைப் போலவே இருக்கிறது. அதை திரும்பவும் தண்ணீரில் அலம்பி துடைத்துத்தான் உபயோகப்படுத்த வேண்டியுள்ளது.

ஏன், நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் வாஷிங் மெஷினில் நல்ல உடைகளை போட்டு தோய்க்க முடிவதில்லை. சாதாரணமாக வீட்டில் போட்டுக்கொள்ளும் உடைகளை மட்டுமே தோய்க்க முடிகிறது. மற்றபடி சாயம் போகும் துணிகள், வேலைப்பாடுகள் உள்ள உடைகள், நல்ல புடவைகள் என பலதரப்பட்டவற்றையும் கைகளால் தான் தோய்க்க வேண்டி உள்ளது.

டிஷ் வாஷரையும், வாஷிங் மெஷினையும் நான் ஓர் உதாரணத்துக்காகவே சொல்லி இருக்கிறேன். இப்படி வசதிகள் கூடக் கூட அதற்கு நாம் செய்ய வேண்டிய ‘சோடச உபசாரங்கள்’ கூடிக்கொண்டேதான் போகின்றன. அதற்கேற்ப வேலை சுமைகளும் அதிகரிக்கவே செய்கின்றன.

‘அந்த காலத்தில் இதுபோல காரெல்லாம் எங்கே இருந்தது… நடையும் பஸ்ஸும்தான். இப்போ நீங்கள் காரில் வசதியாக ஆஃபீஸ் போயிட்டு வருகிறீர்கள்… வீட்டுக்கு இரண்டு கார், இரண்டு பைக்…’ இப்படி புலம்புபவர்களை ஒருநாள் சென்னை டிராஃபிக்கில் கார் ஓட்டிக்கொண்டு சென்று பார்க்கச் சொல்ல வேண்டும். கிளட்ச்சை மிதித்து மிதித்து கால் கட்டைவிரல் வலி கண்டுவிடும். பைக்கில் சென்று வந்தால் உடல் வலி பின்னி எடுத்துவிடும். அக்கடா என்று பஸ்ஸிலோ அல்லது நடந்தோ கூட அலுவலகம் சென்றுவிடலாம் எனத் தோன்றும். சிக்னல்களில் நிற்கும் நேரங்கள் நரகம். எழுந்து நடந்து சென்று விடலாம் என்றுதான் தோன்றும்.

வசதிகள் பெருகிவிட்டன என்பது உண்மைதான். அதற்காக வேலைச் சுமை குறைந்துவிட்டன என்று அர்த்தம் இல்லை. சுமைகள் வேறு வடிவம் எடுத்துள்ளன. அவ்வளவே!

எனவே ‘இப்பவெல்லாம் என்ன கஷ்டம்… நாங்கள் படாத கஷ்டமா?’ என புலம்பி இளையோர்களை புண்படுத்த வேண்டாம்.

ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா காலங்களிலும் முந்தைய தலைமுறையினரை விட அடுத்தத் தலைமுறை ஒரு படி முன்னேறி வசதி வாய்ப்புடன்தான் வாழ வேண்டிய சூழல் அமையும். நினைத்தாலும் அந்த வசதிகளை தவிர்க்கவே முடியாது.

நீங்கள் எல்லாம் இருட்டில் சிம்னி வெளிச்சத்தில் படித்தீர்கள் என்பதற்காக இந்தத் தலைமுறையினர் ஏன் அப்படி கஷ்டப்பட வேண்டும். கரண்ட் இல்லை என்றாலும் எமர்ஜென்சி விளக்கு ஒளியில் படித்துவிட்டுப் போகட்டுமே. அதில் என்ன கஷ்டம் உங்களுக்கு?

ஐநூறு ரூபாய் கொசு அடிக்கும் மேட்டிலேயே டார்ச், எமர்ஜென்சி விளக்கு என வசதிகள் பொருத்தப்பட்டு பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருப்பவர்கள்கூட அந்த வசதிகளைப் பயன்படுத்தும் வகையில் முன்னேற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பல காலங்கள் ஆகிவிட்டன.

இளைய தலைமுறை சந்தோஷமாக வாழந்து விட்டுப் போகட்டுமே. ‘நாங்கள் எல்லாம் இப்படியா?’, ‘அந்தக் காலத்தில் எல்லாம் அப்படியா?’ என்பதுபோல பேசிப் பேசி உங்கள் தாழ்வு மனப்பான்மையை உங்கள் இளையோர்கள் மீது சுமையாக சுமத்தாதீர்கள்.

வசதிகள் வசதிகளை மட்டும் கூட்டிக்கொண்டு வந்து சுகம் தருவதில்லை. அவை கொடுக்கும் பிரச்சனைகளும் ஏராளம் என்பதை புரிந்துகொண்டால் உங்கள் காலத்தில் நீங்கள் எத்தனை செளகர்யமாக இருந்திருக்கிறீர்கள் என்ற உண்மை புரியும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 923 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon