ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1021: Fast Track கேள்வி பதில்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1021
அக்டோபர் 17, 2021 | ஞாயிறு | காலை: 6 மணி

Fast Track கேள்வி பதில்கள்!

பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு நேர்காணல்களில், பல்வேறு சூழலில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் நான் அளித்த பதில்களும் சிறு தொகுப்பாக இன்று. ஏற்கெனவே பல இடங்களில் என் எழுத்தில் ஊடே இந்த கருத்துக்கள் இடம்பெற்றிருக்கும். தொடர் வாசகர்கள் அதை உணர்ந்திருப்பீர்கள்.

எது சுதந்திரம்?

கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாத கட்டற்ற சுதந்திரச் சூழலிலும் நமக்குள் நாமே கட்டுப்பட்டு கடமையாற்றுவதே நிஜமான சுதந்திரம்.

நம்மை நாம் மதிப்பதையும், நம்மிடம் நாம் அன்பாக இருப்பதையும் எப்படி அறிவது?

‘தனிமனித ஒழுக்கம்’ என்ற அற்புதப் பண்பினால் அறியமுடியும்.

எது மகிழ்ச்சி, எது ஆனந்தம்?

நாம் ஒரு செயலை செய்யும்போது நமக்கு உண்டாகும் மனநிறைவை மகிழ்ச்சி எனலாம். அதே செயலால் மற்றவர்களுக்கும் ஏதேனும் ஒரு பலன் ஏற்பட்டு அவர்களும் மகிழும்போது நமக்கு உண்டாகும் உணர்வே ஆனந்தம்.

ஒரு படைப்பு எப்போது பெரிய அளவில் ரீச் ஆகிறது?

எந்த ஒரு படைப்பும் மக்களிடையே பெரிய அளவில் ‘ரீச்’ ஆவதற்கு அந்தப் படைப்பைக் கையாளும் கலைஞன் தான் கையாளும் விஷயத்தை பார்வையாளர்களின் / வாசகர்களின் / ரசிகர்களின் அனுபவமாக மாற்றி அவர்களின் மனதைத் தொட வேண்டும். சினிமா, புத்தகங்கள், ஓவியங்கள் இப்படி எல்லாத்துறைக்கும் இந்த லாஜிக் பொருந்தும். படைப்பின் நாயகனோ, நாயாகியோ அல்லது நிகழ்வுகளோ ஏதோ ஒன்று பார்வையாளரின் சொந்த அனுபவத்துடன் கலக்கும்போது அந்தப் படைப்பு  சர்வ நிச்சயமாக வெற்றி பெறும்.

உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்பதற்கான சரியான விளக்கம் வேண்டுமே?

இந்த உலகில் யாரும் உயர்ந்தவரும் இல்லை. தாழ்ந்தவரும் இல்லை. அவரவர்கள் வாழ்க்கைப் பாதையில் நேர்மையாக பயணிப்பவர்களை  சிறந்தவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஒருவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துக்கொள்ளலாமா?

ஒரு பொருளை புதிதாக வாங்கும் போது அது ‘புதுசு’. ஒருவர் பயன்படுத்திய பொருளை வாங்குவது அது புதிதுபோல காட்சியளித்தாலும் அது ‘Second Hand’ தான். அதுபோலதானே நம் சுயத்துடன் இருக்கும்போது நாம் தனித்துவத்துடன் இயங்குகிறோம். அதுவே மற்றவர்களைப் பார்த்து அப்படியே செயல்பட ஆரம்பிக்கும்போது நம் சுயம் தொலைத்து நாம் Second Hand மனிதர்களாகிறோம். ஒருவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஜெராக்ஸ் காப்பியாக வேண்டாமே!

எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பது சாத்தியமா?

சாத்தியமே. நேர்மையாகவும் தனித்துவமாகவும் இருப்பது அப்போதைக்கு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். தொலைநோக்குப் பார்வையில் அதன் பலன் இருக்கத்தான் செய்கிறது.

பெண்ணியம் குறித்து…

பெண்ணியம் பேசும் பெண்களின் தைரியம், சம உரிமை கொள்கைகள் இவற்றையெல்லாம் தாண்டி, ‘அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்பார்கள்’ என்ற ஓர் எண்ணம் அன்று சிலரிடம் இருந்தது. அதன் மிச்சமாய் இன்றும் சில இடங்களில். தன்னைப் புரிய வைக்கும் சாதுர்யம், நேர்மை, தைரியம், தன்னம்பிக்கை, மதிநுட்பம், தவறை சுட்டிக்காட்டும் மேன்மை, பாரபட்சம் காட்டாத அன்பும் அரவணைப்பும், தன்னுடன் சேர்த்து தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்துதல் இதெல்லாம் எங்கு தென்படுகிறதோ அதெல்லாம் பெண்ணியத்தின் பண்புகள்.

சரி தவறுக்கான இலக்கண இலக்கியங்கள் ஆண் பெண் இருசாராருக்கும் பொதுவே.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 798 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon