ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1024
அக்டோபர் 20, 2021 | புதன் | காலை: 6 மணி
சாப்பாட்டு ராமன்கள் நளனும் பீமனும் ஆகிவிட முடியுமா?
வாழ்க்கை என்பது புள்ளி வைத்த கோலம் மாதிரி. புள்ளிகளை இணைத்து கோலம் போடுவது அத்தனை சுலபம் அல்ல.
ஆர்வமும், திறமையும் இணைந்த ஒருவரால்தான் புள்ளிக் கோலத்தைக்கூட முழுமையாக போட முடியும்.
புள்ளிக்கோலத்தில் புள்ளிகளை வைத்த பிறகு ஏதேனும் ஒரு புள்ளியைத் தொடக்கமாகக் கொண்டு கோலம் போட ஆரம்பிக்க வேண்டும். அந்தத் தொடக்கப் புள்ளியை தேர்ந்தெடுக்கும் நுணுக்கத்தைக் கண்டுகொண்டால் கோலம் போடுவது சுலபம்.
நம் ஒவ்வொருவருக்கும் திறமையும் ஆர்வமும் ஒருங்கிணையும் ஒரு புள்ளி இருக்கும். அதைக் கண்டுபிடித்து விட்டால் வாழ்க்கை வரம். வாழ்தல் இனிது.
உங்கள் திறமை வேறு. ஆர்வம் வேறு. இரண்டும் ஒன்றல்ல.
உதாரணத்துக்கு, ஒருவருக்கு சினிமா நிறைய பார்க்க ஆர்வமாக இருக்கும். ஆனால் அவர் சினிமா எடுப்பதில் திறமைசாலி என்றாகிவிடாதல்லவா?
ஆனால் அவரது ஆர்வம் சினிமா பார்ப்பதையும் தாண்டி, சினிமா பற்றிய நுணுக்கங்களை படித்து, கேட்டு, உள்வாங்கிகொண்டு, அந்தத்துறை ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றி அந்தத் துறையில் காலூன்ற வேண்டும் என்கின்ற வெறியுடன் உழைக்கும் ஆற்றல் அவருக்கு இருக்குமேயானால் அவரது ஆர்வமும், திறமையும் ஒருங்கிணையும் புள்ளியில் அவர் நின்று கொண்டிருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம்.
இதுபோல நிறைய உதாரணங்களை சொல்லலாம். தட்டில் விழும் சாப்பாட்டை ரசித்து, ருசித்து, நேர்மறை எதிர்மறை கமெண்ட்டுகளை அள்ளி வீசி சாப்பிடும் ஒருவர் சமையலில் திறமைசாலியாக இருக்க வேண்டும் என்பதில்லையே. அவர் சாப்பாட்டு ராமனாக இருக்கலாம். ஆனால் சமையலில் நளனாகவோ பீமனாகவோ ஆகிவிட மாட்டார்.
சாப்பட்டு ராமன் என்ற வார்த்தை யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்க. சிறு விளக்கம். எப்படி சமைத்தாலும் குற்றம் குறை சொல்லாமல் சாப்பிடுபவர்களை சாப்பாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் என சொல்லலாம். ஆனால் சமையல் செய்வதற்கு உதவியாக ஒரு சிறு துரும்பையும் அசைக்காதவர்கள் எதிர்மறை கமெண்டுகளை மட்டும் தாராளப்பிரபுவாக அள்ளி வீடியபடி சாப்பிடும் அவர்களின் ஆர்வத்துக்கு சாப்பாட்டு ராமன் என்றுதான் பொதுவாக வீடுகளில் சொல்வார்கள். அவர்கள் சொல்வதிலும் தவறில்லையே.
அப்படி அவரது சாப்பிடும் ஆர்வத்தை சமையல் செய்வதில் செய்து காட்டி அசத்தி அந்தத் துறையில் சாதித்துக் காட்டினால் அவரது ஆர்வமும் திறமையும் இணையும் புள்ளியில் அவர் தன்னை செதுக்கிக்கொண்டுள்ளார் என எடுத்துக்கொள்ளலாம்.
அது சரி நளன், பீமன் பற்றி சொல்லாமல் விட்டால் இந்தப் பதிவு முழுமை அடையாதே.
அரச குடும்பத்தில் இருந்தாலும் நளனும், பீமனும் சமைக்கத் தெரிந்தவர்கள். நளனின் கைப்பட்டால் சமையல் ருசிக்கும். பீமனின் பார்வைபட்டாலே சமையல் ருசித்துவிடுமாம். இதனால்தான் சமையலில் நளபாகம், பீமபாகம் என சமையலை இருவகையாக சொல்வதுண்டு.
சாப்பாட்டு என்பது வெறும் உணவு பதார்த்தம் மட்டுமல்ல. அது நன்றாக சமைக்கும் திறமையும், ருசித்து சாப்பிடும் ஆர்வமும் இணைந்து ஆற்றும் அதிசயம். இரண்டில் ஒன்று சரியில்லை என்றாலும் சாப்பாடு ருசிக்காது.
இப்படி உங்களுக்குள்ளும் உங்கள் ஆர்வமும் திறமையும் ஒருங்கிணையும் புள்ளியை கண்டுபிடியுங்கள். எட்டுப் புள்ளிக் கோலம் என்ன, எட்டாயிரம் புள்ளி கோலத்தையும் அசால்ட்டாக போட்டு அசத்தி விடலாம் மக்களே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP