ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1023: தாய்மொழி அறிவோம், பிற மொழிகளில் புலமை பெறுவோம்! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1023
அக்டோபர் 19, 2021 | செவ்வாய் | காலை: 6 மணி

தாய்மொழி அறிவோம், பிற மொழிகளில் புலமை பெறுவோம்!

எங்கள் வீட்டில் நடைபெற்ற ஹோமத்துக்கு வந்திருந்த பத்தாவதும், பன்னிரெண்டாவதும் படித்துக்கொண்டிருக்கும் சிறுவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

எங்கள் வீட்டு பிரமாண்ட புத்தக ஷெல்ஃபை  பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் ‘ஏதேனும் புத்தகம் வேண்டுமானால் எடுத்துப் படியுங்கள்’ என்றபோது ‘எங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியாது’ என்றார்கள்.

எழுத தெரியுமா? என்றேன்.

‘ம்ஹும். தெரியாது…’ என்றார்கள்.

இவர்களை இன்றைய ஒட்டுமொத்த இளையதலைமுறையினரின் முகங்களாகக் கொள்ளலாம்.

பலருக்கு தாய்மொழியில் பேச மட்டுமே தெரியும். எழுதவும், படிக்கவும் தெரியாது என்கிறார்கள். அதற்காக அவர்கள் பள்ளியில் இரண்டாவது மொழியாக எடுத்துப் படிக்கும் சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளிலாவது சிறப்பாக இருக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது. ஏன் ஆங்கிலத்தில் கூட முழுமை இருக்காது.

எல்லாமே அறைகுறைதான்.

காரணம், அவர்கள் தாய்மொழியை கற்றுக்கொள்ளாததோடு ஒதுக்கியும் விடுவதே.

தாய்மொழியில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருப்பவர்களுக்கு வேறு எந்த மொழியை வேண்டுமானாலும் எளிதாகக் கற்கத் தேவையான புரிதல் கிடைக்கும். அந்தப் புரிதலே ஒப்பீடு செய்தும், கற்பனை செய்தும் கற்றுக் கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும். அந்தந்த மொழிகளுக்கான இலக்கணங்களில் ஆழ்ந்த புலமை பெற முடியும்.

என் கொள்ளு பாட்டி சஞ்சீவியம்மாள் பற்றி இங்கே கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும். அதாவது என் அம்மாவின் பாட்டி.

புதுச்சேரியில் வாழ்ந்த அவர்  தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஃப்ரென்ச், சமஸ்கிருதம் என ஐந்து மொழிகள்  படிக்கவும், எழுதவும், பேசவும் தெரிந்த திறமைசாலி. ஆனாலும் தமிழ் புத்தகங்கள் நிறைய படிப்பார், படித்ததை சுவாரஸ்யமாக சொல்வார். படிப்பு மட்டுமே நம்மை பண்படுத்தும், உயர்த்தும், உன்னதம் தரும் என்று திரும்ப, திரும்ப சொல்வார்.

என் அம்மாவின் திருமணத்துக்குக் கூட கொள்ளுபாட்டி புத்தகங்களையே பரிசாகக் கொடுத்தாராம்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், தாய்மொழியில்(லேயே) சுவாசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்ற மொழிகளையும் ஆள முடியும். தாய்மொழி துறந்து மற்ற எத்தனை மொழிகளை கற்றுக்கொண்டாலும் அவை கல்வி என்ற அளவில் சான்றிதழ்களில் மட்டுமே நிலைத்திருக்கும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 586 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon