மலர்வனம் மின்னிதழ்
தீபாவளி சிறப்பிதழில் என் நேர்காணல்
பத்திரிகை வடிவில் படிக்க…
மலர்வனம் தீபாவளி மலர் நவம்பர் 2021
சமூக வலைதளத்தில் ஓர் சாதனை!
1000 பிறை கண்டவர் போன்று 1000 பதிவுகளை எழுதியவர்!
1000 – நாட்களைக் கடந்தும் தொடர்ச்சியாக தினந்தோறும் நேரம் தவறாமல் அதிகாலை 6 மணிக்கு சமூக வலைதளங்களில் ஆரோக்கியமான விஷயங்களை எழுத முடியுமா?
‘முடியும்’ என்கிறார் காம்கேர் கே. புவனேஸ்வரி. 2019 ஜனவரி மாதம் முதல் நாள் ஃபேஸ்புக்கில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து, 2020-ல் ‘ஹலோ காம்கேர்’ என்ற தலைப்பில் தொடர்ந்து, 2021-ல் ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ என்ற தலைப்பில் எழுதி வருகிறார்.
1000-ம் நாட்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது இவரது அதிகாலைப் பதிவுகள்.
இது எப்படி சாத்தியமானது என மலர்வனம் இணைய பத்திரிகை சார்பில் கேள்வி எழுப்பிய போது அவர் கொடுத்த பதிலில் அவரது தன்னம்பிக்கை வெளிப்பட்டது.
காம்கேர் கே. புவனேஸ்வரி சொல்கிறார்…
‘மலர்வனம் இணைய மாத இதழ் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. முதலில் அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தரமான கட்டுரைகள், அட்டகாசமான ஓவியங்கள், அருமையான வடிவமைப்பு என மிக அருமையாக நடத்திச் செல்கிறார் அதன் ஆசிரியர் உயர்திரு கே.ஆர். இராமகிருஷ்ணன் அவர்கள். இவரும் அடிப்படையில் ஓர் ஓவியர். கார்ட்டூனிஸ்ட். அதனால் தானோ என்னவோ மலர்வனம் முழுவதும் எழுத்துக்கு ஈடாக ஓவியங்களும் சேர்ந்து கலை கட்டுகிறது.
இந்த இதழில் இரண்டாம் ஆண்டு சிறப்பிதழில் என் நேர்காணல் வெளிவருவது எனக்குப் பெருமையும்கூட.
இப்படித்தான் செய்ய வேண்டும், இதைத்தான் எழுத வேண்டும், இப்படிப்பட்ட வாசகர்களை சென்றடைய வேண்டும், இப்படி விளம்பரப்படுத்த வேண்டும், இன்ன பிரிவினரை திருப்த்திப்படுத்த வேண்டும், இன்னாரை கொண்டாட வேண்டும், இன்னாரிடம் வன்மம் காண்பிக்க வேண்டும், இன்னாரை சகித்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் கரைபுரண்டு ஓடும் ஆறு எப்படி சலமினமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்குமோ அதுபோல மிக அழகாக நளினமாக ஆர்பாட்டமில்லாமல் அதன் போக்கிலேயே சென்று இன்று 1000-ம் நாளில் வந்து நிற்கிறது.
எனக்குப் பிடித்ததை, எனக்கு தைரியத்தைக் கொடுப்பதை, எனக்கு ஊக்கம் அளிப்பதை, எனக்குத் தெரிந்ததை, நான் அறிந்ததை, நான் கற்றதை, நான் பெற்றதை, நான் எப்படி வாழ்க்கையை எளிமையாக வாழ்கிறேனோ, எப்படி எளிமையாக அதன் சாராம்சத்தை உள்வாங்கிக்கொள்கிறேனோ அதுபோலவே உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொண்டதுதான் இந்தத் தொடரின் வெற்றிக்குக் காரணம்.
இறையருளாலும், இயற்கையின் கருணையாலும் நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்த நிமிடம் வரை எனக்குள் நான் சிறைபிடித்த அற்புதத் தகவல்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து வருகிறேன்.
என் சிந்தனைக்கு எந்த முலாமும் பூசவில்லை, எந்த அரிதாரமும் அணிவிக்கவில்லை. நான் என்ன நினைக்கிறேனோ, எப்படி பேசுகிறேனோ, செயல்படுகிறேனோ அதை அப்படியே உங்களுக்கு சுடச்சுடப் பகிர்ந்து வந்தேன்.
கேசரி செய்யும்போது செயற்கை கலர் சேர்க்காமல் செய்தால் அது வெண்மையாகத்தான் இருக்கும். கலர் சேர்த்து செய்யும்போது ஆரஞ்சு கலரில் பார்ப்பவர் கண்களைக் கவரும் வகையில் பார்த்தாலே சாப்பிடத் தூண்டும் வண்ணம் ஈர்க்கும். ஐயமில்லை. ஆனால் செயற்கைக் கலர் சேர்க்காமலே செய்கின்ற கேசரி உடலுக்கு ஊறு விளைவிக்காதல்லாவா?
அப்படித்தான். எழுதுவதில் இரண்டு வகை. ஒன்று நமக்குப் பிடித்ததை எழுதுவது. மற்றொன்று வாசகர்களுக்குப் பிடித்ததை எழுதுவது. இதில் இரண்டாவதுக்கு வகை எழுத்துக்குக் கிடைக்கும் வாசகர்கள் அதிகம் இருக்கலாம். நானும் அப்படி எழுதி இருக்கலாம்தான். ஆனால், அங்கு நான் தொலைந்து போயிருப்பேன். மீட்டெடுப்பது மிகக் கடினம்.
அதனால்தான் மற்றவர்களுடன் பேசும்போது அரசியல் குறித்து ஆழமாக விவாதிக்கும் நான் எழுதும்போது முழுமையாக தவிர்த்து வருகிறேன். அதைக் கேட்பவர்கள் ‘அட அரசியலைக் கூட இத்தனை விரிவாக பேசத் தெரியுமா?’ என அதிசயிப்பார்கள்.
நான் அரசியல் குறித்து எழுதாமல் இருப்பதற்கு மிக முக்கியக் காரணம், மனம் தெளிவானால் அறிவு விசாலமானால் வாழ்க்கைப் புரியும், அரசியல் புரியும், உலகம் புரியும்… இப்படி எல்லாமே புரியும். எல்லாவற்றிலும் தெளிவு கிடைக்கும். கிடைக்க வேண்டும்.
ஆம். மனதைத் தெளிவாக்கும் விஷயங்களையும் அறிவு சார்ந்த விஷயங்களையும் மட்டுமே நான் எழுதி வருகிறேன்.
பசி என்று கேட்பவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு போட்டால், அந்த வேளை பசி போய்விடும். ஆனால் அடுத்த வேளைக்கு வேறெங்காவதுதானே கையேந்தி நிற்க வேண்டும். அதற்கு பதிலாக எல்லா நாட்களும் அவர்களுக்கு சாப்பாடு கிடைக்கும்படி ஒரு வேலைக்கு வழிவகுத்தால் அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும். அதைத்தான் நான் செய்கிறேன்.
ஈர்க்கும்படி எழுதி அந்த நேரத்துக்கு மகிழ்விக்காமல் சுருக்கெனெ மனதைத் தைக்கும்படியான விஷயங்களை எழுதி வாழ்நாளெல்லாம் பயன்படும் வகையில் எழுதுகிறேன்.
எல்லாவற்றுக்கும் அடிநாதம் மனமே. மனதை செம்மைப்படுத்தும் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.’
இப்படி ஆணித்தரமாக சொல்லும் காம்கேர் புவனேஸ்வரி காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐடி நிறுவனத்தில் Founder & CEO. நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அடி எடுத்து வைக்கும் முன்னரே அத்துறையில் இரட்டைப் பட்டம் பெற்று, எம்.பி.ஏவும் முடித்து 1992- ல் விஜயதசமி நன்னாளில் ஐடி நிறுவனத்தை தொடங்கினார். 29 ஆண்டுகள் தொய்வில்லாமல் நிறுவனத்தை தலைமை தாங்கி வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறார்.
இவர் தடம் பதித்த ப்ராஜெக்ட்டுகள் ஏராளம். நம் நாட்டில் ஐடி நிறுவனம் தொடங்கிய முதல் தொழில்நுட்பப் பெண் பொறியாளர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.
தமிழகமெங்கும் பட்டி தொட்டி எல்லாம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பரவ எழுத்து, பேச்சு, ஆடியோ, வீடியோ, சாப்ஃட்வேர் என பல வழிகளில் இவரது காம்கேர் மூலம் இவர் முனைந்த முயற்சிகளில் பல ‘முதன்’ முயற்சிகள். முன் உதாரணங்கள். ரோல் மாடல் ப்ராஜெக்ட்டுகள்.
அதற்கெல்லாம் சாட்சியாக, தமிழகமெங்கும் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும், ஏன் உலகளாவிய முறையில் இவரது காம்கேரின் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகள் வியாபார நோக்கில் சென்றடைந்ததுடன் மட்டுமில்லாமல் கல்விக்கூடங்களிலும் பாடத்திட்டமாக ஆய்வு குறிப்பேடுகளாக வீற்றிருக்கின்றன.
150 புத்தகங்களுக்கும் மேல் எழுதியுள்ளார். அதில் பல பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப வல்லுநர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், ஆவணப்பட இயக்குநர், அனிமேஷன் மற்றும் குறும்பட கிரியேட்டிவ் டைரக்ட்டர் என பல்முகம் கொண்டவர்.
1000 என்ற இலக்கை முன்பே திட்டமிட்டிருந்தீர்களா?
எதையும் திட்டமிடவில்லை. என் பணியை எனக்கு விருப்பமானதை தொடர்ச்சியாக செய்து வருகிறேன். என் 10 வயதில் இருந்து தினந்தோறும் எழுதி வருகிறேன். இப்போது சமூக வலைதளங்கள் இருப்பதால் அவை உங்கள் அனைவருக்கும் தெரிகிறது அவ்வளவுதான்.
எந்த ஒரு சிறு வேலையை சிறப்பாக செய்தாலும் அது கொடுக்கும் மனநிறைவை மனதுக்குள் கொண்டாடுவேன். அதுவே என் வெற்றியாக கருதுகிறேன். அதுபோலவேதான், 1000-வது பதிவைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ பதிவுகளுக்கும் என் மனநிலை.
சமூக வலைதளத்தில் எழுத ஆரம்பித்தபோது இலக்கை எப்படி அமைத்துக் கொண்டீர்கள்?
இதுதான் இலக்கு என்றெல்லாம் கிடையாது. இலக்குகளை வைத்துக்கொண்டு ஒரு செயலை ஆரம்பித்தால் ஸ்ட்ரெஸ் அதிகம் இருக்கும். செய்யும் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருப்பேன். அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி.
சமீபத்தில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரியும் மாணவ பத்திரையாளர் ஒருவர் என்னிடம் ஒரு வீடியோ கேட்டிருந்தார், பாரதியார் 100-வது நினைவு நாளுக்காக. அதற்கு நான் எடுத்த முயற்சியும் உழைப்பும் ஆர்வமும், அமெரிக்காவில் புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் நான் எடுத்த ஆவணப்படத்துக்காக நான் கொடுத்த உழைப்புக்கும், ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் சற்றும் சளை இல்லாதது.
மாணவர் பத்திரிகையாளர் தானே என அலட்சியமும் இல்லை, அமெரிக்கா பல்கலைக்கழக ப்ராஜெக்ட் என்ற கர்வமும் இல்லை. இரண்டுமே என்னளவில் ஒன்றுதான்.
இதனால்தான் இலக்கு என வைத்துக்கொள்வதில்லை. ஓடிக்கொண்டே இருப்பேன். ஆனால் சரியான பாதைதானா என்பதில் மட்டும் கவனமாக இருப்பேன். சரியான பாதையாக இருக்கும்பட்சத்தில் நாம் ஓட ஓட பாதையும் நமக்காக வழிவிடும். புதிய பாதைகள் அமைத்துத்தரும்.
எப்போதும் வாசிப்பவர்களுக்கு ஏதுவாக பிடித்தமான படைப்புகள் மற்றும் பதிவுகள் உங்களுக்கு கைவந்த கலை. எப்படி வாசிப்பவர்கள் மனநிலையை உணர்ந்து எழுதுகிறீர்கள்?
‘எப்போதும் வாசிப்பவர்களுக்கு ஏதுவாக பிடித்தமான படைப்புகள் மற்றும் பதிவுகள் உங்களுக்கு கைவந்த கலை’ என்று சொல்லி உள்ளீர்கள். முதலில் அதற்கு நன்றி.
வாசிப்பவர்களுக்குப் பிடித்த வகையில் நான் எழுதுகிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. எனக்குப் பிடித்தமானதை எனக்கு ஊக்கம் அளிப்பதை எனக்கு தைரியம் கொடுப்பதை நான் எழுதுகிறேன். அதை உங்களைப் போன்றோர் வாசிப்பதால் என் எழுத்தும் சிந்தனையும் பயனுள்ளதாக ஆகிறது என்பதே உண்மை.
தரமான நிறைவான வாசகர்களை பெற்றிருப்பது என் பெரும்பேறு.
தொழில்துறையில் ஏனடா நுழைந்தோம், சாதாரணமாக எங்காவது வேலை பார்த்து இருந்தால் இவ்வளவு டென்ஷன் இல்லையே என்ற எண்ணம் மேலோங்கியது உண்டா?
ஒரு நாளும் அப்படிப்பட்ட எண்ணம் தோன்றியதே இல்லை. அதற்காக கஷ்ட நஷ்டங்களே வந்ததில்லை என்று அர்த்தம் இல்லை.
கொஞ்சம் விரிவாக சொன்னால்தான் புரியும் என்பதால் சொல்கிறேன். கேளுங்கள்.
எல்லோரும் 10 மாதங்கள் தான் கருவறையில் இருப்பார்கள். நானோ 22 வயதுவரை அப்பா அம்மா இருவரின் கருவறையிலும் மிக மிக பாதுகாப்பாக இருந்தேன். படித்தேன். மகிழ்ந்தேன். வளர்ந்தேன். ஏன் இப்போதும் கூட அவர்கள்தான் என் பாதுகாப்பு, ஊக்கம், உற்சாகம், ஒத்துழைப்பு எல்லாமே.
22 வயது வரை நான் கற்றது பெற்றது அத்தனையும் என்னுள் உள் வலிமையாய் அஸ்திவாரம் போட்டு அமர்ந்து, புடம்போட்ட தங்கமாய் என்னை ஜொலிக்க வைத்துக்கொண்டே இருந்தது. அதிகம் பேச மாட்டேன். நட்பு வட்டம் மிக மிக மிக சொற்பம். பேச்சு குறைவு என்பதால் நான் கற்றவையும் பெற்றவையும் ஒரு துளியும் விரயம் ஆகாமல் எனக்குள்ளேயே பொக்கிஷமாய் புதைந்து கிடந்தன.
நான் இரண்டாம் முறையாக என் 22 வயதில்தான் மீண்டும் பிறந்தேன்.
ஆம். படித்து முடித்து காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கியபோதுதான் நான் வெளி உலகையே பார்க்க ஆரம்பித்தேன். காம்கேர் நிறுவனம் தொடங்கி 29 ஆண்டுகள் ஆகின்றன. அப்படிப் பார்த்தால் என் வயதும் 29 தான்.
பிறந்த குழந்தை என்றாவது ‘நாம் ஏன் தான் பிறந்தோமோ, பிறக்காமலே இருந்திருக்கலாம், கஷ்டமே இருந்திருக்காதல்லவா, ஐயோ இந்த உலகம் இவ்வளவு மோசமானதா’ என்றெல்லாம் யோசிக்குமா? யோசிக்காதல்லவா. அதுபாட்டுக்கு வெகுளியாய் வளரும்தானே. அதுபோன்ற மனநிலையில்தான் நான் காம்கேர் நிறுவனத்தை நடத்த ஆரம்பித்தேன்.
என் படிப்பு, அறிவு, திறமை, உழைப்பு இவைதான் என் பலம். யார் என்ன நினைக்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் பார்ப்பதே இல்லை. அன்றும் சரி, இன்றும் சரி.
அதனால் ஒரு சிறு குழந்தை எப்படி பிறந்து தவழ்ந்து, நடந்து, ஓடி, ஆடி வளருமோ அதுப்போல காம்கேர் நிறுவனமும் நானும் வளர்ந்தோம்.
இதுதான் வாழ்க்கை என்று முடிவெடுத்த பிறகு மாற்றுப் பாதையை யோசித்ததே இல்லை.
அதனால் அந்தப் பாதையின் ஏற்ற இறக்கங்கள், மேடு பள்ளங்கள் பெரிதாகத் தெரியவில்லை.
காம்கேர் தான் என் வாழ்க்கைப் பாதை. அது மட்டுமே என் குறிக்கோள்.
இப்படி தொடர்ச்சியாக உங்களை எழுதத் தூண்டிய சூழல் பற்றி தெரிந்து கொள்ளலாமா?
நீங்கள் வியக்கும் என் எல்லா செயல்களுக்கும் காரணம் என் அப்பா அம்மா. வாழ்ந்து காட்டி வழிநடத்திச் செல்பவர்களும் அவர்களே. இப்படி நான் இயங்கும் சிறப்பாக செயல்படுபது நான் மட்டுமல்ல, என் தங்கை, தம்பியும்கூட.
ஆங்கிலத்தில் Self Made Person என்று சொல்வார்கள். கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே. அப்படித்தான் நாங்கள் உருவானோம். அழகான பாதுகாப்பான கூடு எங்கள் வீடு. எங்கள் அப்பா அம்மா இருவரும் எங்கள் பாதுகாவலர்கள், வழிகாட்டிகள், ஆசான்கள், நண்பர்கள். இப்படி ஒருவரது வாழ்க்கை மேம்பட எந்தெந்த சக்திகள் எல்லாம் தேவையோ அவை அத்தனையும் அவர்கள் மூலமே எங்கள் வீட்டிலேயே கிடைத்ததால் வெளியில் அவற்றைத் தேட வாய்ப்பில்லாமல் போனது. அதுவே எங்கள் வரம்.
நான் ஃபேஸ்புக்கில் எழுதுவது மட்டுமே உங்களுக்கு தெரியும்.
என் திறமை கற்பனைத்திறனும் அதுசார்ந்த கிரியேட்டிவிட்டியும். எழுத்து என்பது என் செயல்பாட்டில் ஓர் அங்கம். அந்த எழுத்து என் சாஃப்ட்வேர் தயாரிப்புகளில், அனிமேஷன் படைப்புகளில், ஆவணப்படங்களில், கதை-கட்டுரை-கவிதைகளில், புத்தகங்களில் அதற்கேற்றவாறு வடிவம் எடுக்கின்றன. அவ்வளவுதான்.
நான் என் 10 வயதில் இருந்து ‘தினமும்’ எழுதி வருகிறேன். தினமும் காலையில் 3 மணிக்கு எழுந்து எழுதுவதும், அதன் பின்னர் பள்ளி / கல்லூரிக்குப் பாடங்களைப் படிப்பதும் பள்ளி / கல்லூரிக்குக் கிளம்புவதும் என் வழக்கம். வளர வளர பிரம்மமுகூர்த்த நேரத்து விழிப்பு என்பது என் நிரந்தர வழக்கமானது.
என் 21 வயதுக்குள் 100-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரைகள் கலைமகள், சாவி, பாக்யா, ராஜம், விகடன், குமுதம், விஜயபாரதம், கல்கி, மங்கையர் மலர் என பல்வேறு முன்னணி இதழ்களில் வெளியாகி அவை விருதுகளையும், பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளன.
காம்கேர் நிறுவனம் தொடங்கியதும் என் தொழில்நுட்ப அனுபவங்கள் அத்தனையையும் அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகமாக்கத் தொடங்கினேன். இன்று வரை 150 புத்தகங்கள் வெளியாகி உள்ளன. உலகளாவிய முறையில் பல்வேறு கல்விக் கூடங்களில் நான் எழுதிய பல தொழில்நுட்பப் புத்தகங்கள் பாடத்திட்டமாக உள்ளன.
நான் எழுதிய ‘இவ்வளவுதான் கம்ப்யூட்டர்’, ‘இவ்வளவுதான் இன்டர்நெட், ‘கம்ப்யூட்டரில் தமிழ்’ என்ற மூன்று புத்தகங்களும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது என் வயது 25. அந்த வயதில் பல்கலைக்கழகங்கள் கொண்டாடும் அளவுக்கு என் எழுத்தின் தரம் இருந்திருந்தது என்பது என் உழைப்புக்குக் கிடைத்த வரம். இன்று வரை என் எழுத்தின் தரமும் குறையவில்லை. அதற்கான பல்கலைக்கழக அங்கீகாரங்களுக்கும் குறைவில்லை.
கம்ப்யூட்டர் துறை மட்டுமில்லாது பல்வேறு துறைகளிலும் வல்லவராகத் திகழும் தாங்கள் இன்னும் சாதிக்க நினைக்கும் துறை ஏதேனும் உள்ளதா?
என் திறமை கிரியேட்டிவிட்டி. அது ஒன்றுதான் என் எல்லா திறமைகளுக்கும், குணங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் அடிப்படை. இவ்வளவு ஏன் நான் சொந்தமாக நிறுவனம் தொடங்கியதுகூட கிரியேட்டிவிட்டியினால்தான்.
அது எந்தெந்த பாதைகளை எல்லாம் வடிவமைத்துக்கொடுக்கிறதோ அந்தப் பாதைகளில் எல்லாம் பயணம் செய்கிறேன். அவ்வளவுதான்.
இதை சாதிக்க வேண்டும் என்று குறிப்பாக நான் எதையுமே என்றுமே நினைத்ததில்லை. செய்வதை திருந்தச் செய்ய வேண்டும், முன்பு செய்ததைவிட மிக சிறப்பாக செய்ய வேண்டும், என் முந்தைய செயல்பாடுகளின் வெற்றியை நானே புது முயற்சிகள் மூலம் முறியடிக்க வேண்டும். அவ்வளவுதான். அந்த எண்ணம்தான் என்னை முன்னெடுத்துச் செல்கின்றது.
—***—