மகளிர்  சுய உதவிக்குழு பெண்களுக்கான   ‘கம்ப்யூட்டர் சுய தொழில் விழிப்புணர்வு’ நிகழ்ச்சி (2010)

 

அண்ணா பல்கலைக்கழகமும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு மையமும் இணைந்து ஊரப்பாக்கம் சுயமகளிர் உதவிக்குழுக்காக நடத்திய மகளிர்  சுய உதவிக்குழு பெண்களுக்கான  ‘கம்ப்யூட்டர் சுய தொழில் விழிப்புணர்வு’ நிகழ்ச்சி ஆகஸ்ட் 15, 2010 ஊரப்பாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரை… நிகழ்ச்சி குறித்த செய்திக்கு Click Here

கம்ப்யூட்டர்அன்றும், இன்றும்

முன்பெல்லாம் எங்கள் பள்ளி கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு விட்டது. எங்கள் அலுவலகம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. எங்கள் வங்கி கம்ப்யூட்டர் மயப்பாக்கப்பட்ட வங்கி என்று சொல்வது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. ஆனால் இன்றோ, ஒவ்வொரு வீட்டிலும் டி.வி. பிரிட்ஜ் போல கம்ப்யூட்டரும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. குறைந்தபட்சம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகிறார்கள். மற்றவர்கள் கம்ப்யூட்டரினால் கிதைக்கும் பலன்களை அனுபவித்து வருகிறார்கள்.

வீடுகளில், பள்ளிகளில், கல்லூரிகளில், அலுவலகங்களில், மளிகைக்கடைகளில், மருந்தகங்களில், சினிமா தியேட்டர்களில், பஸ், இரயில், விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் இடங்களில்…இப்படி கம்ப்யூட்டரின் ஆளுமை உள்ள இடங்களை அடுக்கிக் கொண்டேப் போகலாம்.

படிப்பறிவே இல்லாத ஒரு மளிகைக் கடை ஊழியர் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி பில் போடுவதையும், பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பே படித்த பெண்கள் இலாவகமாக கம்ப்யூட்டரில் டைப் செய்யும் டி.டி.பி சென்டர்களையும் பார்க்கும் போது, எந்த அளவுக்கு கம்ப்யூட்டர் அவசியம் என்ற உண்மை புரியும்.

ஆம். இன்று எங்கும் கம்ப்யூட்டர், எதிலும் கம்ப்யூட்டர்!

 

பொதுவாக பெண்களின் ஆசை

இந்த தகவல் புரட்சியில் பெண்களும் தங்களை இணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

பொதுவாக பெண்கள் நினைப்பது என்னவென்றால்…

“வீட்டில் இருந்தபடியே கம்ப்யூட்டரில் டிஸைன் செய்ய வேண்டும்”
“குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டி 10-3 வரை கம்ப்யூட்டரில் ஏதாவது ஒர்க் செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கணும்…”
“நேரத்தைக் கடத்துவதே கஷ்டமா இருக்கு… ஏதாவது கம்ப்யூட்டரில் உட்கார்ந்த இடத்திலேயே பண்ணனும்…”
“இன்டர்நெட்டில் டியூஷன் எடுக்கணும்…”

பொதுவாக பெண்களின் தயக்கம்

பெண்களிடம் கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு பிசினஸ் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கும் அளவுக்கு சில தயக்கங்களும் இருக்கிறது.

“பிளஸ் டூ தானே படித்திருக்கிறோம்…இந்தப் படிப்பு போதுமா?”
“தமிழ் மட்டும் தானே தெரியும்…ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரியாதே?”
“கம்ப்யூட்டர் வாங்க அதிகம் பணம் வேண்டுமே?”
“இந்த வயதில் கம்ப்யூட்டர் பழக வருமா?”

பெண்களால் எதையும் சாதிக்க முடியும்

பெண்கள் எங்கிருந்தாலும்… அது வளர்ந்த மாநகரமாக இருந்தாலும் சரி… வளர்ந்து வரும் நகரமாக இருந்தாலும் சரி… ஏன் குக்கிராமமாக இருந்தாலும் சரி…

ஒவ்வொருவரும் கம்ப்யூட்டர் கற்கலாம்.
கம்ப்யூட்டர் மூலம் தொழில் செய்யலாம்.
கம்ப்யூட்டர் மூலம் தொழில் செய்து பணம் சம்பாதிக்கலாம்.

பெண்களால் செய்யக் கூடிய கம்ப்யூட்டர் சார்ந்த தொழில் வாய்ப்புகள் 

1.கம்ப்யூட்டரில் டைப்பிங்
2.கம்ப்யூட்டரில் அக்கவுண்ட்ஸ்
3.இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்
4.கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள்
5.டேட்டா என்ட்ரி துறை
6.இன்டர்நெட் தொழில் வாய்ப்புகள்
7.மெடிகல் டிரான்ஸ்கிரிப்ஷன்
8.இ-பப்ளிஷிங்
9.ஆன்-லைன் டியூஷன்
10.டி.டி.பி
11.டெக்ஸ்டைல் டிஸைனிங்
12.வெப் டிஸைனிங்
13.கட்டிட வடிவமைப்பில் கம்ப்யூட்டர்
14.மல்டி மீடியா

பெண்களுக்கான தொழில் ஆலோசனைகள்

1.வாய்ப்புகள் VS தேவைகள்

நம் நாட்டில் வேலை வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் ஏராளமாக ஒரு பக்கம் குவிந்து கிடக்க, வேலை தேடிக் கொண்டிருப்பவர்களும், பணத்தை வைத்துக் கொண்டு தொழில் செய்யத் துடித்துக் கொண்டிருப்பவர்களும் மறுபக்கம் பாதை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன படிக்கிறோமோ அதே துறையில் தான் வேலை செய்ய வேண்டும் அல்லது தொழில் செய்ய வேண்டும் என்கிற மனோபாவம் தான் இதற்குக் காரணம்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த மேலை நாடுகளில் 16 வயதுக்கு நிரம்பிய இளைஞர்கள் அவர்களே உழைத்து வாழ வேண்டிய நிலையில் இருப்பதால், அவர்கள் ஹோட்டல்களில், பெட்ரோல் பங்குகளில், ஷாப்பிங் சென்டர்களில் வேலை செய்ய தயங்குவதும் இல்லை. கூச்சப்படுவதும் இல்லை. இதன் காரணமாய் , படித்து முடித்த MBA மாணவர்கள் விவசாயம் செய்கிறார்கள். B.Tech மாணவர்கள் மீன் பண்ணையை நிர்வகிக்கிறார்கள். அவர்கள் ‘செய்யும் வேலையில்’ கெளரவம் பார்ப்பதில்லை. இதன் காரணமாய் வளர்ந்த மேலை நாடுகளில் வேலை இல்லாத திண்டாட்டம் இல்லை.

இங்கு படிக்கும் போது பகுதி நேரமாக வேலை செய்பவர்களுக்கு ‘வசதி இல்லாதவர்கள்’ என்ற பட்டமும், படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத வேலையை செய்பவர்களுக்கு ‘சுமாராகப் படிக்கும் மாணவர்’ என்ற போர்வையும், படித்து விட்டு வெளிநாடு செல்லாமல் இங்கேயே வேலை செய்பவர்களுக்கு ‘தகுதி இல்லாத நபர்’ என்ற பெயரும் தாராளமாக இலவசமாகவே கிடைக்கிறது.

வாய்ப்புகளும், தேவைகளும் ஒன்றோடொன்று கை கோர்த்துக் கொள்ளும் போது, நம் நாட்டிலும் அனைவருக்கும் வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் பரவலாகக் கிடைக்கும் என்பது உறுதி. அது எப்போது நடக்கும்? படிப்பு என்பது வேலைக்காகவும் , பணம் சம்பாதிக்கவும் மட்டுமே என்கிற எண்ணம் மாறும் போது நடக்கும்.

2. நீங்களும் முதலாளி தான்…

உங்களிடம் பணம் இருக்கிறது என்று தொழில் ஆரம்பித்து விடாதீர்கள்.
சுய தொழிலுக்கு பணம் மட்டுமே போதாது. கடின உழைப்பு, அடிப்படைக் கல்வி, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அறிவு, அனுபவம், பொறுமை, சகிப்புத் தன்மை, விடா முயற்சி, அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு வேலை செய்யும் தன்மை…. சுய தொழிலுக்கு அவசியமானவைகளை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

சுய தொழில் ஆரம்பித்து விட்டால் நீங்கள் வேலை செய்ய வேண்டாம் என்று மட்டும் கற்பனைக் கோட்டைக் கட்டி விடாதீர்கள். ‘ஆபீஸில் மானேஜர் தொந்திரவு கிடையாதுப்பா…ஏதோ நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போகலாம்…யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்’ இப்படியெல்லாம் மருந்துக்குக் கூட எண்ணி விடாதீர்கள்.

சுய தொழில் ஆரம்பித்த பிறகு தான் மிகவும் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். பலருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். உங்களிடம் வேலை செய்பவர்களிடம் வேலை வாங்குவது என்பதே பெரிய வேலையாக இருக்கும். அதற்காகவே உங்கள் கோபம், சிடுசிடுப்பு, அவசரம், படபடப்பு போன்ற குணங்களை தூர எறிந்து விட வேண்டியிருக்கும். வேலை செய்பவர்களிடமும் இணக்கமாக இருக்க வேண்டும், அதே சமயம், உங்கள் கஸ்டமர்களிடமும் இன்முகத்தோடு பேச வேண்டியிருக்கும். இரண்டையும் பாலன்ஸ் செய்து நீங்கள் ஜெயிக்க வேண்டும். சுய தொழில் மிகப் பெரிய சவால் தான்!

நீங்கள் தொழிலாளியாக இருக்கும் போது உங்களுக்கு ஒரே ஒரு பாஸ்…. நீங்கள் முதலாளி ஆகிவிட்டால் உங்களிடம் வேலை செய்யும் ஒவ்வொருவரும் உங்களுக்கு பாஸ்!

3. வீட்டைத் தாண்டிய உலகம்

நான் எழுதுகின்ற புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவும், நான் நடத்துகின்ற கல்வி-தொழில் சார்ந்த ஒர்க்‌ஷாப்புகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் பயன்பெறும் பெண்கள் பலர் தினந்தோறும் என்னிடம் தொலைபேசி வழியாகவும், கடிதம் மற்றும் இமெயில் மூலமாகவும் தொடர்பு கொண்டு பேசுவதுண்டு. அவர்களில் 99 சதவிகிதப் பெண்கள் கேட்பதெல்லாம் இது தான்:

‘வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறது… அதை வைத்துக் கொண்டு வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க வேண்டும்… எங்கு ஆர்டர் கிடைக்கும்?’. இப்படி கேட்பவர்களிடம் நான் சொல்லும் பதில் இது தான். ‘என்னை நேரில் சந்தித்துப் பேசவும்’. ஆனால், போனில் தொடர்பு கொண்டு பேசும் 99% பெண்களின் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா? ‘எங்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது… போனிலேயே ஆலோசனையைச் சொல்லவும்…’

ஆலோசனையைக் கேட்கக் கூட வீட்டைவிட்டு வெளியே வர விரும்பாத அல்லது முடியாத பெண்கள் எப்படி இந்த போட்டி நிறைந்த உலகத்தில் நின்று ஜெயிக்க முடியும்?

சுயமாக தொழில் செய்ய விரும்பும் பெண்கள் முதலில் வீட்டை விட்டு வெளியே வந்து உலக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்று புரியும். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியும். புதுப்புது வரவுகள், படிப்புகள், வியாபாரங்கள் என்று எல்லாம் பிடிபடும். சுயதொழில் செய்ய வேண்டும் என்று ஆழமாக விரும்பி விட்டால்…ஷாப்பிங் போகும் போது பார்க்கும் நகையை வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தோன்றாது… துணிக்கடை பொம்மைகள் கட்டிக் கொண்டிருக்கும் புடவையை வாங்கி உடுத்திக் கொள்ளத் தோன்றாது…என்ன தோன்றும் தெரியுமா? பார்க்கின்ற நகையைப் போல, புடவையைப் போல நாமும் கம்ப்யூட்டரில் வடிவமைக்க வேண்டும், அப்படி வடிவமைக்க என்ன கற்றுக் கொள்ள வேண்டும், கம்ப்யூட்டரில் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்து விடும். உங்கள் மன மாற்றத்தை நீங்களே உணருவீர்கள். எனவே, டி.வி சீரியல்கள் காட்டும் உலகத்திலேயே பொழுதைக் கழிக்காமல், உண்மையான உலகத்தைக் காணவும், அனுபவம் பெறவும் வீட்டைத் தாண்டி வர வேண்டும்.

4. ‘டிமாண்ட்’

சுயதொழிலில் வெற்றி பெற, உங்களுக்கு நான் சமீபத்தில் படித்த கதை ஒன்றைக் கூறுகிறேன்.

கதையின் சாராம்சம் இது தான்: வெங்காயம் விலை எகிறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு ஹோட்டல் முதலாளி ‘வெங்காய போண்டா’, ‘வெங்காய சாம்பார்’, ’வெங்காய பஜ்ஜி’, ‘வெங்காய குருமா’ என்று வெங்காயத்தில் செய்த ஐயிட்டங்களையே தினமும் செய்து, நோட்டிஸ் அடித்து கஸ்டமர்களை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தார். அப்போது, ஹோட்டல் சரக்கு மாஸ்டர் முதலாளியிடம் கேட்டாராம்…

‘சார்…வெங்காயம் விற்கும் விலையில், எப்படி சார் கட்டுபடி ஆகும்’. அதற்கு முதலாளி சொன்ன பதில் இது தான்… ‘வெங்காய விலை அதிகம் இருப்பதால், வீடுகளில் அதிகம் வாங்கிப் பயன்படுத்த மாட்டார்கள். எனவே நாம் நியாயமான விலையில் வெங்காய ஐட்டங்களை செய்யும் போது ஹோட்டலில் கஸ்டமர்களின் கூட்டம் அதிகமாகும். நல்ல தரமான பொருட்களை, அதன் டிமாண்ட் நேரத்தில் தரும் போது, ஐயிட்டங்களின் விலை சற்று அதிகம் இருந்தால் கூட, வியாபாரத்தில் கஸ்டமர்கள் அதிகரிப்பார்கள். அதனால் நஷ்டம் வராது. லாபத்துடன் நல்ல பெயரும் கிடைக்கும்’.

உங்கள் வேலை சுத்தமாக இருந்தால், நீங்கள் தேடிச் சென்று ஆர்டர் வாங்க வேண்டி இருக்காது. உங்களை நாடி ஆர்டர்கள் வந்துக் குவியத் தொடங்கும். உங்களிடம் வேலைக்கு ஆட்கள் போட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும்.

எல்லோரும் செய்யும் தொழிலையே செய்வதை விட, டிமாண்ட் அதிகம் இருப்பதை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்.

5. திறமையைப் பட்டை தீட்டுங்கள்

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு, BE கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பெண் என் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் துறையில் புரோகிராமராக வேலை செய்து வந்தார். திருமணம் காரணமாக வேலையில் இருந்து நின்று விட்டார். கடந்த ஜனவரி மாதம் என்னிடம் திரும்ப வந்து வேலை கேட்டார். அவரது வேலை செய்யும் பாங்கும், தொழில்நுட்ப அறிவும் எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், நானும் அவரை மார்ச் மாதம் சர்வதேச பெண்கள் தினத்தன்று வேலையில் திரும்ப சேரச் சொல்லி இருந்தேன்.

காலை 10 மணிக்கு அவரிடம் இன்டர்நெட்டில் இருந்து தகவல்களை சேகரிக்கும் ஒரு வேலையைக் கொடுத்துவிட்டு என் சீட்டில் வந்தமர்ந்தேன். சரியாக 10.10-க்கு பரபரப்பாக என் அறையில் நுழைந்து “மேடம்… இன்டர்நெட்டில் எப்படி செல்வது. எனக்கு இன்டர்நெட் பற்றி எதுவுமே தெரியாது…எனக்கு 1 மாதம் பயிற்சி அளித்தால் போதும்…” என்று ஏதேதோ சொல்லிக் கொண்டே போனார். எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில், இதற்கு மேல் அவர் பேசிய எதுவுமே எனக்கு காதில் விழவில்லை. பி.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த ஒரு பெண் 10 வருடம் சப்ஜெக்ட்டில் தொடர்பில்லாததால் இந்த அளவுக்கு பின் தங்கி விட்டாரே என்று எனக்கு ஏக ஆதங்கம்.

அதுவும் அந்த பெண் என்னிடம் வேலை கேட்டு வந்து 2 மாதங்கள் கழித்து தான் வேலையில் சேர நான் அழைப்பு விடுத்திருந்தேன். அந்த 2 மாதத்திலாவது, வீட்டில் கம்ப்யூட்டர் இல்லாவிட்டாலும், பிரவுசிங் சென்டர் சென்றாவது தன் கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொண்டிருக்கலாம். இப்படி எந்த முயற்சியுமே செய்யாமல், மறந்து போன சப்ஜெக்ட்டோடு என்னிடம் வேலையில் சேர்ந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது. அந்த பெண்ணிடம் நான் சொன்னது இது தான் ‘இப்படி எதுவுமே தெரியாமல் வந்திருக்கிறீர்களே…. என் நிறுவனத்தில் என்ன வேலை செய்யலாம் என்று நினைத்து வந்திருக்கிறீர்கள்… இப்படி உங்கள் திறமைகளை வீணடித்துக் கொண்ட பெண்ணாக, பெண்கள் தினத்தன்று என் முன் வந்து நின்றிருக்கிறீர்களே…’

இது போன்று இன்று ஏராளமானோர் BE, BTech, MCA படித்துவிட்டு, தங்களின் அறிவை மேப்படுத்திக் கொள்ளாமல், வேலை செய்ய வேண்டும், தொழில் செய்ய வேண்டும் என்று கிளம்பி தோற்று விடுகிறார்கள். வேலையிலும், தொழிலிலும் ஜெயிக்க உங்கள் திறமை, படிப்பு, வளர்ந்துவரும் தொழில்நுட்ப அறிவு போன்றவைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

6. உங்கள் குடும்பத்தை சமாதானப்படுத்துங்கள்

சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்றால், முதலில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களோடு உட்கார்ந்து பேச வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள தொழிலில் உள்ள பிளஸ், மைனஸ்களை அவர்களோடு கலந்து ஆலோசிக்க வேண்டும். குடும்பம் ஒத்துழைக்காவிட்டால் நிம்மதியாக சுயதொழிலில் ஈடுபட முடியாது. எனவே அவர்களை முதலில் சமாதானப்படுத்துங்கள்.

சுயதொழில் தொடங்கி விட்டால் ‘முதலாளி!’ என்கிற மனோபாவம் தானாகவே ஒட்டிக் கொள்ளும். அது தான் உங்கள் முதல் எதிரி. நல்ல தொழிலாளி தான், நல்ல முதலாளியாக இருக்க முடியும். வேலை தெரியாத-வேலை செய்யாத முதலாளிகள் ஜெயிப்பதில்லை. ஜெயித்த சரித்திரமும் இல்லை. எனவே வேலை வாங்கத் தெரிய வேண்டும் என்றால், வேலை செய்யத் தெரிய வேண்டும். எனவே, முதலில் நீங்கள் வேலை செய்து பழகுங்கள். நீங்கள் இறங்கி வேலை செய்யும் போது தான், உங்கள் கீழ் வேலை செய்பவர்களும் உங்களோடு இணைந்து வேலை செய்வார்கள்.

ஒரு பெரிய தொழிலதிபர் தனது வெற்றியின் இரகசியத்தை ஒரு இன்டர்வியூவில் கூறினார் ‘எனக்கு என் நிறுவனத்தில் இயங்கி வரும் ஒவ்வொரு பிரிவு வேலையும் அத்துபடி. ஒரு குறிப்பிட்ட பிரிவில் வேலைக்கு ஆட்கள் விடுமுறை எடுத்துச் சென்றுவிட்டாலும், என்னால் அந்த வேலையை முடித்து என் கஸ்டமருக்கு குறித்த நேரத்தில் அனுப்பி வைக்க முடியும்’. இது தான் வெற்றியின் சூட்சுமம்.

ஏதேனும் பிஸினஸ் மீட்டிங்கிற்கு குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால், அதற்காகவே தான் உங்கள் நேரத்தையும், அன்றைய வேலை முறையையும் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். ‘இன்று அந்த பக்கம் வரும் வேலை இல்லை. நாளை அங்கு ஒரு வேலை இருக்கிறது… நாளை வரலாமா?’ என்றெல்லாம் கேட்டு கிடைத்த அப்பாயின்மெண்டை தவற விடக் கூடாது. அதாவது உங்கள் அணுகுமுறையில் Professionalism தெரிய வேண்டும். விருந்தாளிகள் வீடுகளுக்குச் செல்வதைப் போல காஷீவலாகச் செல்லக் கூடாது. இரண்டு பேர் வேலை செய்யும் குடும்பங்களில் இன்று விருந்தாளிகள் வீடுகளுக்குக் கூட காஷீவலாகச் செல்ல முடிவதில்லையே.

7. நம்பிக்கைக்குப் பாத்திரமாகுங்கள்

யாரும் நீங்கள் சும்மா உட்கார்ந்திருப்பதற்காகவும், தூங்குவதற்காகவும் பணத்தை உங்களிடம் கொடுக்க மாட்டார்கள். எனவே, ’நீங்கள் ஓய்வெடுக்கும் மணித்துளி ஒவ்வொன்றும் டாலராகும்’, ‘இந்த வெப்சைட்டை 100 முறை கிளிக் செய்து 100 நபர்களுக்கு அனுப்பினால் உங்கள் வங்கிக் கணக்கில் 100 டாலர் ஏறும்’-இது போன்ற விளம்பர வார்த்தைகளை நம்ப வேண்டாம். உழைத்து சம்பாதிப்பது தான் உடம்பில் ஒட்டும். எனவே, நேர்மையாக உழைத்து சம்பதிக்க வழியை யார் சொன்னாலும் கேட்கலாம்.

வங்கி கணக்குகளை ஒரே வங்கியில் தொடர்ந்து பராமரித்து வாருங்கள்.
கடன் தான் கிடைக்கிறதே என்று எல்லோரிடமும், எல்லா வங்கிகளிலும் உங்கள் சக்திக்கு மீறி கடன் வாங்கி விடாதீர்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப கடன் வாங்குங்கள். அதன் தவணையை சரியாகக் கட்டிக் கொண்டே வாருங்கள். அப்போது தான் எதிர்காலத்தில் வேறொரு சமயம் கடனுக்கு அணுகும் போது சரியான வரவேற்பு இருக்கும்.

அது போல தொலைபேசி எண்கள், மொபைல் போன் எண்கள் போன்றவைகளையும் அடிக்கடி மாற்றம் செய்யாதீர்கள். அப்படி மாற்றம் செய்து விட்டு வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காவிட்டால், அது உங்கள் மீதான நம்பிக்கையை உடைத்தெறியும்.

‘ஏட்டிக்குப் போட்டி’ மனோபாவத்தை விட்டுவிட வேண்டும். வாடிக்கையாளர் மிகுந்த கோபத்துடன் உங்களிடம் வாக்குவாதம் செய்யும் போது, நீங்கள் கோபம் கொள்ளாமல் தன்மையாகப் பேசினால் பிரச்சனை சுலபமாகத் தீர்ந்துவிடும். இரண்டு பேரும் கோபத்தில் பேசிக் கொண்டே போனால் உங்கள் மீதும், நீங்கள் செய்கின்ற தொழில் மீதும் இருக்கின்ற நம்பிக்கை செயலிழந்து போய்விடும். வாடிக்கையாளருக்கு கண்டிப்பாக வேறொரு நபர் கிடைத்து விடுவார். இழப்பு உங்களுக்குத் தான். நீங்கள் தான் ஒரு வாடிக்கையாளரை இழப்பீர்கள். நேரடியாக 1 வாடிக்கையாளரை இழக்கும் நீங்கள் மறைமுகமாக 10 வாடிக்கையாளர்களை இழப்பீர்கள். ஆம். அற்ப வாக்குவாதத்தின் மூலம் நீங்கள் இழந்த ஒரு வாடிக்கையாளர் வாய் வழியாகச் சொல்லும் 10 வாடிக்கையாளர்கள் உங்களை விட்டு விலகி விடுவார்கள்.

8. எல்லாவற்றையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில், நாம் சொல்வதைக் கேட்டு அதன்படி அப்படியே செயல்படக் கூடிய இரண்டு நபர்கள் யார் தெரியுமா? நம் உடம்பும், மனதும் தான். ஆம். நம் மனது என்ன சொல்கிறதோ, அதன்படி செயல்படக்கூடியது நம் உடல். நம் மனதை எப்படித் தயார் செய்கிறோமோ, கண்டிப்பாக அதன்படி அது செயல்படும். மனதின் கட்டளைபடி உடம்பும் ஒத்துழைக்கும். இது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சி முடிவாகும்.

நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்து விட வேண்டும் என்று உங்கள் ஆழ்மனதுக்கு உத்தரவு போட்டு விட்டு தூங்கிப் பழகுங்கள். உங்களுக்கு அலாரம் இல்லாமலேயே ‘டாண்!’ என்று 4 மணிக்கு விழிப்பு வந்துவிடும். உதாரணத்துக்கு, தொடர்ந்து சீரியல் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், குறிப்பிட்ட நேரத்தில் சிகரெட் பிடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சீரியல் பார்க்காவிட்டாலோ அல்லது சிகரெட் பிடிக்கா விட்டாலோ ஏன் உடம்பில் ஒரு அதிர்வும், மனதில் ஒரு தடுமாற்றமும் ஏற்படுகிறது? வழக்கம். அதுதான் காரணம். வழக்கமாக செய்யும் எந்த ஒரு விருப்பமான செயலையும், அந்த நேரத்தில் செய்ய முடியாமல் போகும் போது மனதில் அதிர்ப்தி ஏற்படுகிறது. செயல் தடுமாற்றம் உண்டாகிறது.

இதுபோல எல்லா நல்ல விஷயங்களையும் நம் வழக்கமாக்கிக் கொண்டுவிட்டால் அதற்கு நாம் அடிமையாகிவிடலாம். ஆம். வழக்கம் என்பது நம் மனதில் ஆழப் பதிந்துவிடக் கூடிய ஒன்றாகும். கண்டிப்பாக நம் மனது சொல்வதை உடலும் கேட்கும்.

எனவே, உங்கள் வாடிக்கையாளர்களிடம் பேசும் போது சிரித்த முகத்துடன் தான் பேச வேண்டும் என்று உங்கள் மனதுக்கு நீங்கள் கட்டளை இட்டுப் பாருங்கள். அது உங்கள் வழக்கமாகி விடும். எப்போதுமே சிரித்த முகமும், செம்மையான பேச்சும் உங்கள் தொழிலுக்கு மிகப் பெரிய பிளஸ் ஆகிவிடும்.

எத்தனையோ கோபக்கார நபர்கள் சுயதொழில் ஆரம்பித்த பிறகு, இன்முகமாக மாறத் தொடங்கி இருக்கிறார்கள். சிடுமூஞ்சிகள் பலர் கலகலப்பான நபர்களாகி இருக்கிறார்கள். ‘வெடுக் வெடுக்’ என பேசும் பலர் இன்சொல் பேசுபவர்களாக மாறி இருக்கிறார்கள். காரணம். இப்படியெல்லாம் இருந்தால் பிஸினஸ் நன்றாக நடக்கிறது என்ற பாஸிடிவான விஷயம் தான் ஆளையே மாற்றி விடுகிறது. ஏதேனும் ஒருசில காரணங்களினால் சுபாவமே மாறும் என்கிற போது, நம் மனது சொல்படி உடம்பு கேட்கிறது என்று தானே அர்த்தம். ஆகவே, எதையும் உங்கள் வழக்கமாக்கிக் கொண்டால் எதிலும் நீங்கள் ஜெயிக்கலாம்.

9. நேரம் தவறாமை

சிறு தொழில்கள் பெருகிவிட்ட இன்றைய சூழலில், வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. வேலை செய்வதற்கு ஆள் இல்லை. இதன் காரணமாய், 2 நபர்கள் வேலை செய்கின்ற ஒரு சிறுதொழில் புரியும் நிறுவனத்தில் சக்திக்கும் அதிகமாக வேலையை எடுத்துக் கொண்டு விட்டு, நேரத்தில் முடிக்க முடியாமல் தடுமாறுவதுண்டு. வாடிக்கையாளர்கள் போன் செய்யும் போது ‘வேலை முடியவில்லை’ என்று பதில் சொல்ல சங்கடப்பட்டுக் கொண்டு மொபைல் போனில் எண்ணைப் பார்த்ததுமே, லைனை கட் செய்வதும், போனை எடுத்துப் பேசாமல் தவிர்ப்பதும் இன்றைய மொபைல் தொழில்நுட்ப உலகில் வசதியாகப் போய்விட்டது. இது போன்ற செயல்கள் தொழிலை நீண்ட நாட்களுக்கு நடத்த உதவாது. போனை எடுக்காமல் தவிர்ப்பது என்பது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. தவிர, பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும்.

ஆர்டர் எடுக்கும் போதே 2-3 நாட்கள் அதிகம் சொல்லி ஆர்டர் எடுத்துவிட்டால், இறுதி நேர டென்ஷனில் இருந்து தப்பிக்கலாமே. நேரம் தவறாமை என்பது பிஸினஸீக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். நாம் நேரம் தவறி நடப்பதோடு, அடுத்தவர்களின் நேரத்தையும் சேர்த்தல்லவா நாம் எடுத்துக் கொள்கிறோம்.

வளர்ந்த மேலை நாடுகளில், முன் அனுமதி இல்லாமல் விருந்தினர்கள் வீடுகளுக்குக் கூட போக மாட்டார்கள். மேலும், குறிப்பிட்ட நேரத்தில் சென்று விடுவார்கள். நேரம் தவறாமை என்பது அவர்களின் உயிர் மூச்சாகும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பதைப் போலவும், பசித்தால் சாப்பிடுவதைப் போலவும், தூக்கம் வந்தால் தூங்குவதைப் போலவும், நேரம் தவறாமை என்பது அவர்களின் வழக்கமாகி பழகி விட்டது. 6 மணிக்கு ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் 5.55-க்கு அந்த இடத்தின் வாசலில் ஆஜராகி இருப்பார்கள். சரியாக 6.00 மணிக்கு உள்ளே நுழைவார்கள். இது போன்ற நேரம் தவறாமையினால், அங்குள்ளவர்களுக்கு வேலை நேரம் போக குடும்பத்தோடு செலவிட நேரம் நிறைய கிடைக்கிறது.

இங்கு நாம் நம் நேரத்தோடு, அடுத்தவர்களின் நேரத்தையும் சேர்த்தல்லவா வீணடிக்கிறோம். பணம், காசு சேமிப்பதைப் போல, தண்ணீரை சேமிப்பதைப் போல நேரத்தையும் சேமிக்கப் பழக வேண்டும். நேரம் தவறாமையினால் மட்டுமே அது சாத்தியம்.

10. உங்களைச் சுற்றி அனுபவம் மிக்கவர்கள்

எப்போதுமே உங்களைச் சுற்றி அனுபவம் மிக்க நபர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். நம்மைவிட மேலானவர்கள், சிறப்பாக செயல்புரிபவர்கள் இருக்கின்ற இடங்களில் செயல்பட்டால், அவர்கள் ஏதேதோ செய்ய, நாமும் முயற்சிக்க நாம் முன்பு இருந்ததை விட சில படிகளாவது கண்டிப்பாக முன்னேறுவோம். நம் தரமும் அதிகரிக்கும்.

அது போல நமக்கு நாமே கட்டளையிட்டுக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு ஒரு கட்டளை: ‘என்ன நீ ரொம்ப சோம்பேரியாக இருக்கிறாய்… இந்த வேலையை இன்னும் 2-3 நாட்களில் முடித்து விடு’. இது போன்ற சுய கட்டளைகள் நாம் வேலைகளை சுலபமாகவும், சீக்கிரமாகவும் முடிக்க வழிவகுக்கும். மாபெரும் எழுத்தாளர் திரு. சா. கந்தசாமி அவர்கள் கூட தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொள்வாராம். ‘கந்தசாமி! நீ கதை எழுதி பல நாள் ஆகி விட்டதே…இன்று ஒரு கதை எழுதேன்’ என்பது போல சுயகட்டளை இட்டுக் கொள்ளும் அவர், அந்த கட்டளைக்குக் கீழ்படிந்து கட்டளையிட்டுக் கொண்ட அன்றே கதையை எழுதி முடிப்பாராம்.

மேலும் நம் பிடிவாத குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆம். நான் இருக்கின்ற இடத்தை சுத்தமாகத் தான் வைத்துக் கொள்வேன், மிக சிறப்பானவைகளுக்கு சற்று குறைவாக இருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன், நேர்மையாக மட்டுமே இருப்பேன், விரைவாகவும், சரியாகவும், பெரியதாகவும், பிரமாண்டமாகவும் மட்டுமே என்னால் ஒரு காரியத்தை செய்ய முடியும்… இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பிடிவாத குணங்களாக ஆக்கிக் கொண்டு விட்டால் கண்டிப்பாக அதில் இருந்து உங்களால் மாறவே முடியாது. உதாரணத்துக்கு படுக்கையை விட்டு காலையில் 7 மணிக்குக் குறைந்து எழுவதில்லை என்னும் பழக்கத்துக்கு அடிமையான உங்களுக்கு 6 மணிக்கோ, 5 மணிக்கோ விழிப்பு கொடுக்குமா? அலாரம் அடித்துக் கொண்டே இருந்தாலும் அந்த சப்தம் உங்கள் காதுகளுக்கு கேட்குமா?

எனவே, பல நல்ல விஷயங்களுக்கு அடிமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த பழக்கங்களை பிடிவாதமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் நமக்கு நாமே கட்டளையிட்டுக் கொள்ள வேண்டும்.

11. வேலை செய்யும் பாங்கு

வேலை செய்யும் பாங்கைப் பற்றி புரிந்து கொள்ள என் அனுபவம் ஒன்றைக் கேளுங்கள். என் பெற்றோர் சிறு வயதில் இருந்தே எல்லா காய்களையும் சாப்பிட வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார்கள். பாகற்காய் செய்தால் கூட அதையும் கசக்காமல் சாப்பிட அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்த விஷயத்தை தான், இன்று ஏ.சி அறையில், டை கட்டிய வல்லுநர்கள் Time Management வகுப்புகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

அதாவது, சாப்பிடும் தட்டில் பிடிக்காத பாகற்காயுடன், பிடித்த உருளைக் கிழங்கும் இருந்தால், முதலில் பிடிக்காததை சாப்பிட்டு விட்டால் அதன் பிறகு ரசித்து ருசித்து பிடித்ததை சாப்பிடலாம். இது தான் என் பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம்.

ஆம். பரிட்சைக்குப் படிக்கும் போது கூட, முதலில் மிகவும் சுலபமான பகுதியை படிக்க உட்கார்ந்தால், ‘ஐயோ, கஷ்டமான பகுதியை எப்படித்தான் படிக்கப் போகிறேனோ’ என்ற மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். எனவே, 30 நிமிடங்களில் முடிக்க வேண்டிய சுலபமான பகுதியை படிக்க 2 மணி நேரம் ஆகிவிடும். எனவே கஷ்டமான பகுதியை முதலில் படித்து முடித்து விட்டால் ‘ஐயோ, கஷ்டமான பகுதியை எப்படித்தான் படிக்கப் போகிறேனோ’ என்ற மன உளைச்சல் சுத்தமாக இருக்காது. சுலபமான பகுதியை விரைவாக படித்து முடிக்க மன உளைச்சல் இல்லாத அந்த மனது நன்றாக ஒத்துழைக்கும்.

அது போல, நாம் செய்கின்ற வேலைகளில், நாம் கஷ்டம் என்று உணரும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதில் கவனம் செலுத்தி முடித்து விட்டால் மற்ற சின்ன சின்ன வேலைகளை சந்தோஷமான மனநிலையில் முடிக்க முடியும்.

12.  எதையும் எழுதி வைக்கும் கலை

என் பெற்றோர் கற்றுக் கொடுத்த இன்னொரு விஷயமும் இன்றைய Personality Development வகுப்புகளில் பரபரப்பாக பேசப்படுகிறது. அது என்னவென்றால் எதையும் எழுதி வைத்து விட்டால் கஷ்டமாக இருந்தால் பாதி குறையும். சந்தோஷமாக இருந்தால் இரட்டிப்பாகும்.

ஆம். இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பச் சூழலில், என் பெற்றோர் இல்லாத நேரங்களில் எங்களுக்குள் (என் சகோதரி மற்றும் சகோதரனுடன்) சண்டை வந்தால் வாய் வார்த்தை கை சண்டையாக மாறாமல் இருக்க ஒரு யோசனை சொன்னார்கள். எங்கள் மூவருக்கும் தனித்தனியாக நோட்டு ஒன்றைக் கொடுத்தார்கள். எங்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு வந்தால், ஒருவருக்கு மற்றவரிடம் பிடிக்காத விஷயத்தை அதில் எழுதி வைக்க வேண்டியது தான் அந்த யோசனை. பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் நோட்டு புத்தகங்களை வைத்துக் கொண்டு விசாரனை நடக்கும். இதுபோல எழுதி வைப்பதால், கோபத்தின் தீவிரம் குறைகிறது. இன்னும் சொல்லப் போனால், பெற்றோர் வீட்டிற்கு வருவதற்குள் எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காணாமல் போன நாட்களும் உண்டு. நோட்டைப் பார்க்கும் போது தான் ‘ஓஹோ…இவ்வளவு நடந்துள்ளதா!’ என்று தோன்றும்.

நம்முடைய சோகம், துக்கம், ஏமாற்றம் போன்ற அனைத்தையும் எழுதி வைப்பதன் மூலம் அவைகளின் வீரியம் குறைகிறது. இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலான நேரங்களில் அவைகளுக்கு நல்ல தீர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

சுயநலன் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், யாரிடமும் 100 சதவிகிதம் மனம் விட்டுப் பேச முடிவதில்லை. நம் பலவீனம் மற்றவர்களுக்கு பலமாகி விடுகிறது. எனவே, ஒரே வடிகால், நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பதை எல்லாம் பேப்பரில் எழுதி வைப்பது தான். இப்படி செய்யும் போது மனதும் அமைதியாகிறது. தெளிவான மன ஓட்டத்தில் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் கிடைக்கிறது.

13. கற்பனை செய்யுங்கள்

நல்ல கற்பனைகள் நம்மை செம்மைப்படுத்தும். நாம் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறோமோ அது போல நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு நல்ல ஓவியராக வர வேண்டும் என்பது உங்கள் கனவு என்றால், நீங்கள் பெரிய ஓவியராகி விட்டதைப் போலவும், உங்கள் ஓவியங்களுக்கு அரசாங்க விருது கிடைப்பது போலவும் கற்பனை செய்து கொள்ளலாம். பெரிய டாக்டராக வேண்டும் என விரும்பினால், பெரிய ஹாஸ்பிடல் கட்டி விட்டதைப் போலவும், ஏராளமான நோயாளிகள் உங்களுக்காக காத்திருப்பதைப் போலவும் கற்பனை செய்யலாம். கற்பனைகள் உங்கள் செயலுக்கு வலு கொடுக்கும். தீவிரமாக உழைக்க வழி வகுக்கும். தொடர்ந்த கற்பனைகளும், அதனைச் சார்ந்த அயராத உழைப்பும் வெற்றிக்கு வழி வகுக்கும்.

இதற்கு என் சிறு வயது இலட்சியத்தையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். எனக்கான திறமை ‘எழுத்தும், எழுதுவதும்’ என்று தெரிந்து கொண்ட நாளில் இருந்து என் கற்பனை இது தான்: “நான் பெரிய எழுத்தாளர் ஆகி விட்டேன். பெரிய மாளிகையின் மாடியின் நான் அமர்ந்திருக்கிறேன். என்னைப் பார்க்க ஏராளமான வாசக வாசகிகள் வாசலில் காத்திருக்க, என் உதவியாளர் ஒவ்வொருவராக உள்ளே அனுப்புகிறார்.”

இந்த கற்பனை அச்சு அசலாக அப்படியே நனவாகி இருக்கிறது இன்று. தமிழில் 50 கம்ப்யூட்டர் புத்தகங்களுக்கும் மேல் எழுதிய நான், இன்றும் தொடர்ந்து எழுதி வருகிறேன். நான் எழுதுகின்ற புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவும், நான் நடத்துகின்ற ஒர்க்‌ஷாப்புகள் மூலமாகவும் பயன்பெறுபவர்கள் தினந்தோறும் என்னிடம் தொலைபேசி வழியாகவும், கடிதம் மற்றும் இமெயில் மூலமாகவும் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். நேரில் பார்க்கவும் முன் அனுமதி பெறுகிறார்கள். நான் கற்பனை செய்ததெல்லாம் நிஜத்தில் எப்படி சாத்தியமாயிற்று?

மாஜிக்கோ, மந்திரமோ, தந்திரமோ எதுவும் இல்லை.

அயராத உழைப்பு. அசராத நம்பிக்கை. சரியான பாதையில் செலுத்திய கவனம்…இப்படி என் வெற்றிக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், என்னைப் பொருத்த வரை என்னை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் சென்றது என் கற்பனைகள் தான்.

கனவு. கற்பனை. உழைப்பு. இவைகள் தான் வெற்றியின் அடித்தளமாகும். எனவே கனவு காணுங்கள்…கற்பனை செய்யுங்கள்…உழையுங்கள்….வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி

(Visited 692 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon