புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்!
மெட்டாவெர்ஸின் பின்னணியில் ஏராளமான தொழில்நுட்பங்கள் இயங்கினாலும் அது நம் கண்களுக்கு தெரிவது மூன்று விஷயங்கள் மூலம்தான். இவை சுருக்கமாக AR, VR, AI என அழைக்கப்படுகின்றன. இவற்றை மெட்டாவெர்ஸின் மூன்று முகங்கள் எனலாம்.
- ஆக்மெண்டட் ரியாலிட்டி (Augmented Reality)
- வெர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality)
- செயற்கை நுண்ணறிவு (Artificial iNtelligence)
ஆக்மெண்டட் ரியாலிட்டி (Augmented Reality)
ஆக்மென்டட் ரியாலிட்டி என்பது நிஜ உலகத்தையும், வெர்ச்சுவல் உலகத்தையும் இணைத்து வெளிப்படுத்தும். அதாவது மொபைல் காமிரா மூலம் நிஜ உலகை காட்டிக் கொண்டே வந்து அதில் தேவையான டிஜிட்டல் விவரங்களை இணைத்து வெர்ச்சுவல் உலகை அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப ரீதியாக செயல்படும்.
ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் நிஜமும், டிஜிட்டலும் இணைந்துதான் செயல்படுகிறது என்றாலும், நிஜ உலகத்தையும், வெர்ச்சுவல் உலகத்தையும் தனித்தனியாக நம்மால் உணர முடியும். உதாரணத்துக்கு ஒரு செய்தித்தாளில் உள்ள யானையின் படத்தை மொபைல் காமிராவால் ஸ்கேன் செய்தால் யானை அனிமேஷனில் திரையில் தோன்றி நடந்து செல்லலாம், பிளிறலாம், தும்பிக்கையைத் தூக்கி ஆசிர்வதிக்கலாம். இதுதான் ஆக்மென்டட் ரியாலிட்டி.
எளிமையான உதாரணம் ஒன்றை சொல்கிறேன். நிஜத்தில் நாம் கண்ணாடியோ, தொப்பியோ, விக்கோ அணிந்திருக்காதபோது, புகைப்படம் எடுக்கும்போது நம் உருவத்துக்கு ஏற்ற கண்ணாடி, தொப்பி, வேறுவிதமான சிகை அலங்காரம் என ஆப்ஜெக்ட்டுகளை இணைத்து புகைப்படம் எடுக்கும் ஆப்களை நம்மில் பலர் பயன்படுத்தி இருப்போம். அந்த வசதி ஆக்மென்டட் ரியாலிட்டி என்ற தொழில்நுட்பத்தில்தான் இயங்குகிறது.
ஒரு பொருளை ஆன்லைனிலோ அல்லது நேரடியாக கடைக்குச் சென்றோ வாங்குவதாக வைத்துக் கொள்வோம். அது துணியாக இருக்கலாம், மூக்குக் கண்ணாடியாக இருக்கலாம், நகையாக இருக்கலாம். அவற்றை ஆப்கள் மூலமாகவே போட்டுப் பார்த்து நம் உடல்வாகிற்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து வாங்கக் கூடிய நுட்பங்கள் எல்லாம் வந்துவிட்டன.
இதுபோன்ற ஆப்கள் எல்லாம் ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில்தான் இயங்குகின்றன.
வெர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் நமக்கான மாய உலகை நாமே சிருஷ்டிக்கலாம்!
வெர்ச்சுவல் ரியாலிட்டியில் நிஜ உலகம் நம் கண்களைவிட்டு விலகி நம்மை முழுக்க முழுக்க வெர்ச்சுவல் உலகில் மூழ்கடித்து விடும். இதற்கு நாம் கண்களை முற்றிலும் மறைக்கும் (Head Mounted Display / Glass) கண்ணாடியை அணிந்துகொள்ள வேண்டும். நிஜ உலகம் நம் கண்களில் இருந்து மட்டும் இல்லாமல் உணர்வு ரீதியாகவும் விலகிவிடும்.
கண்ணாடியை அணிந்து கொண்டு ஒரு காட்டில் உலா வரலாம். அங்கு யானையுடன் சேர்ந்து மற்ற மிருகங்களும் நடமாடிக் கொண்டிருக்கும். அவற்றுடன் நாமும் சேர்ந்து நடந்து கொண்டிருப்போம். அவை நமக்கு பய உணர்வை உண்டு செய்யும். அதனால் பயந்து ஓடக் கூட செய்வோம். காட்டின் வாசனையையும், மண்ணின் வாசனையையும் கூட நமக்கு உணர்த்தும் அளவுக்கு வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. கண்ணாடியை நாம் கழற்றும் வரை நமக்கு வெளி உலகம் மறந்துவிடும்.
வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் மூலம் நம் கண்களில் ஒரு கண்ணாடியை மாட்டியவுடன், அது நம்மை ஒரு மாய உலகிற்கு அழைத்துச் சென்றுவிடும் என்று பார்த்தோம் அல்லவா? அப்படியான ஒரு மாய உலகத்தைக் கூட நாமே சிருஷ்டிக்கலாம். அதுதான் அதன் சிறப்பம்சம்.
வெர்ச்சுவல் ரியாலிட்டிக்கென பிரத்யோகமான ஹெட்செட் உள்ளது. அதற்குள் மொபைல் போனை வைத்துவிட்டு, அந்த ஹெட்செட்டை கண்ணில் மாட்டிக்கொண்டால் போதும். நாம் எந்த உலகத்துக்குள் செல்ல விரும்புகிறோமோ அல்லது எந்த காட்சிக்குள் நம்மை பின்னிப் பிணைத்துக்கொள்ள நினைக்கிறோமோ அதனுள் நுழைந்துவிட முடியும்.
இமயமலை மீது ஏறிச் செல்லலாம். கடலின் ஆழத்துக்கு நீந்திச் செல்லலாம். அமெரிக்காவுக்கு ஒரு பறவையைப் போல பறந்து செல்லலாம். விண்வெளிக்கு ராக்கெட்டில் பயணிக்கலாம். நிஜ உலகிலுள்ள இடங்களையும், கற்பனைக்கும் எட்டாத மாய உலகின் இடங்களையும் வெர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் இருந்த இடத்தில் இருந்தே நம்மால் சென்று பார்க்க முடியும்.
நிஜ உலகில் இருக்கும் நம்மை மாய உலகத்துக்கு அழைத்துச் செல்வது வெர்ச்சுவல் ரியாலிட்டி. நிஜ உலகத்தில் மாய உலகத்தை இணைப்பது ஆக்மென்டட் ரியாலிட்டி.
செயற்கை நுண்ணறிவு (Artificial iNtelligence)
செயற்கை நுண்ணறிவு என்பதுதான் Ai என்றும் Artificial Intelligence என்றும் அழைக்கப்படுகிறது. மனிதனைப் போலவே சிந்தித்து, ஆராய்ந்து அறிந்து, முடிவுகளை எடுத்து, படம் வரைந்து, பாட்டுப் பாடி, கதைக் கவிதைகள் எழுதி, எல்லா மொழிகளையும் அறிந்து செயல்படும் Ai என்ற தொழில்நுட்பம் இரண்டு எழுத்துக்களுக்குள் அடக்கமாக இருந்து கொண்டு வரும்காலத்தை ஆட்டிப் படைக்கக் காத்திருக்கிறது. இப்போதே தன் ஆட்டத்தை மெல்ல மெல்ல ஆரம்பித்து விட்டது.
இது மெட்டாவெர்ஸில் அவதார்களை (Avatar) உருவாக்கவும், டிஜிட்டல் மனிதர்களை வடிவமைக்கவும், வெர்ச்சுவல் உலகில் சரளமாக தங்கு தடையின்றி அவதார்களும், டிஜிட்டல் மனிதர்களும் ஒன்றுடன் ஒன்று (ஒருவருக்கொருவர்) பேசிக்கொள்ளவும், தொடர்பில் இருக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அவசியமாகிறது.
குறிப்பாக மெட்டாவெர்ஸ் உலகில் நமக்கு பதிலாக நம் பிரதிநிதியாக செல்ல இருக்கும் உருவங்கள் Ai தொழில்நுட்பத்தில் இயங்குகின்ற அவதார்கள்தான்.
நமக்கான உருவத்தை உருவாக்கிவிட்டு, அது என்ன பேச வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பதை எல்லாம் ஸ்கிரிப்ட்டாக அதற்குள் உள்ளீடு செய்து பயிற்சிக் கொடுத்தால் நாம் சொல்லிக் கொடுப்பதுடன் சேர்த்து தானாகவும் கற்றுக்கொண்டு செயல்படும். மெட்டாவெர்ஸின் உயிர் நாடியே Ai என்று சொல்லலாம்.
Ai வரம் பெற்ற நீங்கள் இனி வரத்தை அள்ளித்தரத் தயாராகுங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்!
ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை 12 அத்தியாயங்களாக வெளிவந்த
நம்மை ஆளப்போகும் AI முற்றிற்று!
—***—