வாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் – டிசம்பர் 2018)


தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ்.

ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின் தொடக்கப்புள்ளி. தொடர்ச்சியாய் அதே விஷயத்தில் மூழ்கி சோர்வடைந்த மனதை கசக்கிப் பிழிந்து தற்கொலை அல்லது கொலைவரை கொண்டு செல்வது ஸ்ட்ரெஸ்ஸின் உச்சம்.

சிகரெட், மது என எந்தப் பழக்கமும் இல்லாதவர்களுக்குக்கூட ஹார்ட் அட்டாக், டயாபடிக்ஸ் போன்ற உபாதைகள் வருவதற்கு மிக முக்கியக் காரணம் ஸ்ட்ரெஸ்.

ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளியே வருவதற்காகத்தானே புகைக்கிறோம், மது அருந்துகிறோம் என சொல்பவர்களுக்கு மேலே குறிப்பிட்ட உபாதைகளுடன் இலவச இணைப்பாக நுரையீரல், கல்லீரல், கிட்னி சம்மந்தமான வியாதிகளும் தொற்றிக்கொள்ளும் என்பது நிரூபணமான உண்மை.

ஆனால், இப்போதெல்லாம் நன்றாக படிக்கணும், நல்ல வேலை கிடைக்கணும், வீடு கட்டணும், கார் வாங்கணும், பிள்ளைகளை நல்ல ஸ்கூலில் சேர்க்கணும்… இப்படி ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் சாதாரணமாக வாழ்க்கை மீது  இருக்கக் கூடிய அடிப்படைப்  பொறுப்புணர்வுகளையே ஸ்ட்ரெஸ் என சொல்ல ஆரம்பித்துவிட்டோம்.

நம் ஒவ்வொரு செயலிலும் நாம் காட்டும் பொறுப்புணர்வு என்பது  வாழ்க்கைக்கு மிக மிக அவசியமான ஒன்று. அப்போதுதான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கும். வாழ்ந்து காட்ட வேண்டும் என்கின்ற உத்வேகம் பிறக்கும்.

ஸ்ட்ரெஸ் என்ற வார்த்தையை ஏதோ சத்து மாத்திரை போல எல்.கே.ஜி, யு.கே.ஜி படிக்கின்ற குழந்தைகளுக்கும் கொடுத்துப் பழக்கிவிட்டோம். அவர்கள்கூட ‘ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கும்மா’ என்று சொல்லும் அவல நிலை.

அடுத்தகட்டமாக எதிர்பார்த்தவை கிடைக்காததால் ஏற்படும் மனஉளைச்சலை ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை, விரும்பிய கோர்ஸில் சேர முடியவில்லை, காதலித்தவரை திருமணம் செய்துகொள்ள முடியவில்லை, ஆண் குழந்தை பிறந்தால் பெண் குழந்தைக்கும், பெண் குழந்தை பிறந்தால் ஆண் குழந்தைக்கும் ஏக்கம் இப்படி எத்தனையோ காரணங்கள், நாம் மனதளவில் ஒடிந்துபோக வரிசைகட்டி நிற்கின்றன.

வாழ்க்கையில் நினைத்தது நினைத்தபடி யாருக்குமே நடப்பதில்லை. ஏதோ ஒரு கட்டத்தில் ஏமாற்றங்களும் தோல்விகளும் வரத்தான் செய்யும். எல்லாவற்றையும் எதிர்நோக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையினரிடமும் அதை பரவவிட வேண்டும்.

இந்தப் பக்குவம் சென்ற தலைமுறையினரிடம் இயல்பாகவே இருந்தது. காரணம் பொருளாதாரம் இந்த அளவுக்கு சுலபமாக இல்லை. ஆனால் வாழ்க்கைமுறை சந்தோஷமாக இருந்தது. தீபாவளிக்கு தீபாவளி மட்டுமே புது ஆடை போன்ற பலத்த கட்டுப்பாடுகளுக்கிடையேயும் எல்லோராலும் பரிபூரண மகிழ்ச்சியாக வாழ முடிந்தது. ஆனால் இப்போதெல்லாம் விரும்பிய ஸ்மார்ட்போனை வாங்கித்தராததால், விலையுயர்ந்த பைக் கிடைக்காததால் என அற்ப காரணங்களுக்காக இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

தீராத உடல் வியாதி, தீர்க்கவே முடியாத குடும்பப் பிரச்சனைகள் போன்றவற்றால் ஏற்படும் ஸ்ட்ரெஸ் தவிர்த்து மற்ற எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு.

யு-டியூப் வீடியோ ஒன்றில் ஒரு ஆன்மிகப் பேச்சாளர் தன் அனுபவம் மூலம் ஸ்ட்ரெஸ் குறித்து விளக்கிக்கொண்டிருந்தார்… ‘எலுமிச்சை பழ ஜூஸ் செய்யும்போது இடையில் போன் வரவே பேசிக்கொண்டே ஒரு பழத்துக்கு பதிலாக இரண்டு பழத்தைப் பிழிந்துவிட அதை வாயில் வைக்கவே முடியாமல் போனது. உடனே அதில் நான்கு கிளாஸ் தண்ணீரும், சர்க்கரையும் சிட்டிகை உப்பும் சேர்த்து பெருக்கினேன். இப்போது ஒரு கிளாஸ் ஜூஸ் நான்கைந்து கிளாஸ் ஜூஸ் ஆனது. நான் மட்டும் இல்லாமல் என்னுடன் சேர்ந்து நான்கைந்து பேர் ஜூஸ் குடிக்கும் சூழல் உருவானது.

இப்படி ஒரு விஷயம் தவறாகி விட்டலோ அல்லது வாழ்க்கையில் தவறான முடிவெடுத்து விட்டாலோ அல்லது செய்கின்ற வேலையில் ஏதேனும் தவறோ தடங்கலோ வந்துவிட்டாலோ அப்படியே முடங்கிவிடாமல் அந்த சூழலை சரி செய்வதற்கு அந்த நிகழ்வைவிட அதிகமான பாஸிட்டிவ் விஷயங்களை செய்யும்போது அந்த நிகழ்வின் வலி சிறியதாகிவிடும். நாமும் அந்த சூழலில் இருந்து விரைவாக வெளியேறிவிட முடியும்.

உதாரணத்துக்கு நம் துணையிடம் கோபத்தில் வார்த்தையைக் கொட்டி இருந்தால், அதைவிட அதிகமான அன்பான வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகளால் ஈடுசெய்யலாம்… ஏதேனும் ஒரு தவறான முடிவினால் தோல்வியடைந்திருந்தால் நல்ல முடிவை எடுப்பதற்கான சூழலை அலசலாம்…’ இப்படியாக அந்த உரையின் சாரம்சம் அமைந்திருந்தது.

நேர்மறையை அதிகரிப்பதுதான் எதிர்மறையை விலக்குவதற்கான அல்லது குறைப்பதற்கான OTP. எந்த அளவுக்கு நேர்மறையை அதிகரிக்கிறோமோ அந்த அளவுக்கு எதிர்மறை குறைய ஆரம்பிக்கும்.

இதை என் வாழ்க்கையில் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். பொதுவாகவே என் மனம் ஏதேனும் ஒரு நிகழ்வினால் ‘ஸ்ட்ரெஸ்’ ஆகிவிட்டால் அதை அதன்போக்கில் விட்டுவிட மாட்டேன்.

ஒருசிலரைப் போல பேசா மடந்தையாக நாட்கணக்கில் வாரக்கணக்கில் உம்மென்று முகத்தை வைத்துக்கொள்ள மாட்டேன். அறையை பூட்டிக்கொண்டு உள்ளே அமர்ந்து அமைதியாகவும் இருக்க மாட்டேன். முடிந்தால் ஸ்ட்ரெஸ்ஸுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதன்மூலமே / அவர்கள் மூலமே அந்தப் பிரச்சனையைத் தீர்க்க நேர்மையான முறையில் முழு முயற்சி செய்வேன்.

அப்படி முடியவில்லையெனில் முன்பைவிட பரபரப்பாக செயல்பட ஆரம்பிப்பேன். அப்போதுதான், வேகமாய் துரத்தும் நாயைத் திரும்பிப் பார்த்தால் அது பயத்தில் பம்முவதைப்போல, என்னை விரட்டும் ஸ்ட்ரெஸ்ஸை ’போடா போ’ என கொஞ்சம் பயமுறுத்தவாவது முடியும்.

அதிகம் பேசாத நான், வலிய போன் செய்தாவது நான் மதிக்கின்ற என்னை புரிந்துகொண்ட வயதில் மூத்தோர்களிடம் பேசுவேன். முடிந்தால் நேரிலும் செல்வேன். வீட்டிலும் வாய் ஓயாமல் பேசுவேன். அலுவலகத்தில் மீட்டிங்கில் பாஸிட்டிவ் கதைகளுடன் மீட்டிங்கின் நேரத்தை நீட்டுவேன். என்னுடன் பணியாற்றுபவர்களை அவர்களின் சின்ன சின்ன விஷயங்களுக்காகவும் மனதார பாராட்டுவேன். முடிந்தால் அந்த நேரத்துக்கு ஏற்ப ‘சர்ப்ரைஸ்’ கிஃப்ட்டும் கொடுப்பேன்.

என்னிடம் இருப்பதிலேயே புதிதாக இருக்கும் உடையை அணிந்துகொள்வேன். நீண்ட நாட்களாக எழுதாமல் வைத்திருக்கும் கான்செப்ட்டுக்குப்  பொருத்தமாக வண்ணமயமான டிஸைன் செய்வேன்.

யாரேனும் மூன்றாவது நபர் என் மனதுக்கு ஆறுதல் சொல்லட்டும் என காத்திருக்க மாட்டேன். நானே எனக்குள் உண்டாகும் ஸ்ட்ரெஸ்ஸை தூர விரட்ட அதைவிட அதிகமாக பாஸிட்டிவ் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவேன்.

சுருங்கச் சொன்னால், புதிதாக எந்த விஷயத்தையும் உள்ளுக்குள் ஏற்றிக்கொள்ளாமல் உள்ளே சோகமாக சுருண்டு கிடக்கும் துக்கத்தை பாஸிட்டிவாக்கி வெவ்வேறு வடிவில் வெளிப்படுத்தி ரிலாக்ஸ் ஆவேன். இவை நான் வலிய ஏற்படுத்திக்கொண்ட செயல்பாடுகள் அல்ல. என் சுபாவமே அப்படி.

அதற்காக, நான் வருத்தப்படவே மாட்டேன் என்றும் சோகமே எனக்குள் இருக்காது என்றும் சுகத்தையும் துக்கத்தையும் ஒன்றாக பார்க்கும் ஜானி நிலை அடைந்துவிட்டேன் என்றும் சொல்ல மாட்டேன்.

நடு மனதில் நாற்காலி போட்டு நாட்டாமை செய்யக் காத்திருக்கும் ஸ்ட்ரெஸ்ஸை இதுபோன்ற பாஸிட்டிவ் அணுகுமுறைகளினால் மனதின் ஓரத்துக்குத் தள்ளி சுருள வைப்பேன். அவ்வளவுதான். அது அவ்வப்பொழுது எட்டிப் பார்த்துவிட்டுச் செல்லும். அந்த சின்ன வலியும் தேவைதானே நாம் மேலும் மேலும் சிறப்பாகச் செயல்பட.

இதுதான் ஸ்ட்ரெஸ்ஸை எனக்குள் இருந்து ஓட ஓட விரட்ட எனக்கான OTP.

நல்லவை நடக்கும்போது சந்தோஷமாக இருப்பதைப்போல, கெட்டவை நடந்தால் வருத்தமாகத்தான் இருக்கும். அதுதான் மனித இயல்பு. சந்தோஷம் வருத்தம் சோகம் துக்கம் அழுகை கோபம் ஆத்திரம் போன்ற எல்லா விதமான உணர்வுகளுக்கும் நாம் இடம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் சரியாக செயல்படுகிறோம் என்று அர்த்தம்.

முன்பெல்லாம் நம்மைச் சுற்றி மனிதர்கள் இருப்பார்கள். உறவினர்கள் நண்பர்கள் வீட்டு நல்லது கெட்டதுகளுக்குச் சென்று வருவோம். நம் மனதுக்கு இதமான ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கும். இப்போது சோஷியல் நெட்வொர்க்குகளில் ஆயிரக்கணக்கில் நட்புகள். ஆனால் நேரில் தோள் தட்டி ஆறுதல் சொல்ல நான்கு நண்பர்கள் இல்லை. நம்மைச் சுற்றி மனிதர்கள் இருக்கும்போது கிடைக்கின்ற ஆறுதலை நாம் காயப்பட்டிருக்கும்போது மட்டுமே உணர முடியும்.

அதனால்தான் சொல்கிறேன், காரணமே இல்லாவிட்டால்கூட காரணங்களைத் தேடி பிறரை வாழ்த்தியும், பாராட்டியும் பாருங்கள். உங்களுக்குள் அன்லிமிடெடாக பாஸிட்டிவ் எனர்ஜி நுழைவதை உணர்வீர்கள். ஓட்டலுக்குச் சென்று திரும்பும்போது தெருவில் எதிர்படும் ஒரு ஏழைக்கு இரண்டு இட்லி வாங்கிக்கொடுத்துப் பாருங்கள், உங்களுக்குள் எல்லையற்ற அன்பு ஊற்றெடுப்பதை உணர்வீர்கள். இதெல்லாம்கூட ஒருவகையில் ஸ்ட்ரெஸ்ஸை விரட்டும் வழிகள்தான்.

வழக்கமாக நாம் செய்துகொண்டிருக்கும் செயல்களுக்கு மாறாக பிறருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் செயல்களை செய்து பாருங்கள். உங்களுக்குள் ஸ்ட்ரெஸ் குறைந்து, மகிழ்ச்சி தொற்றிக்கொள்வது நிச்சயம்.

நம்மைச் சார்ந்துள்ள புற விஷயங்களினால் உண்டாகும் ஸ்ட்ரெஸ் ஒருபுறம் இருக்க, மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமையினாலும், வயிற்றெரிச்சலினாலும் உண்டாகும் ஸ்ட்ரெஸ் மறுபுறம். இது நாமாகவே உண்டாக்கிக்கொள்வது.

எதிர் வீட்டுக்காரர் புதிதாக கார் வாங்கி இருப்பதைப் பார்த்தாலோ, உடன் பணிபுரியும் நண்பர் புதிதாகக் கட்டிய வீட்டு  கிரஹப்பிரவேசத்துக்கு சென்று திரும்பிய பிறகோ, பக்கத்து வீட்டு நண்பர் குடும்பத்துடன் சிங்கப்பூர் டூர் சென்றுவந்த செய்தியை கேட்ட பிறகோ, உங்கள் நண்பரின் மகள் பள்ளியில் நல்ல பெயர் எடுப்பதை கேட்கும்போதோ உங்கள் காதுகளில் இருந்து புகை வருகிறதா…. வயிற்றில் எரிச்சல் அதிகரிக்கிறதா… அதன் காரணமாய் ஸ்ட்ரெஸ் உண்டாகிறதா? இதற்கு உடனடி தீர்வு உண்டு…

அவர்களைப் போல நாம் முன்னேற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து உழைக்கலாம் அல்லது அவரவர்கள் வாழ்க்கை அவரவர்களுக்கு என பக்குவப்படப் பழகலாம்.

‘ஒரு விஷயத்தில் எந்த அளவுக்கு ஈடுபாடு இருக்கிறதோ, அதே அளவுக்கு அந்த விஷயத்தில் இருந்து  வெளியே வருவதற்கும் மனோபாவம் வேண்டும்…’- இது கர்மயோகம்.

ஈடுபாடு என்பதை நல்ல விஷயங்கள் மீதான ‘தொடர் ஈர்ப்பு’ எனலாம், கெட்ட விஷயங்களினால் உண்டாகும் ‘தொடர் சோர்வு’ எனவும் கொள்ளலாம்.

‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்ற தன் நாவலுக்கான முன்னுரையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் மனித மனம் பற்றி மிக அழகாகச் சொல்லி இருப்பார்.

‘வாழ்க்கைக்கு நிறைவைத் தேடுவதாகப் பேசுவதெல்லாம் பொய். வாழ்க்கை நிறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் நமக்கோ மேலும் மேலும் குறைகள் வேண்டும். குறைந்தபட்சம் நமக்குள் இருக்கும் ஆக்கிரப்புப் பேயின் அசட்டுத் திருப்திக்காகவேனும் நமது எதிரி உடல் ரீதியாகவாவது குறைபட்டால்தான், அந்த மூளியில்தான் அந்தப் பேய் திருப்திகண்டு அடங்குகிறது.’

காதலித்து விரும்பி திருமணம் செய்துகொண்ட நாயகன், நாயகியின் மீதான கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்ய வேண்டும் என முடிவெடுத்த நிலையில், காதாசிரியர் நாயகனை மன இறுக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவர நாயகியின் காலை ஊனமாக்குகிறார். அதன் காரணமாய் நாயகன் மனதுமாறி அவளுடன் இணைந்து வாழ்வதாக எழுதி இருப்பார்.

நெஞ்சு ஒடிவதைவிட கால் ஒடிவது குறைந்த விபத்தல்லவா? அதனால்தான் கதைக்கு அப்படி ஒரு முடிவைக்கொடுத்தேன் என்று, அந்த  ஒற்றை வரியில் வாழ்க்கையின் உச்சகட்ட யதார்த்தத்தை அருமையாய் சொல்லி இருப்பார் ஜெயகாந்தன்.

ஸ்ட்ரெஸ்ஸை விரட்ட இது ஒருவிதமான வழி. நம் ஸ்ட்ரெஸ்ஸுக்கு யார் காரணமோ அவர்களுக்கு ஏதேனும் ஒரு குறை ஏற்பட்டால் நமக்குள் ஈகோ அடங்கி நம் ஸ்ட்ரெஸ் குறையும் என்பதை ஒரு வாதத்துக்காக எடுத்துக்கொண்டாலும், இது ஒருவித சைக்கோத்தனமான மனோபாவம் இல்லையா… உண்மையில் நம் மனம் அதைத்தான் விரும்புகிறதோ?

எல்லா நேரங்களிலும் நம் ஸ்ட்ரெஸ்ஸுக்குக் காரணமான நபர்கள் திருந்துவதற்கோ அல்லது அந்த சூழல் மாறுவதற்கோ, மறைவதற்கோ நூறு சதவிகிதம் எந்த உத்திரவாதமும் இல்லை.

ஆகவே, ஸ்ட்ரெஸ்ஸை விரட்ட அல்லது நாம் அதில் இருந்து விலக, நாம்தான் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்து ஒதுங்கிச் செல்ல வேண்டும். அதற்காக மனதளவில் ஓய்ந்துப் போகச் சொல்லவில்லை. முன்பைவிட உன்னத செயல்பாடுகளில் கவனம் செலுத்தினாலே போதும். பெரிய வட்டமாக இருந்த ஸ்ட்ரெஸ் மெல்ல மெல்ல சிறிய புள்ளியாகி ஒரு கட்டத்தில் மறைந்தே போகும்.

மன்னிப்பதும், மறப்பதும்கூட நாம் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளியில் வருவதற்கான சக்தி வாய்ந்த OTP. மேலும், நம்முள் அமைதியும் இறைத் தன்மையும் தானாகவே புகுந்துகொள்வதையும் உணரமுடியும்.

நம்மை யாரேனும் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஏமாற்றி இருந்தால் அதில் நமக்கு சாதகமான ரிசல்ட் கிடைக்க நம்மால் இயன்ற அளவு போரடலாம். சாதகமான முடிவு கிடைக்கவே வாய்ப்பில்லை என்றபட்சத்தில், நமக்கு அவர் ஏமாற்றியது தெரியும் என்ற அளவில் அதை அவருக்கு உணர்த்திவிட்டு மன்னித்து மறந்து அந்த பிரச்சனையில் இருந்து வெளியேறி விடுவதுதான் நம் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் நல்லது. விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு அதன் மூலம் இன்னமும் ஸ்ட்ரெஸ் அதிகமாகாமல் இருக்க அது ஒன்றுதான் வழி.

ஒருமுறை என் நிறுவனத்துக்கு புதிதாக வந்திருந்த ஒரு கிளையிண்ட் என் அலுவலகத்தின் எல்லா இடங்களிலும் தென்பட்ட நேர்த்தியையும், ஒழுங்கையும், சுத்தத்தையும் பார்த்து வியந்தார். முதல்நாள் பாராட்டினார்.

அடுத்த நாள் அவர் டிஸ்கஷனுக்கு வந்த போது, ‘மேடம்… இவ்வளவு ஒழுங்கும் நேர்த்தியும் ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்கும்… ஏனெனில் கொஞ்சம் பர்ஃபெக்‌ஷன் மிஸ் ஆனாலும் டென்ஷன் ஏற்படும்…’ என்று சொன்னபோது முதலில் நான் வியந்தாலும், ‘சார்… நீங்கள் சொல்வதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது… நேர்த்தியாகவும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருப்பதற்காக பிரயத்தனப்பட்டால்தான் நீங்கள் சொல்லும் ஸ்ட்ரெஸ் ஆக்கிரமிக்கும்… இப்படி சூழலை அழகாக வைத்திருப்பது என் இயல்பு. அதற்காக நான் மெனக்கெடவில்லை… இயல்பான ஒரு செயல்பாடு பாஸிட்டிவ் எனர்ஜியையே கொடுக்கும்…’ என்று அவருக்குப் புரியும்படி எடுத்துச் சொன்னேன்.

ஸ்ட்ரெஸ் என்ற வார்த்தை இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இதுபோன்ற சாதாரண விஷயங்களையே ஸ்ட்ரெஸ் என்றால், புரையோடிய புற்றுநோயால் நித்தம் செத்துப் பிழைப்பவர்களுக்கும், மழை வெயில் என பாராமல் குப்பைவண்டியில் நாற்றமெடுக்கும் குப்பைகளை அள்ளும் பணியில் இருப்பவர்களுக்கும், தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இன்னாளிலும் சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் தொழிலாளிகளுக்கும் இருக்கும் டென்ஷனை எந்த பெயரில் அழைப்பது.

வாழ்க்கையில் இயல்பாக இருக்க வேண்டிய பொறுப்புணர்வை ஸ்ட்ரெஸ் என சொல்லி ஸ்ட்ரெஸ்ஸை அதிகரிக்கும் நபர்களிடம் இருந்து ஒருஅடி தள்ளியே நிற்போம்.

இந்தா பிடிங்க உங்களுக்கான OTP ‘ஸ்ட்ரெஸ்ஸுக்கே ஸ்ட்ரெஸ் கொடுத்து விரட்டுவோம்’.

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 5
 டிசம்பர் 2018

(Visited 335 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon