
பெண்கள் வேலைக்கு வருவது இதற்காகவா?
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே பிரைவேட்டாக இந்தி கற்றுக்கொண்டிருந்தேன். ஒருநாள் எனக்கு வகுப்பெடுக்கும் இந்தி மாஸ்டர் வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி குறைவாகப் பேச மாணவர்களும் கைத்தட்டி சிரித்தனர்.
வங்கியில் பணத்தை எண்ணும் ஆண் கேஷியர் லாவகமாக எண்ணுவதையும், பெண்கள் மெதுவாக எண்ணுவதையும் கிண்டல் செய்தார். மேலும் பெண்கள் வேலைக்குச் செல்வதே மாதம் ஒரு புடவை வாங்கவும், வருடம் புது நகை வாங்கவும்தான் என்றும் ஏதேதோ சொல்லிக்கொண்டே போனார்.
வாயைத் திறந்து பேசவே பயப்படும் மென்மையான சுபாவம் உள்ள அந்த வயதில் எனக்கு எங்கிருந்துதான் கோபம் வந்ததோ தெரியவில்லை.
‘பெண்கள் புடவை, நகைக்காக ஒன்றும் வேலைக்குச் செல்லவில்லை… அவர்களுக்கும் எய்ம் இருக்கிறது…’ என்று அந்த வயதுக்குரிய மொழியில் சற்றே குரலை உயர்த்திச் சொல்ல இந்தி மாஸ்டர் உட்பட மாணவர்கள் அத்தனைபேரின் கவனமும் என் மீதுதான்.
இந்த தைரியம் என் அம்மாவும், என் அம்மா அலுவலகத்தில் இரவு பகலாக 24 மணிநேர ஷிஃப்ட்டில், மழை, வெயில், புயல், வெள்ளம் பார்க்காமல் பணிபுரியும் நூற்றுக்கணக்கான பெண்களின் தைரியத்தை பார்த்து வளர்ந்ததால் வந்திருக்கும்.
தைரியமாக சொல்லி விட்டேன், ஆனால் படபடப்பாக இருந்தது. நான் இப்படி சொன்னதால் என்னை ஆசிரியருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்றெல்லாம் பயந்தேன். ஆனால் அப்படியெல்லாம் பெரிதாக எதுவும் நடக்கவில்லை.
இதுபோல் இளம்வயதில் பல நேரங்களில் என்னையும் அறியாமல் குரல் உயர்ந்து, உரத்து ஒலித்திருக்கிறது. பெரும்பாலும் அது மற்ற பெண்களுக்காகவே.
‘தி இந்து’ வெளியிட்ட ’என் குழந்தைப் பருவம்’ என்ற நூலில் இடம்பெற்ற என்னைப் பற்றிய கட்டுரையிலிருந்து சிறு துளி.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
நவம்பர் 8, 2025 | சனிக்கிழமை







