இன்று புதிதாய் பிறந்தோம்(தேன்)

தொலைபேசித் துறையில் நுழைந்து தங்கள் கடின உழைப்பால்  சப் டிவிஷனல் இன்ஜினியராக அப்பாவும், சீனியர் டெலிபோன் சூப்பர்வைசராக அம்மாவும் பணியில் முன்னேறியவர்கள்.

அந்த காலத்தில், இருவருமே 24 மணிநேர பணி சுழற்சி காரணமாய் பகல் இரவு என மாறி மாறி வேலைக்குச் சென்றதால் அப்பா இல்லாத நேரங்களில் அம்மா அப்பாவைப் போலவும், அம்மா இல்லாத நேரங்களில் அப்பா அம்மாவைப் போலவும் செயல்படுவார்கள்… தாயுமானவராக அப்பா, தந்தையுமானவராக அம்மா…

ஒருவருக்கு அம்மா அப்பா இருவருமே ஒன்றுபோல் அமைவது கிடைக்கப்பெறுமா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களுக்குக் கிடைத்துள்ளார்கள்…

எங்கள் அப்பா அம்மா இருவருமே…

அதீத அறிவாளிகள், கூர்மையான புத்திசாலிகள், கடுமையான உழைப்பாளிகள்…

அன்பு, பாசம், நட்பு, நேர்மை, துணிச்சல், உதவும் மனப்பான்மை, அநீதியைத் தட்டிக் கேட்கும் தன்மையிலும்…

உடலளவில் மட்டுமில்லாமல் மனதளவிலும் தங்களை அழகாக வைத்துக்கொள்ளும் பண்பிலும்,  எளிமையிலும், பகட்டுக்கும், புகழுக்கும் ஆசைப்படாத மேன்மையான குணத்திலும்…

இருவருமே ஒரே மாதிரி…

குறிப்பாக…

ஆண் பெண் பாகுபாடின்றி அவர்கள் எங்கள் மூவரையும் வளர்த்ததால் எங்களால் அவரவர்கள் துறையில் ஜெயிக்க முடிந்ததோடு வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது.

முக்கியமாக…

உரிமை மறுக்கப்படும் போது உலுக்கியெடுத்து கேட்டுப் பெற வேண்டும் என்ற துணிச்சலை விதைத்தவர்கள். எந்த ஒரு நியாயமானப்  பிரச்சனைக்கும் நம்மால் முடிந்த அளவு போராட வேண்டும், போராட்டத்தின் முடிவு நமக்கு சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் நாம் முயற்சித்தோம் என்ற தன்னிறைவு கிடைக்கும். அதுவே நாம் எடுக்கும் முயற்சிக்கான வெற்றி என்ற ஆழ்ந்த உண்மையை எங்களுக்குள் வித்திட்டார்கள்.  எல்லா சந்தர்பங்களில் எங்களுடன் அதற்காகப் போராடவும் செய்திருக்கிறார்கள்.

சுருங்கச் சொன்னால்…

அம்மா தைரியத்தை ஊட்டி

பாசத்தைக் காட்டி – தந்தையுமானவராகவும்

அப்பா பாசத்தை ஊட்டி

தைரியத்தை காட்டி – தாயுமானவராகவும்

நேற்றும், இன்றும், நாளையும், எப்பவும்

எங்கள் அப்பா அம்மா – எங்கள் ரோல் மாடல்

எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும்

ரோல் மாடல் – எல்லா விதங்களிலும்!

10 ஆண்டுகளுக்கு முன்னரே அப்பா அம்மா குறித்த ஆவணப்படத்தை ‘அன்புள்ள அப்பா அம்மா…’ என்ற  தலைப்பில் தயாரித்தோம். இதே தலைப்பில் புத்தகமும் வெளியிட்டுள்ளோம்.

அவர்கள் காட்டிய வழியில் நேர்மையாகவும் உண்மையாகவும் அவரவர் பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம்… இது ஒன்றுதான் நாங்கள் அவர்களுக்குக் காட்டும் அன்பு, மரியாதை, பாசம் எல்லாமே…

இதுபோல உங்கள் பெற்றோரிடமும் மதிக்கத்தக்க  குணாதிசயங்கள் இருக்கும். அவற்றை அவர்களுக்குத் தெரியும்படி அவர்கள் காதுபட அவர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ சொல்லி மகிழுங்கள்… வாழும்போதே வாழ்த்தி மகிழ்வோம்…

என்னுடைய பிறந்த நாளான இன்று என் மனதில் இருந்துவரும் இந்த மகிழ்ச்சியான நினைவலைகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி என்பதுடன் மனநிறைவு!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
டிசம்பர் 9, 2018

(Visited 48 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon