முண்டாசு கவி ஓர் அறிமுகம்! (மாணவர் சக்தி டிசம்பர் 2018)

கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாரதியின் அடையாளங்கள்’

நம் அடையாளம்

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம் பெயர், படிப்பு,  திறமை, வேலை மற்றும் நாம் வசிக்கும் ஊர், நாடு போன்றவைதான் நம் அடையாளம்.

இதுபோல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு அடையாளம் இருப்பதைப்போல,  நம் பாரத நாட்டுக்கு என பிரத்யேகமான அடையாளம் உண்டு.

பாரத நாடு அன்பிலும், கருணையிலும், அறிவிலும், வீரத்திலும், மானத்திலும், கற்பிலும், இரக்கத்திலும், ஆன்மீகத்திலும் சிறந்த ஒரு நாடு. எல்லா மொழி பேசுபவர்களும், எல்லா மதத்தினரும் வாழ்கின்ற அற்புதமான நாடு.

இவைதான் நம் நாட்டின் அடையாளம். இதைத்தான் கலாச்சாரம், பண்பாடு என்கிறோம்.

தமிழுக்கு அடையாளம் பாரதி!

இந்த வருடம் பாரதியாரின் 136-வது பிறந்த நாள். அவர் வாழ்ந்து நமக்காகவும் தமிழுக்காகவும் விட்டுச் சென்ற அடையாளம்  இன்றளவும் அழியாமல் பேசப்படுகிறது.

பாரதிக்கு அடையாளம் தமிழா அல்லது தமிழுக்கு அடையாளம் பாரதியா என்று வித்தியாசம் காண முடியாத அளவுக்கு வாழ்ந்து காட்டியவர். அதை தன் கவிதை ஒன்றில் கவி என்பவன் எப்படி இருக்க வேண்டும் என  குறிப்பிட்டும் சொல்லி உள்ளார்.

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,

வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே  கவி.

பாரதியாரின் இயற்பெயர் சுப்ரமணியன். செல்லப் பெயர் சுப்பைய்யா. பாரதி, முண்டாசு கவிஞன், முறுக்கு மீசைக்காரன், மகாகவி இதெல்லாம் பாரதியாரின் சிறப்புப் பெயர்கள்.

பாரதியாரின் பிறந்த தேதியும், இறந்த தேதியும் ஒன்று. ஆம். 11-ம் தேதி.

1882-ல் டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார்.

அப்பா சின்னசாமி ஐயர். அம்மா இலக்குமி அம்மாள். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பிறந்தார்.

பாரதி தன் 5-வது வயதில் தாயை இழந்தார். அதனால் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார். (1887)

பாரதியின் 7 வயதில் அவரது தந்தை மறுமணம் செய்துகொள்ள  பாரதிக்கு உபநயனமும் நடக்கிறது.

அவர் தன் ஏழு வயதில் இருந்தே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

பாரதிக்கு 11 வயதானபோது அவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டி அவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். பாரதி என்றால் சரஸ்வதி, கலைமகள் என்று பொருள்.

பாரதியின் படிப்பும் திருமணமும்

பாரதி தமிழுலகில் தமிழ் கனவுகளோடு சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவரது தந்தையோ தனது மகன் தொழில்நுட்பத் துறையில் பட்டம்பெற விரும்பினார். அவரை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும் கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார். திருநெல்வேலி ஹிந்து காலேஜில் ஐந்தாம் படிவம் வரை படிப்பு.

அவரது 14 வயதில் பாரதிக்கும் 7 வயதுச் செல்லம்மாவுக்கும் திருமணம். ஆனால் பின்னாளில் இது போன்ற பால்ய விவாகத்தை வன்மையாக கண்டித்தார் பாரதி.

பாலருந்தும் மழலையர் தம்மையே கோலமாக மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள் இன்னும் ஆயிராமாண்டு அடிமைகளாக இருந்து அழிவர்’

தந்தையையும் இழந்த பாரதி

பாரதிக்கு 16 வயதிருக்கும்போது,  பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் பருத்தி அரவை ஆலை நிறுவுவதற்காக வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களையும் உதிரிப் பாகங்களையும் வரவழைக்க ஏற்பாடு செய்திருந்தார்.  கப்பல்களில் வந்துகொண்டிருந்த அவை  கடலில் மூழ்கவே அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

அந்தக் கவலையிலிருந்து மீள முடியாமல் நோய்வாய்ப் பட்டு அவர் இறந்து போனார்.

அதன் பின்னர் காசியில் அத்தை குப்பம்மாளுடன் வசிக்கத் தொடங்கினார். காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் இந்தியையும் கற்றார். சமஸ்கிருத மொழியில் முதல் வகுப்பில் தேறினார்.

பல மொழிகளில் புலமை

ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன் போன்றோரின் கவிதைகளில் அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது அதன்காரணமாக அவர் பின்னாளில் ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்தார் பாரதி அத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்ததால்தான்  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடினார் பாரதி.

மணியாச்சி சந்திப்பில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாரதியின் மீதும் சந்தேக ரேகை விழுந்தது. வழக்கில் இவரும் விசாரிக்கப்பட்டார்!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும் போலீஸ் விசாரணையின் போது “நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?” என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி!

வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளர்

இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.

சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பால பாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளராகவே வாழ்ந்துள்ளார்.

காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன் முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார்.

உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப்புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!

முதன் முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்திய வரும் பாரதியே, `சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை!

தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்ட மிட்டு, ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கை வைத்தார். ஆனால் யாரும் பணம் கொடுக்கவில்லை.

பாரதியின் 4  வழிகாட்டிகள்

பாரதிக்கு பத்திரிகை, அரசியல், ஆன்மிகம் மற்றும் பெண்ணியம் என நான்கு துறைகளிலும் வழிகாட்டிகள் இருந்திருக்கின்றனர். பத்திரிகை குரு `தி இந்து’ ஜி சுப்பிரமணிய ஐயர், அரசியலுக்கு திலகர், ஆன்மிகத்துக்கு அரவிந்தர், பெண்ணியம் போதித்தவர்  சகோதரி நிவேதிதா தேவி!

பாரதியின் தலைப்பாகையும், கறுப்பு கோட்டும்

வேட்டி சட்டை, கறுப்பு கோட்,  தலைப்பாகை தான் அவரது அடையாளம். சட்டையில் ரோஜா, மல்லிகை என ஏதேனும் ஒரு பூவைச் சொருகி வைத்திருப்பார்!

பாரதியும்  பெண்ணியமும்  

ஒரு முறை, பாரதியார் சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது,  அவரது மனைவியை அழைத்து வரவில்லையா என பாரதியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு பாரதியார், எங்கள் சமுதாய வழக்கப்படி  மனைவியை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை என குறிப்பிட்டார்.  மேலும் தனது மனைவிக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

இதைக் கேட்ட சகோதரி நிவேதிதை வருத்தத்துடன் பாரதியாரிடம்,  ‘உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும், விடுதலையும் கொடுப்பதில்லை. இந்நிலையில், நீங்கள் நாட்டுக்கு எவ்வாறு விடுதலை பெற்றுத்தர போகிறீர்கள்’, என்று கேட்டார். இந்த உரையாடல் தான் பாரதியாருக்கு பெண்களைப் பற்றிய சிந்தனையை மாற்றி, பெண்ணுரிமைக்காக போராட தூண்டுகோலாக இருந்தது.

மற்றொரு நிகழ்வு.

பாரதியார் ஒருமுறை கல்கத்தாவில் ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தபோது,  தேசப் பக்தர்கள் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், பாரதியாரும் கலந்து கொண்டார். கூட்டம் முடியும் தருவாயில், பாரதி தன்னை சகோதரி நிவேதிதாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அத்துடன், தான் இயற்றிய சில பாடல்களையும் பாடிக்காட்டினார். அதனைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தார் நிவேதிதா. அப்போது, ‘உன் கவித் திறமையை பாரத மாதா, சுதேசி சேவைக்கே உபயோகிக்க வேண்டுகிறாள்…’  என்று பாரதியிடம் வேண்டுகோள் வைத்தார் நிவேதிதா.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு… நிவேதிதா, பாரதியின் வழிகாட்டியாய், ஞானகுருவாய் விளங்கினார்.

பாரதியார் உணர்ச்சி ததும்பும் பாடல்களைப் பாடுவதற்கும், தீவிரமாகச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சகோதரி நிவேதிதாவே காரணமாக இருந்தார்.

பின்னாளில் தான் எழுதிய ‘ஸ்வதேச கீதங்கள்’ முதல் பகுதியை பாரதியார், நிவேதிதையை குருவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு சமர்ப்பணம் செய்தார்.

எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலையில் அழைத்துச் செல்வார். `பைத்தியங்கள் உலவப் போகின்றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ பாட்டு!

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரம்ப்படுவார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் நிறுத்தினாராம்!

பாரதியின் செண்டிமெண்ட்டுகள்

லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் படங்களும் வைத்திருப்பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே பிச்சுவா கத்தி இருக்கும். தினமும் இதை வணங்கிய பிறகுதான் வழக்கமான வேலைகளை ஆரம்பிப்பாராம்.

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு இமயமலையில் இருந்து எடுத்து வந்த ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். அதை பாரதி மரணிக்கும் வரையில் பொக்கிஷமாக பாதுகாத்தார்.

பாரதியின் தைரியம்

‘மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்’ என்று இவர் சொன்னபோது,  ‘கூட்டத்தை மறு நாளுக்கு மாற்ற முடியுமா?’ என்று கேட்டார் காந்தி.  ‘அது முடியாது ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி’ என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந்தார் காந்தி. ‘இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்’ என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!

 பாரதியின் முதல் பாடலும், கடைசி பாடலும், முதல் புத்தகமும்

பாரதி பாடிய முதல் பாடல் ‘தனிமையிரக்கம்’. கடைசி பாடல் `பாரத சமுதாயம் வாழ்கவே’. முதல் புத்தகம் `ஸ்வதேச கீதங்கள்’.

பாரதி வாழ்ந்த வீடுகள் நினைவுச் சின்னங்களாக!

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது.

பாரதியின் மறைவு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க…. அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர்  அதன்பிறகு கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார்.

1921-ல் செப்டம்பர் 11-ம் தேதி தூக்கத்தில் உயிர் பிரிந்தது.  அன்றைய தினம்  அவருக்காக வந்திருந்தவர்கள்  20 –க்கும் குறைவானவர்களே!

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
மாணவர் சக்தி டிசம்பர் 2018 இதழில் வெளியான கட்டுரை

மாணவர் சக்தி  டிசம்பர்  2018 இதழில் வெளியான கட்டுரையை பத்திரிகை வடிவில் படிக்க

Click here… 

(Visited 997 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon