Big Data[2] – ‘பிக் டேட்டா’ ஜாதகம் கணிக்கிறதா?

பரபரப்பாக இருக்கும் நம் மக்கள் ‘பிக் டேட்டா’ குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தகவல் சூழ் உலகில் வசிக்கும் நாம் ‘பிக் டேட்டா’ தகவல் குறித்து அறிந்து வைத்திருக்கவில்லை எனில் அதையும் ‘பிக் டேட்டா’ தன் கணக்கில் ‘டெக்னாலஜி அப்டேட் ஆகாவதர்கள்’ என்ற பட்டியல் தலைப்பில் சேகரித்து வைத்துக்கொள்ளும்.

நம் பெயர், வயது, பாலினம், குடும்பம், இருப்பிடம் இவற்றுடன் நாம் விரும்பும் விளையாட்டு, சாப்பாடு, ஆடைவகை,  நம் பொழுதுபோக்கு, நம் திறமை, நம் நண்பர்கள், விரோதிகள், நாம் ரசிக்கும் நடிகைகள்/நடிகர்கள், நமக்குப் பிடித்த பாடல் மற்றும் திரைப்படங்கள்,  நாம் அடிக்கடி செல்லும் உணவகம், தியேட்டர் என நம்மைப் பற்றி நுணுக்கமான விஷயங்களையும் சேகரித்து வைத்துக்கொண்டு இன்னென்ன குணாதிசயங்கள் கொண்ட நமக்கு என்ன பிசினஸ்/வேலை பொருத்தமாக இருக்கும், எப்படிப்பட்டவரை திருமணம் செய்தால் இல்வாழ்க்கை நன்றாக அமையும், என்ன கார் வாங்கலாம், எங்கு வீடு வாங்கினால் நம் இருப்பிடத்தில் இருந்து டிராஃபிக் ஜாமில் மாட்டாமல் சென்றுவர வசதியாக இருக்கும் என்பதுபோன்ற தகவல்களை கணித்துச் சொல்கிறது ‘பிக் டேட்டா’.

‘அப்போ பிக் டேட்டா ஜாதகம் கணிக்கிறதா?’ என நினைக்க வேண்டாம் ஜாதகம் கணிக்கவில்லை, தன்னிடம் உள்ளடக்கிய கணக்கில்லா தகவல்களை அலசி ஆராய்ந்து தீர்வளிக்கிறது. அவ்வளவுதான்.

உதாரணத்துக்கு ஒரு சேல்ஸ் நிறுவனத்தின் வெப்சைட்டில் ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக தேடிப் பார்க்கிறோம் என வைத்துக்கொள்வோம். எந்த மாடல் வாங்குவது என நாம் சற்றே குழம்பி நிற்கும் வேளையில் நம் விருப்பம் அறிந்து, ‘இந்த வகை போன்கள் நிறைய விற்பனை செய்யப்பட்டுள்ளன…’ என நிறைய மாடல் போன்களை பட்டியலிடும். அடுத்து அந்த மாடல் போன்களை வாங்கிய அவர்கள் வாடிக்கையாளர்கள், வாங்கியுள்ள செல்போன் கவர், ஸ்கிரீன் புரொடக்ட்டர், பவர் பேங்க், இயர் போன், செல்போன் ஸ்பீக்கர்ஸ், மெமரி கார்ட், ஓடிஜி ஃப்ளாஷ் ட்ரைவ், புளூ டூத் போன்றவற்றை பட்டியலிடும். அடுத்து ஸ்மார்ட் போன் சம்பந்தப்பட்ட அத்தனை துணை உபகரணங்களுக்கான பிற நிறுவனங்களின் விளம்பரங்கள் பட்டியலிடப்படும்.

இவற்றை எல்லாம் மீறி நாம் எதையுமே வாங்காமல் வெப்சைட்டைவிட்டு வெளியேறிவிட்டால் இமெயிலில் அந்த பொருட்கள் பற்றிய விவரங்களை அனுப்பி வைக்கும். விரும்பிய சாக்லெட்டை வாங்கித்தந்தே ஆக வேண்டும் என அழிச்சாட்டியம் செய்யும் சின்னஞ்சிறு குழந்தைகளைப் போல, அவர்கள் பொருட்களை நாம் வாங்கும் வரை விடாமல் நம்மை நச்சரிக்கும். அப்படியே அந்தப் பொருளை வாங்கிவிட்டால் அந்த நிறுவனத்தின் அடுத்தகட்ட தயாரிப்பை நம் கண்முன் விரிக்கும். ஐபோன் வாங்கியிருந்தால், ஐபேடை காண்பித்து ஆசைகாட்டும். ஆண்ட்ராய்ட் போன் வாங்கியிருந்தால் டேப்லெட்டை காட்டி சுண்டி இழுக்கும். இப்படியே அவர்கள் விற்பனை சங்கிலிபோட்டு நம்மை அவர்கள் பிடிக்குள்ளேயே வைத்துக்கொள்வர்.

இப்படி ஒரு வாடிக்கையாளரின் ஆர்வத்தை பல கோணங்களில் அலசி ஆராய்ந்து விற்பனை செய்யும் சேல்ஸ் நிறுவனங்கள் பிக் டேட்டாவின் பின்னணியில்தான் இயங்குகின்றன.

‘காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்…’ என்ற கண்ணதாசன் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது. ஐபோன் வாங்கப்போய் ஐபேட் வாங்கியவர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் புத்தகங்கள் வாங்கப் போய் அவர் எழுதிய மொபைல் தொழில்நுட்பப் புத்தகங்களையும் சேர்த்து வாங்கியவர்களும் இருக்கிறார்கள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software private Limited

மார்ச் 24, 2019

(குங்குமம் – வார இதழில் 2017-ம் ஆண்டு நான் எழுதிய கட்டுரைத் தொடரில் இருந்து…)

 

(Visited 115 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon