நாம் ஒரு சுற்றுலா செல்வதாக வைத்துக்கொள்ளலாம். அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பு. இனிய நினைவுகளுடன் வீடு திரும்புகிறோம். ஓய்வெடுக்கும்போது ஃபேஸ்புக்கைப் பார்வையிடுகிறோம். என்ன ஒரு ஆச்சர்யம்… சுற்றுலா சென்றபோது பேசிப் பழகிய நண்பர்களின் புகைப்படங்கள் ‘இவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருக்கலாம். நட்பு வட்டத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்…’ என்று பொருள்படும் வகையில் ‘People You May Know… Add Friend’ என்ற தகவல் வெளிப்பட்டு ‘அட நாம் சந்தித்தது ஃபேஸ்புக்கிற்கு எப்படித் தெரியும்’ என ஆச்சர்யப்படுத்தும்.
பஸ், ரயில், சிக்னல் நிறுத்தத்தில் என நாம் சந்திக்கின்றவர்கள் புகைப்படங்களும் ஃபேஸ்புக்கில் இதுபோல வெளிப்பட்டு நட்பாகிக்கொள்ளுங்கள் என ஆசைகாட்டும்.
நாம் பேசிப் பழகாதவர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவதில் ஃபேஸ்புக்குக்கு ஏன் இத்தனை ஆர்வம்? எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது.
நம் ஸ்மார்ட் போனில் பதிவு செய்துகொள்ளும் மொபைல் எண்கள் மூலமும், நம் போனில் உள்ள புளூடூத் (Blue Tooth), ஒய் ஃபை (Wi-Fi), ஜிபிஎஸ் (GPS) போன்ற தொழில்நுட்பங்கள் மூலமும் நாம் செல்லுகின்ற இடங்கள் சந்திக்கும் நபர்கள் போன்ற தகவல்கள் ஏதேனும் ஒருவடிவில் சேகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
இதன் மூலம் ஏற்கெனவே நம் நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்கள் வசிக்கும் இடத்துக்குச் செல்லும்போது அங்கு எதேச்சையாக அறிமுகம் ஆகும் அவர்கள் நண்பர்கள் உறவினர்கள் போன்றோர்களையும் ‘உன் நண்பன் வசிக்கும் அதே இடத்தில் வசிக்கும் இவர்களையும் உங்கள் நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்’ என பல நண்பர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக்.
தகவல்தளத்தில் உள்ள தகவல்களை நாம் எதிர்பார்க்காத கோணத்தில் ஒப்பிட்டு அலசி ஆராய்ந்து எடுத்துக்கொடுப்பதே பிக் டேட்டா கான்செப்ட்டின் அடிப்படை. ‘சிறு துரும்பும் பல்குத்த உதவும்’ என்பதைப்போல பிக் டேட்டா சிறிய விஷயத்தைக்கூட ஆராய்ந்து அறியப் பயன்படுத்தும்.
உதாரணத்துக்கு ‘எனக்கு குல்ஃபி பிடிக்கும்’ என என்றோ எப்போதோ பதிவு செய்த சிறிய விவரத்தை அடிப்படையாக வைத்து குல்ஃபி ஐஸ்கிரீமைப் பிடிக்கும் நண்பர்களை நமக்கு அறிமுகப்படுத்தும்.
இன்டர்நெட்டில் நாம் அடிக்கடி பார்வையிடும் வெப்சைட்டுகள், சமூக வலைதளங்கள், யுடியூப் வீடியோக்கள், கூகுளில் தேடும் தகவல்கள் போன்றவை அம்பலப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே யு-டியூபில் நாம் நுழைந்ததுமே நம் ஆர்வம் என்ன என்று தெரிந்துகொண்டு ‘You May Like this Video…’ என அது தொடர்பான பல வீடியோக்களை அறிமுகப்படுத்தும். கூகுளில் நாம் ஒரு தகவலைத் தேடும்போது அதோடு தொடர்புடைய விஷயங்கள் அனைத்தையும் தேடி எடுத்துக் கொடுப்பதும் இதனாலேயே.
ஒருமுறை, ஒரு வெப்சைட்டின் பெயரை (டொமைன் நேம்) ரெஜிஸ்ட்டர் செய்வதற்காக ஒரு சர்வீஸ் புரொவைடரில் அந்தப் பெயரை வேறு யாரும் எடுக்காமல் இருக்கிறார்களா என ஒரே நாளில் காலை, மாலை, இரவு என வெவ்வேறு நேரங்களில் ஐந்தாறு முறை தேடினேன். அன்று முழுவதும் அந்த டொமைன் நேம் Available என சொன்னது.
அடுத்தநாள் தேடியபோது ‘It is Unavailable’ என்ற தகவலை கொடுத்ததோடு ‘இந்த டொமைன் பெயர் உங்களுக்குத் தேவை எனில் கட்டணமாக இவ்வளவு கட்டுங்கள்’ என்று சொல்லி கலர் எழுத்துக்களில் கண்சிமிட்டியது.
அதாவது டிமாண்ட் அதிகம் இருக்கிறது என தெரிந்துகொண்டு அந்த குறிப்பிட்ட டொமைன் பெயருக்கு விலையை ஏற்றிவிட்டிருந்தது அந்த சர்வீஸ் புரொவைடர் நிறுவனம்.
இன்டர்நெட்டில் இணைந்துள்ள நம் கம்ப்யூட்டர்/லேப்டாப்பின் ஐபி முகவரி மூலம் அந்த சர்வீஸ்புரொவைடரின் வெப்சைட்டுக்கு தகவல் கிடைக்கிறது. எந்தெந்த டொமைன் பெயர் அதிகமாக தேடப்படுகிறது என்ற தகவலின் அடிப்படையில் விலையை ஏற்றி விற்பனை செய்கிறது.
‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என்பதைப்போல நாம் பயன்படுத்தும் அத்தனை இணையம் சார்ந்த எலக்ட்ரானிக் சாதனங்களிலும் ஏதேனும் ஒரு தொழில்நுட்ப விவரத்தின் மூலம் நாம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறோம்.
எங்கும் டேட்டா, எதிலும் டேட்டா. நம்மைத் தொடர்ச்சியாக கண்காணித்து வேவு பார்க்கும் வேலையை செவ்வனே செய்யும் டேட்டாவுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software private Limited
மார்ச் 25, 2019
(குங்குமம் – வார இதழில் 2017-ம் ஆண்டு நான் எழுதிய கட்டுரைத் தொடரில் இருந்து…)