வாழ்க்கையின் OTP-9 (புதிய தலைமுறை பெண் – ஏப்ரல் 2019)


சிம்மாசனத்துக்கு ‘ரிசர்வேஷன்’ செய்துவிடுங்கள்!

அப்பாவின் தியாகத்தைப் பற்றிய வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதற்கு பலரின் கமெண்ட்டுகள் மனதை கனக்கச் செய்தன. எனக்கும் சின்ன ஃப்ளாஷ்பேக் எட்டிப் பார்த்தது.

25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்னை வந்து என் நிறுவனத்தைத் தொடங்கியபோது பல்துறை சார்ந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது என் கிளையிண்ட் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

‘எப்படி உங்களால் உங்கள் அப்பா, அம்மா மீது இத்தனை பாசமாக இருக்க முடிகிறது? என் பெண்ணுக்கு சச்சினையும், ஷாருகானையும்தான் பிடிக்கிறதே தவிர…’

இந்தக் கேள்விக்கு அப்போது எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

நான் வேண்டுமென்றே என் பெற்றோர் பெருமைகளை மிகைப்படுத்தி மற்றவர்களிடம் சொல்வதில்லை. என் பணிசார்ந்த விஷயங்களைப் பேசும்போது தேவைப்படும் இடத்தில் அவர்களையும் குறிப்பிடுவேன். அவ்வளவுதான்.

ஆனாலும் அந்த கிளையிண்ட் அப்படி நுணுக்கமாக என்னைப் புரிந்துகொண்டு கேட்ட கேள்வி எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் என்ன பதில் சொல்வது என ஒருநிமிடம் யோசிக்கத்தான் வேண்டியிருந்தது.

பாசம் வைப்பதற்கு காரணம் என்ன சொல்வது? எதைச் சொல்வது? எதை விடுவது?

ஆனாலும் பதில் சொன்னேன்.

‘அந்த அளவுக்கு என் அப்பா எங்களிடம் பாசத்துடனும் நேசத்துடனும் நடந்துகொள்கிறார். வாழ்ந்து காட்டுகிறார்…’

‘நாங்களும் அப்படித்தானே செய்கிறோம்…’ என்றவருக்கு ‘என்னவோ எனக்கு என் அப்பா அம்மாவை ரொம்பப் பிடிக்கும்… அவர்கள்தான் என் நண்பர்கள்…’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

சென்ற வருடம் எங்கள் காம்கேரின் வெள்ளிவிழாவுக்காக மீண்டும் அதே கிளையிண்டை சந்திக்கும் வாய்ப்பு.

இப்போதும் மறக்காமல் இதே கேள்வியை கேட்டார். அவர் மகளுக்கு திருமணமும் ஆகி பேரன் பேத்திகளும் எடுத்துவிட்டார். ஆனாலும் அவருக்குள் இந்த கேள்வி மறையாமல் அப்படியே இருந்தது.

இப்போது என்னால் தெளிவான பதிலை சொல்ல முடிந்தது.

என் அப்பாவும் அம்மாவும் இரண்டு விஷயங்களை செய்யவே இல்லை.

ஒன்று,  ‘நாங்கள் அந்த காலத்தில் எப்படி கஷ்டப்பட்டோம் தெரியுமா… உங்களுக்கு இப்போது இருக்கும் வசதிகள் எல்லாம் கிடையாது… அப்படிக் கஷ்டப்பட்டு வளர்ந்தோம்…’

இரண்டாவது, ‘நாங்கள் எப்படி எல்லாம் ராத்திரி பகலாக கஷ்டப்படறோம் உங்களுக்காக…. எவ்வளவு பணம் செலவழிக்கிறோம்… கொஞ்சமாவது எங்கள்  கஷ்டம் புரிகிறதா…’

இப்படி ஒருநாளும் சொன்னதில்லை.

மதிப்பெண் குறைந்தாலும் சரி, தம்பி தங்கைகளுக்குள் சண்டை போட்டுக்கொண்டாலும் சரி, ஏதேனும் சிறு தவறுகள் செய்தாலும் சரி, அறியாமல் அடம் பிடித்தாலும் சரி, புரியாமல் கோபித்துக்கொண்டாலும் சரி…

நேரடியாக நிகழ்வுக்கான தீர்வை கொடுப்பதில்தான் கவனமாக இருப்பார்களே தவிர, நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்போதுவரை ஒருநாளும் மேலே சொன்ன இரண்டு விஷயங்களைச் சொன்னதே இல்லை.

இந்த இரண்டு விஷயங்களை சொல்லி சொல்லி குழந்தைகளிடம் ‘சிம்பதி’ பெற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் ஒருநாளும் அவர்கள் மனதுக்குள் செல்லவே முடியாது.

பொதுவாக எல்லா காலகட்டங்களிலும் அடுத்த தலைமுறை என்பது முந்தைய தலைமுறையினரைவிட எல்லா விதங்களிலும் நன்றாகவேதான் இருப்பார்கள். இது இயற்கையான ஒன்று.

செய்ததைச் சொல்லிக் காட்டும் யாருமே எந்த காலத்திலும் மற்றவர்கள் மனதில் இடம் பெற முடியாது. இதுவே வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்த OTP.

பிள்ளைகள் மனதில் இடம் பிடிக்க…

சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். அதில் ஐந்து வயது சிறுமி தன் பள்ளியில் ‘ஃபேன்ஸி டிரஸ்’ போட்டி நடக்க இருப்பதாக தன் தாயிடம் சொல்கிறாள். அந்தத் தாயும் விதவிதமாக தானே உடைகளை தைத்துக் காண்பிக்கிறார். விஞ்ஞானி உடை, டாக்டர் உடை, விண்வெளியில் பயணிக்கும் உடை, மேஜிக் மனிதனின் உடை இப்படி எதற்குமே அந்தச் சிறுமி சந்தோஷமோ திருப்தியோ அடையவில்லை. கடைசியில் அந்தச் சிறுமி ஒரு டிரஸ்ஸை ஆன்லைனில் காண்பித்து அதை வாங்கித்தரச் சொல்கிறாள். அது சாதாரண சிவப்பு நிற கவுன். அடுத்த சில நாட்களில் அந்த டிரஸ் பார்சலில் வீட்டுக்கு வர அதை அணிந்து போட்டிக்குத் தயாராகிறாள் அந்தச் சிறுமி.

போட்டிக்குக் காத்திருக்கும் நேரத்தில் அந்தத் தாய் பள்ளி நோட்டீஸ் போர்டை பார்வையிடுகிறார்.

ஒவ்வொரு குழந்தையும் ‘I want to be a doctor’, ‘I want to be a astronaut’, ‘I want to be a Lawyer’ என்றெல்லாம் எழுதி அந்தத்துறை பிரபலங்களின் புகைப்படங்களை பின் செய்து வைத்திருக்க, ஒரு புகைப்படத்தில் இந்தத் தாய் சிவப்பு நிற கவுனில் கம்பீரமாய் நிற்க அதன் கீழ் ‘I want to be my Mom’ என்று எழுதி அதன் கீழ் இவரது மகள் தன் பெயரை மழலை கையெழுத்தில் எழுதி ஒட்டி இருந்தாள்.

தாயும் மகளும் அர்த்தப் புன்னகையுடன் பார்த்துக்கொள்ள தாய் கண்களில் ஆனந்த கண்ணீர்.

இந்த வீடியோவில் மற்ற குழந்தைகள் எதிர்காலத்தில் தாங்கள் எப்படி வர வேண்டும் என்பதற்கு மற்றவர்களை உதாரணம் காட்டும்போது, ஒரு குழந்தை மட்டும் எப்படி தன் அம்மாபோல வர வேண்டும் என நினைக்கிறது.

மற்ற பெற்றோர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மற்றவர்களை உதாரணம் காட்டி அவர்களைப் போல வரவேண்டும் என ஊக்கம் கொடுத்து வளர்த்திருக்கலாம்.

இந்த வீடியோவில் வரும் குழந்தையின் தாய் இந்த இடத்தில் வித்தியாசப்பட்டிருக்கலாம். குழந்தையுடன் குழந்தையாக பயணித்து தேவையான இடத்தில் தட்டிக்கொடுத்து அவசியமானபோது கைக்கொடுத்துத் தூக்கி வழிகாட்டி அதன் போக்கில் வளர விட்டிருப்பார். அதனால் அதன் மனதில் அந்தத் தாய் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருப்பார்.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் மனதின் நீங்கள் இல்லை என்று புலம்புகிறீர்களா… காரணம் வேறு யாருமல்ல… நீங்களேதான்.

ஆமாம். நீங்கள்தானே உங்கள் பிள்ளைகள் மனதின் சிம்மாசனத்துக்கு  மற்றவர்களை  ‘ரெகமெண்டேஷன்’  செய்து அனுப்பி வைக்கிறீர்கள் உங்களை அறியாமலேயே…

இசை ஜாம்பவானை உதாரணம்காட்டி இசையில் அவரைப்போல வரணும், ஸ்போர்ட்ஸில் உச்சத்தில் இருப்பவரை உதாரணம்காட்டி ஸ்போர்ட்ஸில் அவரைப் போல ஜொலிக்கணும், பிசினஸில் ஜெயித்தவரை உதாரணம்காட்டி அவரைபோல வாழ்க்கையில் ஜெயிக்கணும் என ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொருவரை நீங்களே மற்றவர்களை ரெகமெண்ட் செய்து உங்கள் பிள்ளைகள் மனதில் உள்ள சிம்மாசனத்துக்கு அனுப்பிவிட்டு…

பின்னர் என் பிள்ளைகளின் மனதில் இடம்பிடிக்கவே முடிவதில்லை என புலம்புவதால் என்ன பயன்?

எத்தனை பெற்றோர் தங்கள் பிள்ளைகள் நம்மைப் போல, நம் அப்பா அம்மாவைப்போல, நம் மூதாதையர்கள்போல நல்ல குணநலன்களுடன் வளர வேண்டும் என விரும்பி அவர்களின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறார்கள்? அருமை பெருமைகள்கூட வேண்டாம். மூதாதையர்கள் பெயர்களையாவது தெரிந்து வைத்திருக்கிறார்களா இளைய தலைமுறையினர்?

ஏதோ நான் இந்தத் தலைமுறை குழந்தைகளை மட்டும் குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். நம் தலைமுறையிலும் எத்தனை பேர் நம் தாத்தா பாட்டி பெயர்களைத்தவிர அதற்கும் முந்தைய பெரியோர்களை அறிந்து வைத்திருக்கிறோம்.

காரணம் கணவன் உறவுகளை எடுத்துச் சொன்னால் மனைவிக்கும், மனைவி உறவுகளை எடுத்துச் சொன்னால் கணவனுக்கும் ஏற்படும் உட்பூசல் ஒருபுறம்.

நேரம் இல்லை, ஆர்வம் இல்லை என்ற அடிப்படைக் காரணங்களுடன் ‘தெரிந்துகொள்ளத் தேவையில்லை’ என்பதே அடிமனதின் கசடாக படிந்துள்ளது.

முன்பெல்லாம் வீட்டில் வயதான தாத்தா பாட்டிகள் இருப்பார்கள். பேரக்குழந்தைகள் அப்பா அம்மாவிடம் படிப்பில் மார்க் குறைந்ததற்காக திட்டும் அடியும் வாங்கும்போது வாரி அணைத்து ‘இவள் யார் பேத்தியாக்கும்… இவள் புத்திசாலி சமர்த்துப் பெண்… இவளால் முடியாட்டா யாரால் முடியும்… ஏதோ இந்தமுறை மார்க் குறைஞ்சு போச்சு…’ என்று தங்களையே உதாரணமாக்கி பேரப் பிள்ளைகளுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தைரியத்தையும் ஊட்டுவார்கள்.

‘இவள் யார் பேத்தியாக்கும்…, யார் பேரனாக்கும்’ என்பதுபோன்ற ஒற்றை வரிகள் கொடுக்கும் தைரியத்தை தங்கள் பிள்ளைகளை ‘கவுன்சலிங்’ போன்ற வகுப்புகளுக்கு அனுப்பி கட்டணம் செலுத்தி அங்கு மீட்டெடுக்கப் போராடும் பெற்றோர்களின் செய்கை, கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப்போல.

பாட்டி தாத்தாக்களின் ‘இவள் என் பேத்தியாக்கும்…, என் பேரனாக்கும்’ என்ற பெருமைமிகு உத்வேக வார்த்தைகள் பேரப்பிள்ளைகள் அத்தனை பேருக்குமான OTP.

அறிவுரையை கூடவா காப்பி பேஸ்ட் செய்யணும்?

பள்ளியில் ஏற்பட்ட சிறிய உளவியல் பிரச்சனைக்காக ஏற்கெனவே என்னிடம் கவுன்சிலிங் பெற்ற ஒரு பள்ளி மாணவியின் தாய் எனக்கு போன் செய்து பேசினார்.

பெண்களின் உடை குறித்து பேச்சு வந்தபோது ‘பெண்கள் கையெடுத்துக் கும்பிடுவதைப் போல டிரஸ் செய்யணும், விசில் அடித்துக் கூப்பிடுவதைப் போல டிரஸ் செய்யக்கூடாது’ என்று  மகளுக்கு அறிவுரை செய்ததாகச் சொன்னார்.

சினிமா வசனத்தை அப்படியே அறிவுரை என்ற பெயரில் ஒப்பித்த அவரது குரலின் தொனி எனக்கே ஒருவித எரிச்சலை உண்டு செய்தது. இதை  டீன் ஏஜ் வயதில் உள்ள பிள்ளைகள் எப்படி ஏற்பார்கள்?

அறிவுரையைக் கூட காப்பி பேஸ்ட் செய்துத்தான் சொல்ல வேண்டிய நிலையில் பல பெற்றோர்கள் இருக்கிறார்கள். காரணம், தங்கள் மனதுக்குள்ளேயே வீட்டில் உள்ள அனுபவஸ்தர்களிடம் இருந்து நல்ல விஷயங்கள் உள்ளே செல்லாமல் போனதால் ஏற்பட்ட வெற்றிடத்தினால் கூட இருக்கலாம்.

யானைப் பாகன் இயல்பில் அமைதியான குணம் படைத்தவனாக இருந்தாலும், ஒரு யானையுடன் பழகுவதற்காகவே சற்றே முரட்டு சுபாவம் உள்ளவன்போல யானையிடம் நடிப்பான்.

தன் எடையும், உடலும் பெரியது, தான் மிக வலிமையான மிருகம் என்றெல்லாம் யானைகளுக்கு மறந்து மரத்துப் போகும் அளவுக்கு பாகன்கள் தாங்கள் யானையைவிட வலிமையானவர்கள்போல எழுந்து நட, உட்கார், இங்கே வா, நில், போ… என்று கத்தி கத்தி ஆளுமை செலுத்திக்கொண்டே இருப்பார்கள்.

யானைகளும் பாகன்தான் தன்னைவிட பெரிய ஆள் என நினைத்துக்கொண்டு அவன் சொல்வதையெல்லாம் கேட்டு பவ்யமாக நடக்கும். இதனால்தான் ‘யானையின்  பலம் யானைக்குத் தெரியாது’ என்று சொல்வார்கள்.

இதுபோலதான் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களைவிட புத்திசாலிகளாக இருந்தாலும் அவர்களை தங்கள் கைக்குள் வைத்துக்கொள்ள எத்தனையோ பிரயத்தனப்படுகிறார்கள். அறிவுரைகளினாலும், மற்றவர்களை உதாரணம் காட்டியும், கடுமையான பயிற்சிகளினாலும், ‘ஓடு ஓடு வெற்றியின் உச்சத்தைத் தொட ஓடிக்கொண்டே இரு’ என நெம்பிக்கொண்டே இருக்கிறார்கள். பலன் பெரும்பாலும் அவர்கள் நினைக்கும் அளவுக்கு இனிப்பாக இருப்பதில்லை. அதுவே உண்மை.

ஆனால் என் அனுபவம் வித்தியாசமானது. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எனக்கு ‘Stage Fear’  உண்டு. எத்தனை முயற்சித்தும் அந்த பயம் போகவே இல்லை. பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி என கலந்து கொள்வேன். ஆனால் போட்டியன்று பயத்தினால் போட்டிக்குச் செல்ல மாட்டேன்.

என் பெற்றோர் ஒவ்வொரு முறையும் எனக்கு ஊட்டும் தன்னம்பிக்கை  இதுதான்: ‘யானையின்  பலம் யானைக்குத் தெரியாது. உன் பலம் உனக்குத் தெரியவில்லை’. இதைக் கேட்கும்போது எனக்குள் ஆயிரம் யானைகளின் பலம் உள்ளே செல்லும். இதுதான் என் பெற்றோர் எனக்குக் கொடுத்த OTP.

இன்று பல மேடைகளில் ‘தன்னம்பிக்கைப் பேச்சாளராக…’ பேசிக்கொண்டிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் பெற்றோரின் அணுகுமுறை.

இந்தா பிடிங்க உங்களுக்கான OTP  “உங்கள் பிள்ளைகளுடைய மனதின் சிம்மாசனம் உங்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் நுழையும் முன்னர் நீங்கள் ‘ரிசர்வ்’ செய்துகொள்ளுங்கள்.”

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 9
ஏப்ரல் 2019

(Visited 198 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon