தேவைப்பட்டால் காதுகளையும் மூடிக்கொள்ளலாம்!

தேவைப்பட்டால் காதுகளையும் மூடிக்கொள்ளலாம்

தேசிய தொழில்நுட்ப தினம் – National Technology Day

மே 11, 2019

1992 – ல் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்த காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகபட்சம் இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான். ஒன்று திருமணம். மற்றொன்று ஆசிரியர் பணி. அதில் உச்சமாக ஒருசிலர் பள்ளி / கல்லூரி தலைமையாசிரியர்களாகவும் / பிரின்ஸிபலாகவும் இருப்பார்கள்.

இந்த இரண்டையும் தவிர்த்து எனக்கான பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அதற்காக என் படிப்பு, உழைப்பு, திறமை இவற்றை மூலதலமாக்கினேன். என் பெற்றோரின் முழு ஆதரவுடன் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐடி நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

என் பெற்றோருடன் கலந்தாலோசனை செய்து என் பெயரை ‘காம்கேர் கே. புவனேஸ்வரி’ என்று மாற்றம் செய்தேன்.

1992 – களில் தொழில்நுட்பம் வளரவே ஆரம்பிக்காத காலகட்டத்தில்  தமிழகமெங்கும் தமிழில் தொழில்நுட்பத்தை எளிய முறையில் கொண்டு சேர்க்கும் முயற்சியைத் தொடங்கினேன்.

1992 – க்குப் பிறகானவர்களுக்கு முதன்முதலில் தொழில்நுட்பத்தை தமிழில் அறிமுகப்படுத்தியது எங்கள் காம்கேர் நிறுவனமும் நானும்.

தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம், இந்தி உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் சாஃப்ட்வேர், அனிமேஷன், வெப்சைட், இ-புத்தகங்கள், ஆவணப்படங்கள் என என் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே வந்தேன்.

இன்று தமிழகம் மற்றும் இந்திய எல்லைகளைத்தாண்டி உலக அளவில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேரின் படைப்புகள் பேசப்படுகின்றன.

ஆரம்ப  காலகட்டத்தில் என் நோக்கத்தை சிதறடிக்க   ஏகப்பட்ட அறிவுரைகள்.

உன் படிப்பை வீணடிக்கிறாய். பெரிய நிறுவனங்களில் சாஃப்ட்வேர் துறையில் முயற்சிக்கலாமே…

வங்கி, தொலைபேசித்துறை போன்றவற்றில் தேர்வெழுதி நல்ல சம்பளத்தில் அரசு உத்யோகத்தில் நுழையலாமே…

கல்லூரிகளில் லெக்சரராக சேரலாமே… அதுதான் பெண்களுக்கு பாதுகாப்பானது…

பள்ளியில் தலைமை ஆசிரியராக வாய்ப்புள்ளதே… 10 to 5 வேலை… வருடாந்திர விடுமுறை… என பல ஆதாயங்கள் உள்ளன…

உன் திருமணத்துக்குப் பிறகு பிசினஸை யார் பார்த்துக்கொள்வார்… எப்படியும் மூடத்தானே வேண்டும்… எதற்காக வீணாக உழைக்க வேண்டும்…

சாஃப்ட்வேருக்கு அமெரிக்காவில் நல்ல வாய்ப்பு இருக்கிறது. அங்கு  சென்று ‘ஜாம் ஜாம்’ என்று செட்டில் ஆவதை விட்டு இங்கிருந்து சொந்த பிசினஸ் ஆரம்பித்து கஷ்டப்படனுமா…

இப்படி அவரவர்கள் பார்வையில்… அவரவர்கள் களத்தில்… அவரவர்கள் தளத்தில் இருந்து ஆயிரம் ஆலோசனைகள். அறிவுரை வழங்குபவர்கள் ஆண் பெண் என இருபாலரும்தான்.

எனக்கு ஒரு வழக்கம் உண்டு. தேவைப்படாத நேரத்தில் காதுகளைக் கூட என்னால் மூடிக்கொள்ள முடியும். என் நோக்கத்தை சிதறடிக்கும் வார்த்தைகள் எதுவுமே என் காதுகளுக்குள் நுழையாது. அதனால் மனதுக்குள்ளும் செல்லாது. அவர்கள் சொல்வதை யோசிக்கவும் அவசியம் இல்லாமல் போனது.

இதோ 25 ஆண்டுகள் ஓடிவிட்டன. என் கடும் உழைப்பில் படிப்படியான வளர்ச்சியில் ‘காம்கேர்’என்ற என் நிறுவனத்தின் பெயரே எனக்கு அடையாளமாகி ஐகானாகவும் மாறிவிட்டது.

ஒருவேளை அன்று அவர்கள் சொன்ன அறிவுரைகளில் யார் ஒருவர் சொன்னதையேனும் நான் கேட்டிருந்தால் இன்று இது சாத்தியமாகி இருக்காது.

எனவே உங்கள் இலட்சியத்தில் நீங்கள் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தால் மற்றவர்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஊர் வாயை மூட முடியாது. ஆனால் கொஞ்சம் பிரயத்தனப்பட்டால் நம் காதுகளை நம்மால் மூடிக்கொள்ள முடியும். மனமிருந்தால் எதுவும் சாத்தியமே.

இதை நான் ஏதோ பெண்களுக்கு மட்டும் சொல்வதாக நினைக்க வேண்டாம். ஆண் பெண் என இருபாலருக்கும்தான்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Softawre

மே 11, 2019

(Visited 24 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari