வாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)

பாசிட்டிவோ நெகட்டிவோ, ஒருவர்  பேசிய வார்த்தைகள்  செய்கைகள் எல்லாம் காலப்போக்கில்  மறந்துவிடும். ஆனால், அந்த வார்த்தைகளும் செய்கைகளும் நம்மை எப்படி உணர செய்ய வைத்தன  என்பதைப் பொறுத்துத்தான்  நட்பும் விரோதமும்.

எழுத்து வடிவில் நாம் கொடுக்கும் தகவல்களுக்கு தரும் கமா, முற்றுப்புள்ளி, ஆச்சர்யக்குறி, கேள்விக்குறி போன்ற Punctuation-களைப் போலவே நம் வாழ்க்கைக்கும் அவை அவசியம் தேவை.

வாழ்க்கையில்…

எந்தெந்த விஷயங்களுக்கு கேள்விக்குறி ? போடவேண்டும்

எந்தெந்த விஷயங்களுக்கு ஆச்சர்யக்குறி ! போடவேண்டும்

எந்தெந்த விஷயங்களுக்கு கமா , போட வேண்டும்

எந்தெந்த விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி . வைக்க வேண்டும்

என்பதை எல்லாம்விட மிக முக்கியமான ஒன்றுள்ளது

அது

எந்தெந்த விஷயங்களை மூன்று புள்ளிகள்… வைத்து தொடர வேண்டும் என்பதே.

சின்ன சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தி ‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’  என்பதையெல்லாம் வலுகட்டாயமாக நம் வாழ்க்கையில் பொருத்திக்கொண்டு உறவுகளையும்  நல்லெண்ணம் கொண்ட நட்புகளையும் முறித்துக்கொண்டு வாழாமல், கொஞ்சம் மனமிறங்கி மன்னித்து மறந்து தேவையான இடங்களில் மூன்று புள்ளிகள் போட்டு உறவுமுறையை தொடரலாம். தவறில்லை.

வாழ்க்கை மிகச் சிறியது. திரும்பிப் பார்ப்பதற்குள் எல்லாமே முடிந்துவிடும். அதற்குள் நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ வைக்கலாமே.

ஆங்கிலத்தில் அழகான பொன்மொழி ஒன்றுண்டு.

Apologizing does not always mean that you’re wrong and the other person is right. It just means that you value your relationship more than your ego.

சிம்பதியும், எம்பதியும் (Sympathy Vs Empathy)

உணர்வுகளை இரண்டு விதமாக கையாளலாம்.

ஒன்று, உணர்வுகளை நம்மைவிட்டு வெளியே வைத்துக்கொண்டு செயல்படுதல். இரண்டாவது அவற்றை நமக்குள் ஏற்றிக்கொண்டு செயல்படுதல். முன்னதுக்கு சிம்பதி என்ற உணர்வையும், பின்னதுக்கு எம்பதி என்ற உணர்வையும் உதாரணமாகச் சொல்லலாம்.

ஒருவரைப் பார்த்துப் பரிதாபப்படுவது சிம்பதி. இதனை கருணை, பச்சாதாபம் என்றெல்லாம் சொல்லலாம். ‘அடடா இப்படி ஆகிவிட்டதே…’ என பரிதாபப்படுவதை சிம்பதி எனலாம். இந்த உணர்வு நம்மைவிட்டு வெளியே இயங்கக் கூடியது. பரிதாபப்பட்டு ஆறுதல் சொல்லிவிட்டால் மறந்துவிடக்கூடிய உணர்வு.

ஒருவரின் துன்பத்தை தன் துன்பமாக பாவித்து உணர்வது எம்பதி. அடுத்தவரை அது எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை அதன் வீச்சிலேயே உணர முடிவது. இந்த உணர்வு நமக்குள் சென்று நம்மை செயல்படவைக்கும். அடுத்தவர்களின் துன்பத்தைப் பார்த்துப் பரிதாபப்படுவதுடன் அந்த துன்பம் நமக்கு வந்தால் எப்படி துடிப்போமோ அதே வீரியத்துடன் அதனை உணர்ந்து அவர்களின் துன்பத்துக்கு வடிகாலாக நம்மால் செயல்பட முடியுமானால் நமக்குள் எம்பதி சரியாக செயல்படுகிறது எனலாம்.

போஸ்ட் கார்டுகளும், இன்லண்ட் கடிதங்களும் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

அக்கா தங்கை. இருவருக்கும் ஓரிரு வயது வித்தியாசம் மட்டுமே இருக்கும். அநேகமாக 16, 17 வயதினர்களாக இருக்கலாம்.

அக்கா கொஞ்சம் அமைதியானவள். அதிகம் நண்பர்கள் கிடையாது. தங்கை கொஞ்சம் கலகலப்பானவள். நண்பர்கள் அதிகம்.

அப்பா அம்மாவுக்கு பணி நிமித்தம் வேறு ஊருக்கு மாற்றல் ஆகிறது. திடீரென வேறு ஊர் மாறியதில் தங்கை கொஞ்சம் அப்செட். நீண்ட நாள் நண்பர்களை விட்டு வந்தது,  புதிய பள்ளி சூழல் இப்படி தங்கை மனதளவில் சோர்வாகவே இருந்து வந்தாள். அவள் சிறுவர் பத்திரிகைகளுக்கு படம் வரைந்து அனுப்பும் வழக்கம் உள்ளவள். பெரும்பாலும் அவள் வரைந்து அனுப்புபவை பிரசுரம் ஆகும். ஊர் மாறியதில் அந்த வழக்கத்தையும் தொடராமல் விட்டுவிட்டாள்.

அக்காவுக்கு தங்கையின் சோர்வு வருத்தத்தைத் தந்தது.

ஒருநாள் தங்கைக்கு ஒரு போஸ்ட் கார்ட் வருகிறது. அதில் அவள் தங்கையின் ஓவியம் வரையும் திறமையைப் பாராட்டி அவள் நெருங்கிய பள்ளித்தோழி கடிதம் எழுதி இருந்தாள். ‘ஏன் இப்போதெல்லாம் உன் ஓவியம் பத்திரிகைகளில் வருவதில்லை… ஏன் வரைவதை விட்டுவிட்டாய்?’ என கேட்டு உரிமையாய் கடிந்துகொண்டிருந்தாள்.

இதைப் பார்த்ததும் தங்கை மனதளவில் மகிழ்ந்தது முகத்தில் பிரகாசமாக வெளிப்பட்டது. பழையபடி கலகலப்பானாள். ஓவியம் வரையத் தொடங்குகிறாள். பத்திரிகைகளுக்கு அனுப்ப ஆரம்பிக்கிறாள். தொடர்ச்சியாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவள் தோழியிடம் இருந்து கார்ட் வருவது தொடர்ந்தது.

அந்த போஸ்ட் கார்டுகளில் தோழியின் வீட்டு முகவரி இல்லை. பதில் கடிதம் எழுத முடியவில்லையே என வருந்தினாள்.

தங்கையின் மனச்சோர்வு அகன்றதில் அக்காவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆனாலும் மனது  ‘பொய் சொல்லி விட்டோமோ’ என சஞ்சலப்பட்டது.

எதற்காக சஞ்சலம்?

தங்கையின் மனதை சரி செய்ய அவள் தோழி எழுதுவதைப் போல இத்தனை நாட்கள் போஸ்ட் கார்ட் எழுதியதே அவள் தானே?

அடுத்த நொடி, அவளுக்கு திருக்குறள் ஒன்று நினைவுக்கு வந்தது.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

இந்த நிகழ்வில் வந்த அக்கா நான்தான்.

இதில் என்னை ஆட்கொண்டிருந்தது எம்பதி. அதனால்தான் என்னால் என் தங்கையின் மனச்சோர்வை அதே வீரியத்தில் என்னுடையதாகவே முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. அதனால்தான் எனக்கு அந்த மனச்சோர்வு ஏற்பட்டிருந்தால் எப்படி வருந்துவேன் என உணர்ந்து யோசித்து அதற்கான தீர்வை  கொண்டுவர முடிந்தது.

என் தங்கையின் மீது சிம்பதி மட்டும் காட்டியிருந்தால் என்னால் தீர்வை யோசித்திருக்க முடியாது. அவள் மீது பரிதாபம் மட்டுமே ஏற்பட்டிருக்கும். சிம்பதி காட்டியதுடன் எம்பதியுடன் நடந்துகொண்டதால்தான் மாற்றம் உண்டானது.

இதுதான் சிம்பதிக்கும் எம்பதிக்குமான வித்தியாசம்.

மற்றவர்களின் பிரச்சனைகளைப் பார்த்து  பரிதாபப்படுவது Sympathy. அதோடு நின்றுவிடாமல் அவர்கள் பிரச்சனையை நம் பிரச்சனையாகக் கருதி அவர் நிலையில் நம்மை நிறுத்திப் பார்த்து நம்மால் ஆன உதவிகள் செய்வதே Empathy. சிம்பதியின் எக்ஸ்டன்ஷனே எம்பதி. இதுவே சிம்பதி எம்பதிக்கான OTP.

பரிதாபப்பட வேண்டாமே!

மற்றவர்களைப் பார்த்து தொடர்ச்சியாகப் பரிதாபப்படுவதுகூட ஒருவகையில் நமக்குள் எதிர்மறை சிந்தனையை ஏற்றிக்கொள்வதைப் போலவேதான். அப்படியென்றால் மற்றவர்களின் பிரச்சனையை கண்டும் காணாமல் செல்ல வேண்டும் என்கிறீர்களா என கேட்க வேண்டாம்.

மற்றவர்களின் பிரச்சனை நம் கவனத்துக்கு வரும்போது அந்த நிமிடம் நமக்குள் ஒரு பரிதாப உணர்வு, பச்சாதாபம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட உணர்வைத்தானே சிம்பதி என்கிறோம்.

ஆனால் தொடர்ச்சியாக அதையே நினைத்துக்கொண்டு அதுகுறித்தே பேசிக்கொண்டிருந்தால் மனோரீதியாக நமக்குள் ஒரு எதிர்மறை சிந்ததனை அழையா விருந்தாளியாய் வந்து ஒட்டிக்கொள்வது நிச்சயம்.

இதைத்தான் அவரவர்கள் கர்மாவை அவரவர்கள் அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும் என்கிறார்கள். அவரவர்களின் கஷ்டநஷ்டங்களை அவரவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்து நாம் தொடர்ச்சியாக பரிதாபப்பட்டால் நமக்குள்ளும் எதிர்மறை சிந்தனை ஒட்டிக்கொள்ளும்.

எங்கள் உறவினர் ஒருவர் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த செய்தியைக் கேள்விப்பட்ட மற்றொரு உறவினர் மனதளவில் கொஞ்சம் அப்செட். சதா அவரைப் பற்றியே நினைத்து, அதுகுறித்தே பேசி கொஞ்ச நாட்களில் அவரே ஒரு நோயாளிபோல் ஆனார்.

ஒருநாள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அட்மிட் ஆனார். சிறுநீரகக் கோளாறுக்கான அத்தனை டெஸ்ட்டுகளும் எடுத்தார்கள். நல்ல வேளையாக சீரியஸான பிரச்சனை ஏதும் இல்லை. சிறுநீரகத் தொற்று என ரிசல்ட் வந்ததால் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுத்துக்கொண்டு வீடு திரும்பினார்.

மருத்துவர்கள் சொன்ன ஒரு கருத்து வியக்க வைத்தது.

சிறுநீரக் கோளாறினால் பாதிக்கப்பட்ட உறவினர் குறித்தே சதா சிந்தனை செய்துகொண்டிருந்ததால் அந்தப் பிரச்சனை தனக்கும் வந்துவிட்டதாக மனோரீதியாக கருத ஆரம்பித்துவிட்டார். கடுமையான வெயில், போதுமான தண்ணீர் குடிக்காமை, மனச்சோர்வு இவற்றினால் சிறுநீர் வெளியாறாமல் தவித்திருக்கிறார். தனக்கு சிறுநீரகம் பழுதாகிவிட்டதாகவே பயந்ததால் மயக்கம் அடைந்திருக்கிறார். இது ஒரு விதமான மனோரீதியான பிரச்சனை. அந்த நினைவுகளில் இருந்து அவர் விடுபட்டாலே போதும் உடல்நலமாகிவிடும் என்றார்.

மற்றவர்கள் மேல் தொடர்ச்சியாகக் காட்டும் பரிதாபம்கூட நம் உடல்நிலை மற்றும் மனநிலையை பாதிக்கும்.

இப்படி சிம்பதியாக பரிதாபப்படுவதை விட்டு எம்பதியாக அவர்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்யலாம். உதவி என்பது பணமாகவோ, பொருளாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. மனோரீதியாக செய்யும் செயல்கள்கூட உதவிகள்தான். ஏதேனும் ஒருவிதத்தில் அவர்களின் மனோபலத்தை மேம்படுத்த நம்மால் உதவ முடிந்தால் நமக்கும் எதிர்மறை எண்ணங்கள் ஒட்டிக்கொள்ளாது.

இதையே திருக்குறளில் அழகாகச் சொல்லியுள்ளார் திருவள்ளுவர்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

தம்மைப் போன்று பிற உயிர்களையும் கருதி உதவுபவனே உண்மையாக உயிர் வாழ்பவனாவான். அப்படி  உதவாதவன்  இறந்தவர்களாகக் கருதப்படுவான்.

சிம்பதி நம்மையும், சம்மந்தப்பட்டவரையும் உணர்வு ரீதியாக எதிர்மறையாக்கும். மாறாக எம்பதி இருசாராரையும் நேர்மறை சிந்தனைகளால் மேம்படுத்தும். அது  பிரச்சனைகளை முழுமையாக தீர்க்காவிட்டாலும் வீரியத்தையாவது குறைக்க உதவும் OTP இது. முயற்சித்துத்தான் பாருங்களேன்.

சிம்பதியோ எம்பதியோ அளவோடு இருக்கட்டும்

நடக்கின்ற எல்லா நிகழ்வுகளுக்கும் நம்மால் பரிதாபப்பட்டுக்கொண்டும், உதவிக்கொண்டும் இருக்க முடியாது. சிலவற்றை அப்படியே கடந்துசெல்ல வேண்டிய சூழலிலும் வாழத்தான் வேண்டியுள்ளது.

உதாரணத்துக்கு சாலையில் ஒரு விபத்தை பார்க்கிறோம். சம்மந்தப்பட்டவர் இறந்துவிடுகிறார். அதைப் பார்க்கும் நமக்கு பரிதாபம் ஏற்படும். ஆனால் நினைவில் இருந்து அத்தனை சீக்கிரம் அந்த நிகழ்வு மறைந்துவிடாது. நம்மையே அந்த இடத்தில் பொருத்திப் பார்ப்போம். ஏற்கெனவே என்றோ நம் பைக் மீது சற்று உராசிச் சென்ற பஸ் நினைவுக்கு வரும். கொஞ்சம் தடுமாறி இருந்தால் நமக்கும் இதே கதிதானே என்ற பயமும், சொல்லணா சோகமும் அப்பிக்கொள்ளும்.

இந்த இடத்தில் சிம்பதியும், எம்பதியும் வேலைசெய்யாது. இரண்டும் ஒன்றாகி நம்மை உணர்வு ரீதியாக அலைகழிக்கும்.

இந்த நிகழ்வை அப்படியே மறந்து கடந்து செல்ல வேண்டியதுதான்.

புது செருப்பு வாங்கச் சென்றிருந்தேன். அளவு பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தேன். அங்கு பணியில் இருந்த சேல்ஸ்மேன், ‘செருப்புக்குள் நம் பாதம் அடங்கி சரியாகப் பொருந்துவதாக இருந்தால் செருப்பு நம்மை அழைத்துச் செல்லும். பாதத்துக்குப் பொருந்தாமல் செருப்பு பெரியதாக இருந்தால் செருப்பை நாம் சுமந்துகொண்டு செல்வதைப் போல இருக்கும்…’ என்று சொன்ன ஒரு தகவல் வாழ்க்கைக்கு எல்லா இடங்களிலும் பொருந்துவதாக இருந்தது.

உணர்வுகள் நம்மை உயிர்ப்புடன் வாழ வைக்க உதவும் ஒரு காரணி. சிம்பதியோ எம்பதியோ எந்த உணர்வாக இருந்தாலும் அது நம் கட்டுக்குள் இருக்க வேண்டும். அதைவிட்டு உணர்வுகளை நாம் சுமந்து சென்றால் நம்மால் இயல்புடன் வாழ இயலாது.

இந்தா பிடிங்க உங்களுக்கான OTP… உணர்வுகள் மிக நுண்ணியமானவை. அதை உணர்வதில்தான் எத்தனை நுணுக்கங்கள்.    

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 12
ஜூலை 2019

(Visited 175 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon