வாழ்க்கையின் OTP-14 (புதிய தலைமுறை பெண் – செப்டம்பர் 2019)

 

பொதுவாகவே மனிதர்களுக்கு உண்ண உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் அத்தியாவசியம்தான். ஆனால் இவை மட்டுமே மனிதனை நிறைவாக வாழ வைத்துவிடுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தன்னிறைவும், நமக்கான முக்கியத்துவமும், நம் செயல்களுக்கான அங்கீகாரமும் அவசியமாகிறது.

நாம் எப்படி இதையெல்லாம் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறோமோ அதை மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தவறக் கூடாது.

ஒரு சிலர் பிறரின் கருத்துக்களை ஏற்க முடியாவிட்டால் மிகவும் நாசூக்காக ‘அருமை… உங்கள் கருத்து நன்றாகத்தான் இருக்கிறது… ஆனால்…’ என்று முதலில் அவர்கள் கூறியதை பாராட்டிவிட்டு தன் கருத்தை முன்னிலைப்படுத்துவார்கள். மனிதர்களை இதமாகக் கையாளுவதற்கான யுக்தி இது.

நாம் சொல்ல நினைப்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசுவதும், பிறர் பேசுவதை பொறுமையாகவும் அமைதியாகவும் கேட்பதும் மனித உறவுகளை மேம்படுத்த உதவும் OTP.

காசா பணமா…. காது கொடுத்துத்தான் கேட்போமே!

புத்திசாலிகளாக இருப்பவர்களுக்கெல்லாம் பிரச்சனைகளே இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுக்கும் சில விஷயங்களில் குழப்பம் உண்டாகும். அப்படி குழப்பம் ஏற்படும்போது அவர்களும் அதை யாரிடமாவது சொல்லத் துடிப்பார்கள்.

சமீபத்தில் ஓர் ஆங்கிலப் புத்தகம் படித்தேன்.

ஒரு மனநல மருத்துவருக்கு ஒரு பெண்மணி போன் செய்து தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொல்லி அழுகிறாள். பதறிப்போன மருத்துவர் ‘அழாதீர்கள்… ஏன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறீர்கள்’ என கேட்க, அந்தப் பெண்மணி அரைமணி நேரம் மூச்சு முட்ட ஏதேதோ காரணங்களைச் சொல்கிறார்.

‘எதுவானாலும் நாளை முடிவெடுக்கலாம். இப்போது தூங்குங்கள்’ எனச் சொல்லி சமாதானப்படுத்துகிறார் மருத்துவர்.

அடுத்த நாள் மருத்துவர் அந்தப் பெண்மணிக்குப் போன் செய்து நலம் விசாரிக்கிறார்.  ‘தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன் டாக்டர் ரொம்ப நன்றி’ என்று அந்தப் பெண்மணி சொல்ல மருத்துவருக்கோ ஆச்சர்யம். நான் சொன்ன எந்த விஷயம் உங்கள் மனதை மாற்றியது என கேட்டார்.

‘டாக்டர்… நீங்கள் சொன்ன எதுவுமே எனக்கு ஆறுதலாக இல்லை…. இதுவரை நான் சொல்வதை ஐந்து நிமிடம் கூட யாரும் காதுகொடுத்துக் கேட்டதே இல்லை. நீங்கள்தான் நான் சொல்வதை பொறுமையாக கேட்டீர்கள். அதனால்தான் என் மனம் மாறியது’ என்றார் அந்தப் பெண்மணி.

இன்று பலரது பிரச்சனைகளின் தீவிரத்துக்கு மிக முக்கியக் காரணம் அவர்கள் புலம்பித்தள்ள நம்பகமான மனிதர்கள் இல்லாமையே.

கடவுளிடம் நாம் மனதார பிராத்தனை செய்துகொள்வதன் பின்னணியிலும் ஓர் உளவியல் உள்ளது.

கண்ணனின்  பக்தர்கள் அனைவரும்  தங்கள் பிரச்சனைகளை கண்ணனிடம் மனதாரச் சொல்லி தீர்வு கிடைக்கப்பெற்று வந்தார்கள்.  ‘நீ சிரிப்பதைத் தவிர எதுவுமே சொல்வதில்லை. எல்லோருக்கும் எப்படி தீர்வு கிடைக்கிறது?’ என்று பிரம்மன் ஆச்சர்யமாகக் கேட்கிறார்.

அப்போது கண்ணன் பிரம்மனை பூலோகத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

எல்லா வசதியும் இருந்தும் மன நிம்மதி இல்லாத  ஒருவனிடம் கண்ணன், ‘உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்று கேட்கிறார்.

அவன் மடைதிறந்த வெள்ளம் போல் தன்  குழப்பங்களைக் கொட்டித் தீர்த்தான்.

கண்ணன் அமைதியாக கேட்டு கொண்டிருந்தார்.

அந்தக் குழப்பவாதியே தன் பிரச்சனைகளுக்குத் தான் செய்ய போகும் தீர்வுகளைப் பற்றியும், சாதக  பாதங்களையும் தெள்ளத்தெளிவாக விளக்கினான்.

அவன் சொல்லி முடித்ததும் அவனது  மனதில் தெளிவு பிறந்தது.  மகிழ்ச்சியாக விடைபெற்றான்.

இப்போது கண்ணன், ‘பார்த்தீர்களா பிரம்மா, அவன் புத்திசாலி. அவன் பிரச்னையை அவனே தீர்த்துக்கொள்ளும் அளவுக்கு தீர்வுகளையும் சாதக பாதகங்களையும் தெரிந்தும் வைத்திருந்தான். அதை செயல்படுத்தும் போது தடுமாற்றம் உண்டாகுமோ என்ற கவலையாலேயே அவன் குழப்பத்தில் இருந்தான். நான் அவன் சொல்வதை பொறுமையாக காதுகொடுத்து கேட்டேன். தீர்வை அவனே கண்டு கொண்டான்’  என்றார்.

கடவுளிடம் நாம் மனதார வேண்டிக்கொண்டு நம் பணிகளில் கவனம் செலுத்தும்போது நம்பகமானவரிடம் நம் பிரச்சனைகளை சொல்லி விட்டோம் என்ற நிம்மதியினாலேயே தெளிவான மனநிலை உருவாகி நம் பிரச்சனைகளுக்கான தீர்வு தானாகவே நம் அறிவுக்குப் புலப்படும்.

ஆகவே, பிரச்சனைகளை நம்மிடம் சொல்வோருக்குத் தேவை அறிவுரையோ ஆறுதலோ அல்ல. அவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்க உதவும் நம் காதுகளே.

காசா பணமா…. காது கொடுத்துத்தான் கேட்போமே!

பிறரை நாம் மதிப்பதை உணரச் செய்தல்

ஆந்திர அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கும் நடிகை ரோஜாவும் அவர் கணவர் செல்வமணியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததே.

அவர்களின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு ஒரு இயக்குனர், ‘வாழ்க்கையில் எங்கு வேண்டுமானாலும் ஜெயித்துக்கொள்ளுங்கள்… ஆனால் மனைவிடம் மட்டும் விட்டுக்கொடுத்தாவது தோற்றுவிடுங்கள்… குறைந்தபட்சம் மனைவிக்கு அவர் ஜெயித்து விடுவதாக ஒரு உணர்வையாவதுக் கொடுத்துவிடுங்கள்… வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்…’ என்று சொன்ன அறிவுரையை ஒரு நிகழ்ச்சியில் அவர்களே பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த லாஜிக் மணவாழ்க்கைக்கு மட்டும் அல்ல… வியாபாரத்தில், நிர்வாகத்தில், அரசியலில் இப்படி எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.

 ‘How to Influence People’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு மருத்துவர் இதுபோன்ற ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ‘Let the other person feel let the idea is his or hers’ என்பதே அந்த அனுபவம் சொல்லும் பாடம்.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ப்ரூக்லின் என்ற பகுதியில் இயங்கிவரும் ஒரு மாபெரும் மருத்துவமனைக்கு தன்னுடைய எக்ஸ்-ரே இயந்திரத்தை விற்பனை செய்ய ஒரு எக்ஸ்-ரே இயந்திர உற்பத்தியாளர் இதே லாஜிக்கைப் பயன்படுத்தினார்.

பொதுவாக உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை உயர்வாகச் சொல்லியே விற்பனை செய்வார்கள். ஆனால் இவர் அந்த மருத்துவமனையின் எக்ஸ்-ரே துறையில் பணிபுரியும் டாக்டருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

‘நாங்கள் புதுமாதிரியான எக்ஸ்-ரே இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம். ஆனால் அது எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதாக இல்லை. அதன் வடிவமைப்பிலும் செயல்பாட்டிலும் ஏற்றம் செய்ய நினைக்கிறோம். அதனால் தங்கள் நேரத்தை ஒதுக்கி அந்த இயந்திரத்தைப் பார்வையிட்டு அதை எப்படி உங்கள் துறைக்குப் பயன்படும் விதத்தில் மேம்படுத்த முடியும் என்று சொல்ல இயலுமா? நீங்கள் இந்த உதவியை செய்தால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுக்கு வசதியான நேரத்தைச் சொன்னால் அந்த நேரத்துக்கு காரை அனுப்பி வைக்கிறோம்.’

இதுதான் அந்தக் கடிதத்தின் சாராம்சம்.

அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் அந்த டாக்டருக்கு ஆச்சர்யம். இதற்கு முன்னர் எந்த எக்ஸ்-ரே உற்பத்தியாளரும் இதுபோல அவருடைய ஆலோசனைகளை கேட்டதில்லை என்பதால் அவரது கருத்துக்களைக் கேட்டது அவருக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அடுத்த ஒருசில நாட்கள் மாலை நேரத்தில் தனக்கிருந்த அத்தனை வேலைகளையும் ஒதுக்கிவிட்டு அந்த புதுவகை எக்ஸ்-ரே இயந்திரத்தைப் பார்வையிடச் சென்று பகுப்பாய்வும் செய்தார்.

அந்த இயந்திரத்தை யாரும் வலுகட்டாயமாக தன்னிடம் விற்கவில்லை என்றும், தன் மருத்துவமனைக்குப் பொருத்தமாக இருக்கும் அந்த எக்ஸ்-ரே இயந்திரத்தை தானே தன்னுடைய ஐடியாவின்படி வாங்குவதைப் போன்ற ஓர் அழகான உணர்வு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவர்களின் கருத்துக்களுக்கு நாம் மதிப்பளிப்பதாக உணர வைத்தாலே போதும். அதுவே  நம்முடைய  செயல்பாடுகளுக்குத் தேவையான அத்தனை ஒத்துழைப்பும் கிடைப்பதற்கான OTP.

இதைத்தான் நானும் என் நிர்வாகத்தில் செயல்படுத்தி வருகிறேன்.

தன்னிறைவும், முக்கியத்துவமும்

நான்கு வயது சிறுமி சாப்பிடுவதற்கு எப்பவுமே அடம் செய்வாள். அவள் பெற்றோர் சாம தான பேத தண்டம் முறையில் எத்தனை முயற்சித்தும் கூச்சலும், அழுகையும் இல்லாமல் தன் மகளுக்கு சாப்பாடு கொடுக்க முடிவதில்லை.

ஒருநாள் சிறுமியின் அம்மா ஒரு ஐடியா செய்து உயரமான ஒரு சேரை சமையல் அறை மேடைக்கு அருகே போட்டார். ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும் எடுத்து வைத்தார். தன் பெண்ணிடம் கஞ்சி மாவைக் கொடுத்து அதில் இரண்டு ஸ்பூன் போடச் சென்னார்.

ஒரு ஸ்பூன் கொடுத்து கலக்கச் சொன்ன அம்மாவை ஆசையுடன் பார்த்துக்கொண்டே கலக்கினாள்.

அப்போது அங்கு வந்த அவள் அப்பாவிடம் ‘அப்பா நானே இன்னிக்கு எனக்கான ஃபுட் பிரிப்பேர் செய்யறேன்…’ என முக மலர்ச்சியுடன் சொன்னாள்.

பாத்திரத்தை கேஸில் வைத்து தன் பெண்ணுக்கு அவ்வப்பொழுது கலக்கச் சொல்லிக்கொடுத்தார் அம்மா.

சில நிமிடங்களில் சூடான வாசனையான கஞ்சி ரெடியானது.

தானே தயாரித்த கஞ்சியை தானே ஆற்ற வேண்டும் என அடம்பிடித்து டவரா டம்ப்ளரில் ஊற்றி ஆற்றினாள். கீழே கொஞ்சம் சிதறியதுதான். ஆனால் அவள் பெற்றோர் எதுவும் சொல்லாமல் ரசனையுடன் மகளை கவனித்தனர்.

சில நொடிகளில் ஆறிய கஞ்சியை கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூனால் எடுத்து சாப்பிட ஆரம்பித்த மகளை ஆச்சர்யமாக பார்த்தனர் அவள் பெற்றோர்.

எப்போதும் சாப்பிடும் கஞ்சிதான். இன்றுமட்டும் எப்படி இப்படி கொண்டாட்டமாக சாப்பிடுகிறாள் அந்தச் சிறுமி?

அவள் இன்முகத்துடன் சாப்பிடுவதற்கு இரண்டு விஷயங்கள் உதவியுள்ளன.

ஒன்று தானே ஒரு செயலை செய்து முடித்த திருப்தியும் தன்னிறைவும். இரண்டாவது தனக்கான முக்கியத்துவம். இவை இரண்டும் ஒவ்வொரு மனிதனையும் உயிர்ப்பாக இருக்கச் செய்ய உதவும் OTP.

நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது எனக்கும் என் தங்கை தம்பிக்கும் விடுமுறை தினங்களில் சண்டைவரும்.

எதற்காகத் தெரியுமா?

யார் கிரைண்டரில் இட்லிக்கும், மிக்ஸியில் சட்னிக்கும் அரைப்பது என?

இப்படி மாவு அரைப்பதற்கும், அம்மா வடாம் பிழியும்போது கூடவே சென்று பிழிவதற்கும், அப்பாவின் சைக்கிளை துடைப்பதற்கும், அப்பா செய்யும் அத்தனை வேலைகளையும் நாங்கள் செய்வதற்கும் போட்டிப் போடுவோம்.

வேலை செய்வதற்கு எதனால் போட்டிப் போடுகிறோம்?

சிறு வயதில் பெரிய மனிதர்கள்போன்ற பாவனையுடன் பெரியவர்கள் செய்யும் வேலைகளை செய்யும்போது கிடைக்கின்ற ஆத்மதிருப்தி குழந்தைகளிடம் அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் ஒரு புத்துணர்வையும் மகிழ்ச்சியையும் பூரணத்துவத்தையும் கொடுக்கும். அந்த உணர்வே வளர வளர் பொறுப்பையும் தன்னம்பிக்கையையும் அவர்களுக்குள் ஊட்டும்.

குழந்தைகளுடன் பேசிக்கொண்டே உங்கள் வேலைகளை செய்தால்போதும், நீங்கள் எதுவுமே கற்றுக்கொடுக்காமலேயே அந்த வேலைகளை அவர்கள் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் தானாகவே அவர்களுக்குள் ஏற்படும்.

குழந்தைகளுடன் நிறைய பேசினாலே போதும். உங்களைப் பார்த்து தானாகவே தங்களை வடிவமைத்துக்கொள்வார்கள்.

இந்தா பிடிங்க உங்களுக்கான OTP…

நம்மை எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் உண்டா? நாம் எதை மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறோமோ அதையே மற்றவர்களுக்கு நாம் கொடுப்பது மட்டுமே அதற்கான ஒரே வழி.

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 14
செப்டம்பர்  2019

(Visited 87 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari