ஹலோ With காம்கேர் -23: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 23
ஜனவரி 23, 2020

கேள்வி: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா?

இரண்டு தினங்களுக்கு முன்னர் கடலூரில் இருந்து இரண்டு கண்களும் தெரியாத மாற்றுத்திறனாளி அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் போன் செய்திருந்தார்.  பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்களுக்கான நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக என்னை பங்கேற்க அழைப்பு விடுத்தார். அவர்களுக்கு மனோரீதியாக ஆலோசனை வழங்கி பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களுக்கு வழிகாட்டி வருவதும், வருடா வருடம்  ‘ஸ்ரீபத்மகிருஷ் விருது’ கொடுத்து வருவதும் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

ஆறு வருடங்களுக்கு முன்னரே பார்வையற்றவர்கள் ஸ்க்ரைப் உதவியின்றி கம்ப்யூட்டரில் தாங்களாகவே டைப் செய்து தேர்வு எழுத உதவும் ‘விசியோ எக்ஸாம்’ என்ற சாஃப்ட்வேரை உருவாக்கியிருக்கிறோம்.

சென்னை பிரசிடென்ஸி கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளிலும் தேர்வெழுத பயிற்சி கொடுத்துள்ளோம். சென்னை ராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த பள்ளிகளில் அதுகுறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தியுள்ளோம்.

நான் வழக்கம்போல பேசுபவரின் பெயர், வேலை, குடும்பம் போன்றவற்றை விசாரித்தேன். பெயர்  ‘சபாஷ்’ என சொன்னதும் ‘சுபாஷா’ என கேட்டேன். ‘இல்லை மேடம் சபாஷ்’ என்றார்.

பெயர் காரணத்தை கேட்காமல் விட முடியுமா?

விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அம்மாவின் பெயர்(‘ச’-ந்திரா), அப்பாவின் பெயர்(‘பா’-ண்டியன்) இருவரின் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து ‘சபா’ (சபாஷ் அல்ல சபா) என பெயர் வைத்துள்ளனர்.

சபா எப்படி சபாஷ் ஆனார்?

பார்வையுள்ளவர்களுடனேயே சேர்ந்து படிக்கும் ஒரு பள்ளியில் சேர்த்துள்ளனர். ஆனால், அந்த பள்ளியில் பார்வைத்திறனற்றவர்களுக்காக சிறப்பு லேப் இருந்ததாம். அங்கு பார்வைத்திறனற்றவர்களுக்கு உதவும் வகையில் பிரைலி, டேப் ரெகார்டரில் ஒலிபதிவு செய்யப்பட்ட பாடங்கள் என சில வசதிகளை செய்து வைத்திருப்பார்களாம். சிறப்பு ஆசிரியர்களும் இருப்பார்கள்.

இவர்களுக்கு வகுப்பில் ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அந்த லேபுக்கு சென்று அவர்களுக்கான சிறப்பு ஆசிரியர்களிடம்தான் கேட்டு தெளிவு செய்துகொள்ள வேண்டுமாம். இப்படியே இவர் பள்ளிப் படிப்பை முடித்து பி.ஏ, எம்.ஏ, பி.எட், எம்.ஃபில் என கல்வித்தகுதியை மேம்படுத்திக்கொண்டு ஒரு அரசுப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். மனைவி தனியார் பள்ளியில். ஒரே மகள்.

தான் உயர்ந்ததுடன் தன் உடன்பிறந்த இரண்டு தம்பிகளையும் படிக்க வைத்து திருமணம் செய்து வைத்து சிங்கப்பூருக்கு எலக்ட்ரீஷியனாக பணிக்கு அனுப்பி உள்ளார். அப்பா இறந்துவிட்டார். அம்மா இவருடன் வசிக்கிறார்.

சரி சபாஷ் என்ற பெயர் எப்படி வந்தது என்று சொல்லுங்கள் என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.

இவர் மூன்றாவது படித்துக்கொண்டிருந்தபோது இவர் பள்ளி தலைமை ஆசிரியர் இவரது புத்திசாலித்தனத்தைப் பார்த்து சபாஷ் ‘சபா’. இனி உன் பெயர் சபாஷ் என சொல்லவே, அன்றில் இருந்து இவர் சபாஷ் ஆகிவிட்டார்.

சிலர் அவர்களது திறமைகளினால் ‘அட’ போட வைப்பார்கள். இவர் சபாஷ் போட வைத்துள்ளார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு சுவாரஸ்யம் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை துளிர்விட செய்துகொண்டுதான் இருக்கிறது.

சபாஷ் ‘சபா’!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 41 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari