ஹலோ With காம்கேர் -78:  Work From Home – திட்டத்தை நான் அறிமுகப்படுத்தியது எப்போது தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 78
March 18, 2020

கேள்வி:  Work From Home – திட்டத்தை நான் அறிமுகப்படுத்தியது எப்போது தெரியுமா?

நேற்றில் இருந்து நானும் எங்கள் நிறுவனத்துக்கு Work From Home அறிவித்துவிட்டேன்.

சாஃப்ட்வேர் துறையில் இன்டர்நெட் வளர்ச்சிக்குப் பிறகு உலகமயமாதல் பெருகிய பிறகுதான் Work From Home பரவலாக்கப்பட்டது. ஆனால் எங்கள் நிறுவனத்தில் நம் நாட்டில் இன்டர்நெட் நுழைவதற்கு முன்பே Work from Home திட்டத்தை நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அநேகமாக முதன் முதலில் தொழில்நுட்ப உலகில் Work From Home திட்டத்தை அறிமுகப்படுத்தியது எங்கள் நிறுவனமாகத்தான் இருக்கும். அதற்கான அவசியமும் சூழலும் எப்படி உருவானது என்று சொல்கிறேன்.

1992 – களில் நம் நாட்டில் கம்ப்யூட்டர் அறிமுகம் என்றளவிலேயே இருந்தது. கம்ப்யூட்டர் சயின்ஸை பாடமாக எடுத்துப் படித்தவர்களும் குறைவு. எனவே வேலைக்கு ஆட்களை எடுப்பதும் பெரும் சவாலாகவே இருந்தது.

எங்கள் நிறுவனம் சாஃப்ட்வேர்கள் தயாரிக்கும் ஐடி நிறுவனம். உதாரணத்துக்கு அடோப் நிறுவனம் போட்டோஷாப், ப்ரீமியர் போன்ற சாஃப்ட்வேர்களை தயாரிக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ், எம்.எஸ்.வேர்ட், எம்.எஸ்.எக்ஸல், எம்.எஸ்.பவர்பாயிண்ட் போன்ற சாஃப்ட்வேர்களை தயாரிக்கிறது. அதுபோல எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் எங்கள் பிராண்டில் சாஃப்ட்வேர்களை உருவாக்கி வருகிறோம். அதில் அனிமேஷன் ஆப் என பல துறைகள் இயங்குகின்றன.

ஆரம்ப காலங்களில் வங்கிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மளிகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் என எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்து நாங்கள் அசெம்பிள் செய்யும் கம்ப்யூட்டரை லாபம் துளியும் இன்றி அடக்க விலைக்கே அவர்களுக்குக் கொடுத்து அவர்களுக்காக நாங்கள் தயாரிக்கும் சாஃட்வேரை இலவசமாக இன்ஸ்டால் செய்து தமிழகமெங்கும் பரவலாக கம்ப்யூட்டர் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

அந்த காலகட்டத்தில் வங்கிகளின் பயன்பாட்டுக்காக நாங்கள் தயாரித்த சாஃப்ட்வேர்கள் மிகப் பிரபலம். ஆனால் அதில் தகவல்களை டைப் செய்வதுதான் பெரும் வேலை. அப்போது வங்கிகள் முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கப்படவில்லை. எனவே அன்றாட டேட்டா என்ட்ரி பணிகளையும் எங்கள் நிறுவனத்திலேயே செய்து தருமாறு கேட்டுக்கொண்டதால் அதையும் செய்து வந்தோம்.

அந்த வேலையை செய்வதற்கு சாஃப்ட்வேர் பற்றி எல்லாம் தெரிந்திருக்கத் தேவையில்லை. கம்ப்யூட்டரை ஆன் செய்யவும், ஷட் டவுன் செய்யவும், வங்கிகளின் பயன்பாட்டுக்காக நாங்கள் தயாரித்து இன்ஸ்டால் செய்திருக்கும் சாஃப்ட்வேரை இயக்கவும் செய்திருந்தால் போதும். விண்ணப்படிவங்களை பார்த்து தவறில்லாமல் டேட்டாவை டைப் செய்ய வேண்டும்.

அந்த வேலையை பெண்கள் பொறுமையாக செய்வார்கள் என்பதால் அவர்களையே பணிக்கு எடுத்து சொல்லிக்கொடுத்து ஓரிரு மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை என்று காரணம் சொல்லி வேலையில் இருந்து நின்றுவிடுவார்கள். மீண்டும் அதற்கு ஆட்கள் எடுத்து சொல்லிக்கொடுத்து மூச்சு வாங்கும்.

மழை வெயில் வெள்ளம் புயல் எதுவாக இருந்தாலும் தினமும் வங்கிகளின் தகவல்களை தவறில்லாமல் டைப் செய்து சரி பார்த்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இன்டர்நெட் எல்லாம் அப்போது நம் நாட்டில் அடி எடுத்து வைக்கவே இல்லை. நேரடியாக சென்றுதான் கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில் நாள் தவறாமல் தகவல்களை டைப் செய்யும் பணி நடந்தே ஆக வேண்டும். புதிது புதிதாக ஆட்களை எடுப்பது சிரமமான செயலாக இருந்ததால், ஓரிரு மாதங்கள் பயிற்சி எடுத்திருக்கும் பணியாளர்கள் வீட்டில் ஒரு கம்ப்யூட்டரை இன்ஸ்டால் செய்து அவர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தினேன். அவர்கள் வீட்டில் இருந்தே தகவல்களை டைப் செய்வார்கள். அந்தத் தகவல்களை சிடியில் காப்பி செய்து எடுத்து வந்து நாங்கள் தயாரித்திருக்கும் குவாலிட்டி கண்ட்ரோல் சாஃப்ட்வேரில் ப்ரூஃப் பார்த்து வங்கிகளில் அன்றன்றே கொடுத்துவிடுவோம்.

அப்படி எங்களால் வீட்டில் இருந்தே பணி செய்ய ஆரம்பித்த பெண்களில் பலரை சுயதொழில் முனைவோராகவும் மாற்றியிருக்கிறேன்.

ஆரம்ப காலத்தில் தொழில்துறையில் நான் அறிமுகப்படுத்திய இந்த திட்டம் கொடுத்த அனுபவம் பின்னாளில் எனக்கு பலவகையில் உதவி செய்தது. நான் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் வருடத்தின் 365 நாட்களும் 24 * 7 நேரமும் இருந்த இடத்தில் இருந்தே என் நிறுவனத்தை இயக்குவது, பணியாளர்களுடன் தொடர்புகொள்வது, சாஃப்ட்வேர்களையும் பிற படைப்புகளையும் உருவாக்குவது என அத்தனையும் என் வசமாவதற்கு தொழில்நுட்பப் புரட்சியும் கைகொடுத்தது.

உலகளாவிய தொழில்நுட்பப் புரட்சியில் எங்கள் காம்கேரின் பங்களிப்பு அதிகம் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையே!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 16 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari