ஹலோ With காம்கேர் -90:  கோப்பையாகட்டும் வாழ்க்கையாகட்டும் எதைக்கொண்டு அதை நிரப்புவது என யார் முடிவெடுப்பது?

ஹலோ with காம்கேர் – 90
March 30, 2020

கேள்வி: கோப்பையாகட்டும் வாழ்க்கையாகட்டும் எதைக்கொண்டு அதை நிரப்புவது என யார் முடிவெடுப்பது?

ஒரு விடுமுறை தினம். ஒரு வீடு. ஒரு தாய். ஒரு மகன்.

அவருடைய கணவர் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது அவர் மகனுக்கு 3 வயதிருக்கும். தன் மகனுக்கு அந்த துயரம் தெரியாத அளவுக்கு அப்பாவாக நடந்துகொள்ள வேண்டிய நேரத்தில் அப்பாவாகவும் அம்மாவாக நடந்துகொள்ள வேண்டிய நேரத்தில் அம்மாவாகவும் நடந்துகொள்வார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் மகனுக்கு நல்ல விஷயங்களையும், நம் இதிகாசங்களையும் புராணங்களையும் எடுத்துச் சொல்லி பண்புடன் வளர்த்து வந்தார்.

அன்று விடுமுறை தினம் என்பதால் விடியற்காலையிலேயே  தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டாலும் படுக்கையைவிட்டு எழுந்திருக்காமல் அம்மாவும் மகனும் பேசிக்கொண்டிருந்தனர்.

‘நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்தவரை தொடரவிடாமல் ஒரு நொடிகூட தாமதிக்காமல் அவர் மகன், ‘அப்போ அப்பாகிட்ட அன்பு இல்லையாம்மா அதனால்தான் நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டாரா’ என்று கேட்டான்.

அம்மாவுக்கு  என்ன சொல்வதென்று தெரியவில்லை.

இந்த உரையாடலில் அந்த பத்து வயது மகன் கேட்ட கேள்வியில் வாழ்க்கை தத்துவமே அடங்கியிருப்பதைப் பாருங்கள்.

அவரவர் மனதில் என்ன இருக்கிறதோ அதுதானே வெளிப்படும். மனதில் அன்பிருந்தால் அன்பு வெளிப்படும். போலவே வெறுப்பு இருந்தால் வெறுப்பு, கோபம் இருந்தால், அழுக்கிருந்தால் அழுக்கு. இப்படி உள்ளுக்குள் இருப்பதுதானே வெளியே வரும்.

‘It is not  my cup of tea’ என்று தனக்கு ஒரு விஷயத்தில் விருப்பம் இல்லாததை அல்லது தனக்குத் தெரியாத விஷயத்தைக் குறிப்பிட பயன்படுத்துவார்கள். உதாரணத்துக்கு பாடவே தெரியாத ஒருவரிடம் ‘உங்களுக்கு பாடத் தெரியுமா? என யாரேனும் கேட்டால் அவர் ‘It is not  my cup of tea’ என்பார்.

நம்முடைய மனதை ஒரு கோப்பையைப் போல கருதலாம். அதில் நாம் எதை நிரப்புகிறோமோ அதை ஒத்து அதன் தன்மை மாறுவதைக் காணலாம்.

ஒரு கோப்பையில் தண்ணீரை நிரப்பினால் A cup of Water, ஜூஸை நிரப்பினால் A Cup of Juice, டீயை நிரப்பினால் A Cup of Tea இப்படி கோப்பை ஒன்றுதான். அதில் நிரப்பப்படும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப அதன் பெயர் மாறுகிறதுதானே.

இயற்கை மனிதனை படைக்கும்போது பொதுவான குணாதிசயங்களுடன்தான் படைத்தது. ஆனால் அவரவர் பழக்க வழக்கங்கள், வளரும் சூழல், கல்வி, கேள்வி, வளர்ப்பு, நட்பு இவற்றால் ஒவ்வொருவரும் தங்கள் கோப்பையை நிரப்பிக்கொள்கிறார்கள். இயற்கை அந்த வாய்ப்பையும் மனிதனிடமே விட்டுவிட்டது. யாரையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை.

அவரவர் கோப்பை, அவரவர் விருப்பம். என்ன வேண்டுமோ அதை நிரப்பிக்கொள்ளுங்கள் என்ற கட்டற்ற சுதந்திரத்தையும் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டது.

நம்முடைய கோப்பையை நம் விருப்பத்துக்கு ஏற்ப நிரப்பாமல் மற்றவர்கள் பார்வையில் பிரமாதமாக தெரிய வேண்டும் என்பதால் தங்களுக்கு விருப்பமில்லாதவற்றை அதனுள் நிரப்பிக்கொண்டு அதை தூக்கவும் முடியாமல், இறக்கவும் முடியாமல், ஒதுக்கவும் முடியாமல் திண்டாடும் மனிதர்கள்தான் நம்மைச் சுற்றி நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

கோப்பையில் நமக்கு விருப்பமானதை நிரப்பினால் எடுத்துப் பருக ஆனந்தமாக இருக்கும். பிறருக்கு விருப்பமானதை நிரப்பினால் அதை தூக்கக்கூட முடியாத அளவுக்கு பாரமாக இருக்கும்.  தட்டுத்தடுமாறி கோப்பையினுள் இருப்பது சிதறுவது ஒன்றுதான் நடக்கும்.

வாழ்க்கையாகட்டும் கோப்பையாகட்டும் அதில் எதை நிரப்ப வேண்டும் என்பதை நாம் முடிவெடுப்போமே. முன்பே நிரப்பி இருப்பதை கீழே கொட்டிவிட்டுக்கூட நமக்கு விருப்பமானதை நிரப்பி வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கலாம்.

இதுவரை இல்லாவிட்டால் இனியாவது!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 10 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari